விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகப் பிரபல ஹாலிவுட் நடிகை சூசன் சரண்டானும், இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகை ஜமீலா ஜமீலும் ட்விட் செய்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டங்கள் தொடர்பாக, உலகப் புகழ் பெற்ற பாப் இசைக் கலைஞரான ரிஹான்னா, டெல்லியைச் சுற்றியுள்ள போராட்டப் பகுதிகளில் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டது தொடர்பான சிஎன்என் செய்தியைக் குறிப்பிட்டு “இது (விவசாயிகள் போராட்டம்) குறித்து நாம் ஏன் பேசுவதில்லை?” என்று ட்விட்டரில் கேள்வியெழுப்பியிருந்தார்.
ரிஹான்னாவை தொடர்ந்து கிரேடா துன்பெர்க், வனேசா நகாடே, ஜேமி மார்கன், லிசிப்பிரியா கங்குஜம், மீனா ஹாரிஸ், மியா காலிஃபா, லில்லி சிங், ஜே ஷான், அமண்டா கெர்னி போன்ற சர்வதேச பிரபலங்கள் குரல் எழுப்பினர்.
“ரிஹான்னா இஸ்லாமியரா?” – கூகுள் இணையதளத்தில் முதல் இடம் பிடித்த கேள்வி
சர்வேதச பிரபலங்களின் கருத்துக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்த மத்திய அரசு ”இது போன்ற விஷயங்களில் விரைந்து கருத்து தெரிவிப்பதற்கு முன், உண்மைகளை அறிந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரச்சினைகள்குறித்து சரியான புரிதல் வேண்டும்” எனவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில், பிரபலங்கள் கூறும் கருத்துக்கள் ”துல்லியமானதாகவோ” அல்லது ”பொறுப்பானதாகவோ” இல்லை எனத் தெரிவித்தது.
கிரேட்டா துன்பெர்க், மீனா ஹாரிஸ், ரிஹான்னா படங்களை எரித்து ஆர்ப்பாட்டம் – யுனைட்டட் ஹிந்து முன்னணி
மத்திய அரசுக்கு ஆதரவாகப் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், அணில் கும்ப்லே, ஷிகர் தவாண், பாடகர் லதா மங்கேஷ்கர் எனப் பலர் ஆதரவு தெரிவித்தனர்.
“ரிஹான்னா பாகிஸ்தனைச் சேர்ந்த பாடகர்” – பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து
இந்நிலையில், இந்திய அரசின் எச்சரிக்கையையும் மீறி, ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகையான சூசன் சரண்டான், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் தன் ட்விட்டர் பக்கதில், “இந்தியாவில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளிக்கிறேன், அவர்கள் யார், எதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்” என நியூயார்க் டைம்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தியை இணைத்து ட்விட் செய்துள்ளார்.
Standing in solidarity with the #FarmersProtest in India. Read about who they are and why they’re protesting below. https://t.co/yWtEkqQynF
— Susan Sarandon (@SusanSarandon) February 5, 2021
இங்கிலாந்தைச் சேர்ந்த தொகுப்பாளரும் நடிகையுமான ஜமீலா அலியா ஜமீலும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கடந்த சில மாதங்களாக விவசாய போராட்டங்களுக்கு ஆதரவளித்து கருத்து தெரிவித்து வருவதால் தனக்கு கொலை மிரட்டல்களும், பாலியல் வன்புணர்வு மிரட்டல்களும் வருவதாகத் தெரிவித்துள்ளார். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளிப்பேன் எனக் கூறியுள்ள அவர், விவசாயிகள் போராட்டம்குறித்து படித்துத் தெரிந்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.
இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவிக்க கூடாது என மத்திய அரசு கூறினாலும், விவசாயிகள் போராட்டத்திற்கான ஆதரவு தொடர்ந்து பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.