Aran Sei

‘பிரதமர் கூறுவது உண்மைக்கு மாறானது’ – ஜி.ராமகிருஷ்ணன்

Image Credits: BBC

கொரோனா பேரிடர் காலகட்டத்திலும் தொழில் தொடங்கும் வாய்ப்புகளும் வேலை வாய்ப்புகளும் உள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

குஜராத், பண்டிட் தீன்தயாள் பெட்ரோலியப் பல்கலைக்கழகத்தின் (பிடிபியு) எட்டாவது பட்டமேற்பு விழா இன்று நடைபெற்றுள்ளது. இதில், காணொலி உரையாடுதல் வழியாகப் பிரதமர் மோடி கலந்துகொண்டுள்ளார்.

விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, “தொற்று காரணமாக, உலகின் எரிசக்தி துறையில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் நேரத்தில் நீங்கள் தொழிற்துறையில் நுழைகிறீர்கள். எனவே, தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் பல வளர்ச்சி ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளன” என்று கூறியுள்ளார்.

மாணவர்களை வாழ்த்திய மோடி, “உங்கள் திறன், நம்பிக்கை மற்றும் தொழில்முறை ஆகியவற்றின் மூலம் நீங்கள் பேரிடர்ச் சூழ்நிலையிலிருந்து வெளியேவந்து, ஆத்மனிர்பர் பாரத் (தற்சார்பு இந்தியா) திட்டத்துக்கு உதவி செய்வீர்கள் எனும் நம்பிக்கை எனக்கு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

“இன்று, நாட்டின் கார்பன் வாயு வெளியீட்டை 30-35% குறைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் நாம் முன்னேறி வருகிறோம். இந்தத் தசாப்தத்தின் எரிசக்தி தேவைகளுக்கு, இயற்கை எரிவாயு பயன்பாட்டை 4 மடங்கு அதிகரிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன” என்றும் அவர் கூறியுள்ளார்.

“உலகமே பேரிடரைச் சந்திக்கும் சூழலில் பட்டம் பெறுவது சாதாரண விஷயம் இல்லை. இருப்பினும், உங்கள் திறன் இந்தச் சவால்களை விட மிகப் பெரியது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அரண்செய்யுடன் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், “இது மிகவும் தவறான தகவல். உண்மைக்கு மாறானது. கொரோனா பேரிடருக்கு முன்னதாகவே இந்தியப் பொருளாதாரம் ஒரு தேக்கமடைந்த நிலையில்தான் இருந்தது. கொரோனா பொதுமுடக்கத்தின் போது அது மேலும் மோசமடைந்து விட்டது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) -23.9% ஆக இருந்தது” என்று கூறினார்.

“அடுத்த மார்ச் மாதம் வரை ஜிடிபி -10% ஆகத்தான் இருக்கும் என்று உலக வங்கியும் ரிசர்வ் வங்கியும் கூறுகின்றன. இவை வெறும் எண்கள் மட்டுமல்ல. இதன் விளைவாக, இந்தியா உட்பட பல நாடுகளில் பல தொழிலாளர்கள் வேலைகளை இழந்துள்ளனர். நிலைமை இவ்வாறாக இருக்கும்போது வேலைவாய்ப்பு உண்டு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என அவர் தெரிவித்தார்.

“மத்திய அரசின் ஊக்கத்தொகை வழங்கும் திட்டங்கள் எதுவும் மக்களைச் சென்று சேரவில்லை. வாங்கும் திறனை அதிகப்படுத்தி அதன் மூலம் உற்பத்தியைப் பெருக்கவில்லை. மீண்டும் மீண்டும் கார்ப்பொரேட்டுகளுக்கேதான் நிதியை வழங்குகிறார்கள். கொரோனா பொதுமுடக்கக் காலகட்டத்தில் கார்ப்பொரேட் நிறுவனங்களின் வளம் 14% அதிகரித்துள்ளதாக ஒரு ஆய்வு கூறுகின்றது. இதன் மூலம் தொழிலாளிகளுக்கு ஒரு நன்மையும் இல்லை. எனவே பிரதமர் சொல்வதில் உண்மை இல்லை” என்றும் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

‘பிரதமர் கூறுவது உண்மைக்கு மாறானது’ – ஜி.ராமகிருஷ்ணன்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்