மத்தியப் பிரதேசம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயச் சங்கத் தலைவர்கள் மற்றும் போராட்டக் குழுவினர் உத்தரப்பிரதேசக் காவல்துறையினரால் ராஜஸ்தான் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர் என்று தி இந்து இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் இயற்றிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. தேசியத் தலைநகரை இணைக்கும் ஐந்து நெடுஞ்சாலைகள் வழியாக ‘டெல்லி ச்சலோ’ (டெல்லி போவோம்) என்கிற பேரணிக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்தனர். இப்போராட்டம் நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
சமூகச் செயற்பாட்டாளர்கள் மேதா பட்கர் மற்றும் பிரதிபா ஷிண்டே ஆகியோரின் தலைமையில் 152 போராட்டக்காரர்கள் ‘டெல்லி ச்சலோ’ பேரணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், அகில இந்திய கிசான் சங்கர்ஷ் குழுவைச் சேர்ந்தவர்கள். இந்தப் போராட்டக்காரர்கள் உத்தரப்பிரதேசத்திற்குள் நுழைவதை அம்மாநிலக் காவலர்கள் தடுத்துள்ளனர். ராஜஸ்தான் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள இவர்கள் காவல் அதிகாரிகளால் சூழப்பட்டு நெடுஞ்சாலையில் உட்காந்தபடி இரவைக் கழித்துள்ளனர்.
மத்தியப் பிரதேசம், குவாலியரில் இருந்து அகில இந்திய விவசாயிகள் சபையைச் சேர்ந்த 250 போராட்டக்காரர்களும் இப்பகுதியை வந்தடைய உள்ளனர்.
“அவர்கள் எங்களைத் தடுத்து வைப்பதற்கு, சட்ட ரீதியான காரணம் அல்லது உத்தரவு எதையும் காட்டவில்லை. எங்களுக்கு உணவு, தண்ணீர் அல்லது வேறு எந்த வசதியும் வழங்கப்படவில்லை” என்று மேதா பட்கர் இன்று காலை கூறியுள்ளார்.
மேதா பட்கர் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உயர் அதிகாரிகளின் உத்தரவின் பெயரில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் இன்று மாலை வரை அவர்களை விடுவிக்க முடியாது என்று காவல் கண்காணிப்பாளர் கூறியதாகவும் மேதா பட்கர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் வழியாக ஹரியானா எல்லையை அடைய நீண்ட பாதையைப் பயன்படுத்துமாறு உத்தரப்பிரதேசக் காவலர்கள் இவர்களுக்குப் பரிந்துரைத்துள்ளனர். “இதற்கு 200-250 கி.மீ கூடுதலாகப் பயணிக்க வேண்டும். இவ்வளவு பணத்தைச் செலவழிக்க நாங்கள் வெளிநாடுகளில் இருந்து நிதியைப் பெறும் நிறுவனம் அல்ல. அது மட்டும் இல்லாமல் நாங்கள் ஏன் இதைச் செய்ய வேண்டும்? அவர்கள் எங்களை இந்த எல்லையிலிருந்து அந்த எல்லைக்கு அழைத்துச் செல்லலாம். அல்லது எங்களை உத்தரப்பிரதேசத்துக்குள் அனுமதிக்கலாம். ஆனால், அவர்கள் விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள்” என்று மேதா பட்கர் கூறியுள்ளார்.
“அவர்கள் இவ்வாறு ஏன் செயல்படுகிறார்கள் என்பதற்கு எந்தக் காரணத்தையும் கூறவில்லை. நாங்கள் எங்கு செல்ல விரும்புகிறோம், அங்கு என்ன செய்யப் போகிறோம், என்ன நடவடிக்கையை எடுக்கப் போகிறோம் என்று கூட அவர்கள் எங்களிடம் கேட்கவில்லை. நாங்கள் அகிம்சை வழியில் போராடுபவர்கள் என்பதை அவர்களுக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச அரசின் அடக்குமுறை நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. நாங்கள் உத்தரப்பிரதேசக் காவல்துறையினரால் சட்டவிரோதமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளோம். நெடுஞ்சாலையிலேயே சத்தியாகிரகத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதில், ராஜஸ்தான் அரசு ஏன் தலையிடவில்லை என்பதைக் குறித்து நாங்கள் அவர்களிடம் கேட்க விரும்புகிறோம்” எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.