மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது மும்பை முன்னாள் காவல்துறை தலைவர் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பற்றி தீர்மானிக்க வேண்டியது முதலமைச்சர் உத்தவ் தாக்கரேதான் என்று தேசிவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து மகா விகாஸ் அகாதி என்ற பெயரில் ஆட்சி அமைத்துள்ளன. சிவசேனா கட்சியின் உத்தவர் தாக்கரே முதலமைச்சராக உள்ளார். பாஜக எதிர்க்கட்சியாக உள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், “மாதம் ரூ 100 கோடி திரட்ட வேண்டும் என்று துணை காவல்துறை ஆய்வாளர் சச்சின் வேஸ்-க்கு இலக்கு நிர்ணயித்திருந்தார்” என்று குற்றம் சாட்டி மும்பையின் முன்னாள் தலைமை போலீஸ் அதிகாரி பரம் பீர் சிங் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேக்கு கடிதம் எழுதியுள்ளார்.
“அனில் தேஷ்முக்குக்கு எதிராக பரம் பீர் சிங் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள், ஆளும் மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசின் மதிப்பை பாதித்துள்ளது” என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் கூறியுள்ளார்.
தன் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மீது குற்றம் சாட்டப்பட்டு, அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்திருக்கும் நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் நேற்று டெல்லியில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.
அதில், “குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளன. இந்த விஷயம் தொடர்பாக பொருத்தமான நடவடிக்கை எடுப்பது முதலமைச்சரின் உரிமை. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முடிவு எடுக்கவும், அதன் மீது விசாரணை நடத்தவும் முதலமைச்சருக்கு முழு அதிகாரம் உள்ளது” என்று சரத் பவார் கூறியுள்ளார்.
ஆனால், மகாராஷ்டிரா தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜயந்த் பட்டீல், சரத் பவாரைச் சந்தித்து விட்டு வந்த பிறகு, “அனில் தேஷ்முக்-ஐ பதவி விலகும்படி கேட்பது என்ற கேள்விக்கே இடமில்லை” என்று கூறியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் வீடான ஆன்டிலா மாளிகைக்கு வெளியில், 600 மீட்டர் தொலைவில், பிப்ரவரி 25-ம் தேதியன்று வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, துணை காவல்துறை ஆய்வாளர் சச்சின் வேஸ் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த வழக்கை மும்பை காவல்துறையிடமிருந்து எடுத்து தேசிய புலனாய்வு முகமை நடத்தி வருகிறது, சச்சின் வேஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பானி வீட்டுக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த காரின் உரிமையாளரான மன்சுக் ஹிரேன் என்ற வர்த்தகரின் உயிரற்ற உடல், மார்ச் 5-ம் தேதி, கண்டு பிடிக்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், அதைச் செய்தது சச்சின் வேஸ் என்றும் தனக்கு சந்தேகம் உள்ளது என்று மன்சுக் ஹிரேனின் மனைவி, மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்பு பிரிவிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் பொறுப்பேற்க வேண்டும் என்ற வகையில் மும்பையின் தலைமை காவல் அதிகாரி பரம் பீர் சிங், அந்தப் பதவியிலிருந்து மகாராஷ்டிரா ஊர்க்காவல் படை பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா காவல்துறையில் அரசியல் தலையீடு இருந்ததாகவும், உள்துறை அமைச்சர் மாதம் தோறும் 100 கோடி ரூபாய் வசூலிக்கும்படி சச்சின் வேஸ்-க்கு இலக்கு வைத்திருந்ததாகவம் அவர் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
63-க்கும் மேற்பட்ட மோதல் கொலைகளில் ஈடுபட்டு, போலி என்கவுன்டர் கொலைகளுக்கு பேர் பெற்ற சச்சின் வேஸ் 2004-ம் ஆண்டு, க்வாஜா யூனுஸ் என்பவரின் கொட்டடி கொலை தொடர்பாக பணிஇடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். சென்ற ஆண்டு, கொரோனா பெருந்தொற்று தொடர்பான பணிகளின் தேவைக்காக அவரை பணியில் மீண்டும் அமர்த்துவதாகக் கூறி மகாராஷ்டிரா அரசு அவரது பணியிடை நீக்கத்தை ரத்து செய்தது.
ஆனால், அவர் ஏன் கொரோனா தொடர்பான பணிகளில் அமர்த்தப்படவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கிடையில் மன்சுக் ஹிரேன் கொலை தொடர்பாக மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு, மும்பை போலீஸ் கான்ஸ்டபிள் வினாயக் ஷிண்டே மற்றும் சூதாட்ட தரகர் நரேஷ் தாரே ஆகியோரை கைது செய்துள்ளது.
எதிர்க்கட்சிகளான பாஜக, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆகியவை முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பதவி விலக வேண்டும் என்றும் இந்த விவகாரத்தை மத்திய அரசு விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.