அகண்ட வங்கதேசத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக மம்தா பானர்ஜி பாடுபட்டு வருகிறார் என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 23-ம் தேதி, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவகத்தில் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 124-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர் ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தனர்.
’ஜெய் ஸ்ரீராம்’ முழக்கம்; பேச்சை தவிர்த்த மம்தா: பிரதமர் முன்பாக நடந்த சம்பவத்திற்கு எழும் கண்டனம்
அந்த நிகழ்ச்சியில் பேசுவதற்கு மம்தா பானர்ஜி அழைக்கப்பட்டபோது, கூட்டத்தில் ஒரு பகுதியினர், ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கம் எழுப்பினர்.
அதைத் தொடர்ந்து பேசிய மம்தா பானர்ஜி, “என்னை இங்கு அழைத்த பின்னர் என்னை அவமதிக்க கூடாது. இது ஒரு அரசியல் கட்சியின் நிகழ்ச்சி இல்லை. அரசு நிகழ்ச்சிக்கு என்று ஒரு கண்ணியம் இருக்கிறது. நீங்கள் ஒருவரை அரசு நிகழ்ச்சிக்கு அழைத்தால், நீங்கள் அவர்களை அவமதிக்கக் கூடாது.” என்று கண்டனம் தெரிவித்தார்.
மேலும், “நான் எதையும் பேச விரும்பவில்லை. நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரதமருக்கும், மத்திய அமைச்சருக்கும் என் நன்றிகள். ஜெய்ஹிந்த், ஜெய் பெங்கால்.” என்று கூறி பேச்சை முடித்துக்கொண்டார்.
இந்நிலையில், இதுகுறித்து நேற்று (ஜனவரி 28), மாநிலங்களவை உறுப்பினரும் மேற்கு வங்க பாஜக மாநில தலைவருமான திலீப் கோஷ் தனது அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ளார்.
திரிணாமூல் காங்கிரஸை சேர்ந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் படம் இணைக்கப்படுள்ள அப்பதிவில், “இஸ்லாமிய வங்கதேசத்தின் தேசியமுழக்கமான ‘ஜெய் பங்களா’ முழக்கத்தை மம்தா பானர்ஜி தனது கூட்டங்களில் முழுங்குகிறார். அகண்ட வங்கதேசத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் பாடுபட்டு வருகிறார்.” என்று கூறியுள்ளார்.
மேலும், திலீப் கோஷ் அப்பதிவுடன், கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்காக வங்கதேச நடிகர் ஃபிர்தாஸ் பிரச்சாரம் செய்தபோது எடுக்கப்பட்ட 2 புகைப்படங்களையும், வடக்கு கொல்கத்தாவில் திரிணமூல் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்த துர்கா பூஜையை வங்கதேச கிரிக்கெட் வீரர் ஒருவர் தொடங்கி வைக்கும் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.
திலீப் கோஷின் கருத்தை கடுமையாக விமர்சித்துள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சௌகதா ராய், “பதிலளிக்கக் கூட தகுதியற்றவர் அவர். பாஜக தன்னுடைய பிளவுபடுத்தும் வகுப்புவாத அரசியலை மேற்கு வங்காளத்தில் செய்ய முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.” என்று கூறியுள்ளார்.
‘பாஜக தோல்வியுற்றால், ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் போலதான் செய்வார்கள்’ – மம்தா பானர்ஜி
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில், ” திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினர்களை, தங்கள் கட்சியில் சேர்ப்பதன் மூலம் பாஜக தனது எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்கிறது என்பதை திலீப் கோஷ் மறந்துவிட்டார். இது காவி கட்சி எப்படி திவாலாகிக்கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது.” என்று விமர்சித்துள்ளார்.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.