தெலங்கானாவைச் சேர்ந்த கட்டு வாமன் ராவ், பி.வி நாகமணி வழக்கறிஞர் தம்பதியினர், ராமகுண்டம் அருகில் பட்டப் பகலில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள், மந்தானி என்ற இடத்தில் ஒரு நீதிமன்ற வழக்கில் ஆஜராகி விட்டு ஹைதராபாத் திரும்பிக் கொண்டிருந்த போது, மதியம் 3 மணி அளவில் தாக்கப்பட்டுள்ளனர் என்று தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது. அவர்கள் பயணித்த காரின் ஓட்டுனர் சம்பவ இடத்தை விட்டு ஓடிப் போய் விட்டிருக்கிறார். அவரை போலீஸ் கைது செய்து விசாரித்து வருகிறது.
நாகமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், வாமன் ராவ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்திருக்கிறார்.
ரத்தம் கொட்டும் காயங்களுடன் சாலையில் துடித்துக் கொண்டிருந்த வாமன் ராவ், தன்னையும் தனது மனைவியையும் தாக்கியது குன்டா சீனு என்று கூறியதாக பதிவாகியுள்ள ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் சுற்றி வருவதாக தி வயர் செய்தி தெரிவிக்கிறது. குன்டா சீனிவாசராவ், ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டிஆர்எஸ்)-யின் மந்தானி மண்டல தலைவர் என்று நியூஸ் மினிட் தெரிவிக்கிறது.
கட்டு வாமன் ராவ், பி.வி நாகமணி இருவரும் ஹைதராபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள். அவர்கள், 53 வயதான சீலம் ரங்கையா என்ற தலித், மந்தானி போலீஸ் நிலையத்தில் இறந்தது தொடர்பாக ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தனர்.
காட்டு விலங்குகளை வேட்டையாடியதாக கைது செய்யப்பட்ட ரங்கையா, போலீஸ் நிலையத்தின் கழிவறையில் தூக்கில் தொங்கும் நிலையில் கண்டறியப்பட்டார்.
போலீஸ் காவலில் ரங்கையா மரணமடைந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியதற்காக, போலீஸ் தங்களை அச்சுறுத்தி வருவதாக வாமன் ராவ், நாகமணி தம்பதியினர் முறையிட்டதைத் தொடர்ந்து, ஹைதராபாத் உயர்நீதிமன்றம் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்திருந்தது.
“இது தொடர்பாக அரசாங்கத்துக்கு அறிவிப்பு அனுப்பபட்டிருந்தது. இருந்த போதிலும், இப்படி அவர்கள் கொல்லப்பட்டிருப்பது, ஆளும் கட்சி உறுப்பினர்கள் இந்தக் கொலைகளுக்குப் பின்னால் இருப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது” என்கிறார், சமூக உரிமை செயல்பாட்டாளரும் வழக்கறிஞருமான சிக்குடு பிரபாகர் கூறியுள்ளதாக நியூஸ் மினிட் செய்தி வெளியிட்டுள்ளது.
“இந்தத் தம்பதியினர் அரசாங்கத்தின் சட்ட விரோத நடவடிக்கைகளை எதிர்த்து கடந்த சில நாட்களாக உயர்நீதிமன்றத்தில் போராடி வந்தனர். ஆளும் கட்சித் தலைவர்கள் பொது நிதியை எவ்வாறு முறைகேடாக பயன்படுத்துகின்றனர் என்பதை அவர்கள் அம்பலப்படுத்தினர். இந்தக் கொலைக்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும்” என்றும் சிக்குடு பிரபாகர் கூறியுள்ளார்.
ரங்கையா வழக்கை எடுத்துக் கொண்டதால், தங்களுக்கு எதிராக பொய் வழக்குகள் போடப்பட்டு அச்சுறுத்தப்படுகிறோம் என்று வாமன் ராவ், நாகமணி தம்பதியினர் கூறியிருந்தனர். அவர்களது மனு மீதான விசாரணை ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்தது.
தெலங்கானா உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், இந்தப் படுகொலையை கண்டித்திருக்கிறது. வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறது. வழக்கறிஞர் சங்கத்தின் செயற்குழு தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் இந்தக் கொலைகளை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது என்று தி வயர் செய்தி கூறுகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.