Aran Sei

மும்பை ஐஐடியில் பட்டியலின மாணவர் தற்கொலை: சாதி ரீதியிலான பாகுபாடுதான் என் மகனின் மரணத்திற்கு காரணம் என மாணவரின் தந்தை குற்றச்சாட்டு

சாதி ரீதியிலான கொடுமையே தனது மகன் மரணத்திற்கு காரணம் என்று மும்பை ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட பட்டியலின மாணவரின் தந்தை தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்த பிறகு தன்னுடன் பல மாணவர்கள் பேசுவது இல்லை என்றும், கேலி வார்த்தைகளால் சித்திரவதை செய்வதாகவும் தனது மகன் பலமுறை என்னிடம் கூறி அழுததாக மாணவரின் தந்தை தெரிவித்துள்ளார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள மும்பை ஐஐடி நிர்வாகம், தங்கள் கல்வி நிறுவனத்தில் சாதி பாகுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை எனக் கூறியுள்ளது.

கர்நாடகா: அம்பேத்கர் மற்றும் தலித் சமூகத்தினரை இழிவுபடுத்தும் விதமாக நாடகம் ஏற்பாடு செய்த கல்லூரி முதல்வர், மாணவர்கள் உள்பட 9 பேர் கைது

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் தர்ஷன் சோலங்கி (18). தலித் சமூகத்தைச் சேர்ந்தவரான இவர், மும்பை ஐஐடியில் பி டெக் படிப்பில் 3 மாதங்களுக்கு முன்பு சேர்ந்துள்ளார். ஐஐடி நிறுவனத்தில் உள்ள விடுதியில் தங்கி தர்ஷன் படித்து வந்திருக்கிறார். முதலாம் பருவ தேர்வு கடந்த சனிக்கிழமையுடன் முடிவடைந்ததால் மாணவர்கள் சிலர் நேற்று தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இந்த சூழலில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மற்ற மாணவர்கள் மதிய உணவுக்காக சென்றிருந்த போது, விடுதியின் 7-வது மாடிக்கு சென்ற தர்ஷன் அங்கிருந்து குதித்தார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை, மற்ற மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், மும்பை ஐஐடி நிர்வாகத்திடமும், தர்ஷனுடன் தங்கியிருந்த சக மாணவர்களுடனும் விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த மாணவர்கள் சிலர், தர்ஷனுக்கு எதிராக பேராசிரியர்களும், பல மாணவர்கள் சாதி பாகுபாடு காட்டியதே அவர் தற்கொலைக்கு காரணம் எனக் கூறினர். எனினும், தற்கொலை குறிப்பு எதையும் தர்ஷன் எழுதி வைக்காததால் காவல்துறையினர் இந்த சம்பவத்தை விபத்து வழக்காக பதிவு செய்தனர்.

தலித் வீட்டில் சாப்பிட்டால் தீண்டாமை ஒழிந்து விடுமா?, தலித் மக்களும் மனிதர்கள் தான். அவர்கள் வீட்டில் சாப்பிடுவது பெருமையா? – பாஜக எம்.எல்.சி. எச்.விஸ்வநாத் கேள்வி

இந்நிலையில், தர்ஷனின் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது. அப்போது அவரது சகோதரி ஜான்வி சோலங்கி செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த மாதம் தர்ஷன் வீட்டுக்கு வந்த போது, மிகவும் மன அழுத்தத்தில் இருந்தான். அவனிடம் விசாரித்தபோது, விடுதியில் தனக்கு நடக்கும் சாதி ரீதியான கொடுமைகளை அவன் கூறினான். தலித் என்று தெரிந்த பிறகு அவனது நண்பர்களும், ஒரே அறையில் தங்கியிருந்தவர்களும் கூட அவனுடன் பேசுவதை நிறுத்திவிட்டதாகவும், அவர்கள் வெளியே போகும் போது தன்னை சேர்த்துக் கொள்ள மறுப்பதாகவும் கூறி அழுதான். இதை கேட்ட நாங்கள், போக போக எல்லாம் சரியாகிவிடும் என ஆறுதல் கூறி அவனை அனுப்பி வைத்தோம். ஆனால் அதற்குள் இப்படி முடிவு எடுப்பான் என நினைத்துக்கூட பார்க்கவில்லை” என்றார்.

தர்ஷனின் தந்தை ராம்தேஷ் பாய் கூறுகையில், “இட ஒதுக்கீட்டால் ஐஐடியில் இலவசமாக தர்ஷன் படிக்கிறான் என்று தெரிந்ததும், சக மாணவர்கள் அவன் மீது பொறாமை கொண்டிருக்கிறார்கள். நாங்கள் பல ஆயிரம் ரூபாய் கட்டி படிக்கும் போது, நீ மட்டும் இலவசமாக படிப்பாயா என கேட்டு அவனை பல முறை திட்டியுள்ளனர். இதை என்னிடம் கடந்த மாதம் தர்ஷன் கூறினான். சாதிப் பாகுபாடும், கேலி வார்த்தைகளுமே எனது மகனை இந்த முடிவு எடுக்க தள்ளியிருக்கிறது. இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

Source : NDTV

மும்பை ஐஐடியில் பட்டியலின மாணவர் தற்கொலை: சாதி ரீதியிலான பாகுபாடுதான் என் மகனின் மரணத்திற்கு காரணம் என மாணவரின் தந்தை குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்