Aran Sei

நள்ளிரவுக்குப் பின் காசிப்பூரில் குவியும் விவசாயிகள் – போராட்டத்துக்கு பெருகும் ஆதரவு

Image Credit : indiatoday.in

போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று உத்தர பிரதேச அரசு நேற்று விதித்த கெடுவைத் தொடர்ந்து காசிப்பூர் போராட்டக் களத்திலிருந்து வெளியேற்றப்படும் அச்சுறுத்தலை விவசாயிகள் எதிர்கொண்டிருந்தனர்.

மத்திய அரசின் மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தின் ஒரு பகுதியாக ஜனவரி 26-ம் தேதி நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் ஒரு பகுதியில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து நேற்று காலையில் இருந்தே அதிக எண்ணிக்கையிலான போலீசார் காசிப்பூர் எல்லையில் குவிக்கப்பட்டனர் என்று இந்திய டுடே செய்தி கூறுகிறது.

Image Credit : indiatoday.in
காசியாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட் – Image Credit : indiatoday.in

“நள்ளிரவுக்குள் அந்த இடத்தை விட்டு போய் விட வேண்டும் இல்லை என்றால் அவர்கள் அகற்றப்படுவார்கள்” என்று காசியாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட் விவசாயிகளுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

புதன்கிழமை முதல் போராட்டக் களத்தில் மின்வெட்டும் தண்ணீர் வினியோக தடையும் ஏற்பட்டிருந்தது.

Image Credit - https://twitter.com/chitraaum/status/1354801614565986308?s=20
காசிப்பூரில் குவிக்கப்பட்டிருந்த ஆயுதப் படையினர் – Image Credit – https://twitter.com/chitraaum/status/1354801614565986308?s=20

குடியரசு தின பேரணியில் வன்முறையைத் தூண்டியதாக போலீசால் குற்றம் சாட்டப்பட்ட பாரதிய கிசான் யூனியன் தலைவர்கள், காசிப்பூர் போராட்டக் களத்தை அடைந்து மேடையில் பேசினார்கள்.

மூத்த காவல்துறை அதிகாரிகளும் மாவட்ட அதிகாரிகளும் அவர்களைச் சந்தித்தனர். ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. போலீசார் பாஜக தலைவர்களுடன் வந்துள்ளதாக பாரதிய கிசான் யூனியன் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.

போராட்டம் தொடரும், அரசின் மிரட்டலுக்கு அடிபணிய போவதில்லை என்று தலைவர்கள் அறிவித்தனர்.

Image Credit : indianexpress.com
Image Credit : indianexpress.com

பல முதல் தகவல் அறிக்கைகளில் பெயர் சேர்க்கப்பட்ட பாரதிய கிசான் யூனியனின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிகைட் மேடைக்கு வந்து, “அரசின் மிரட்டல்களுக்கு அடிபணிய போவதில்லை என்றும், தேவைப்பட்டால் இன்னும் அதிகமானவர்களை போராட்டத்திற்கு வரும்படி அழைப்பு விடுப்பேன்௱ என்று பேசினார்.

அவர் மேடையை விட்டு இறங்கி ஊடகங்களுடன் பேசும்போது, உணர்ச்சி வசத்தில் அவரது குரல் உடைந்தது. நாடு முழுவதும் ஒளிபரப்பாகிய அவரது உணர்சி பூர்வமான பேட்டியில் “கறுப்பு சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை கைவிடுவதை விட தற்கொலை செய்து கொள்வோம்” என்று அவர் பேசியிருந்தார்.

‘உயிரே போனாலும் போராட்டக் களத்தைவிட்டு நகர மாட்டோம்’ – விவசாயிகள் உறுதி

மேலும், போராட்டக் களத்தை விட்டு வெளியேறுவதற்கு பதிலாக, கிராமத்தில் இருந்து வரும் நீரை மட்டும் குடித்து, போராட்டக் களத்தில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அவர் கூறினார்.

ஆயுதமேந்திய குண்டர்கள் போராட்டக் களத்திற்கு அனுப்பப்பட்டதாக குற்றம் சாட்டிய திகாயத் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறினார்.

“வன்முறையைத் தூண்டுவதற்கான ஒரு திட்டம் இருப்பதாகத் தெரிகிறது. இதுபோன்ற ஏதேனும் திட்டம் இருந்தால், நான் இங்கேயே இருப்பேன், துப்பாக்கிக் குண்டை எதிர்கொள்வேன்” என்று அவர் கூறினார்.

அவரது கண்ணீர் போராட்டத்தை வலுப்படுத்தும் உயிர்நீராக மாறியது என்கிறது இந்தியா டுடே.

உத்தர பிரதேசத்தின் சிசோலியில் உள்ள ராகேஷ் திகாயத்தின் வீட்டிற்கு வெளியே நூற்றுக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் கூடி, அவருக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.

விவசாயிகளுக்காக போராடி வரும் ஒரு தலைவரை ஆதரிக்கும்படி அறைகூவல் விடுக்கும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரல் ஆகின. மேற்கு உத்தர பிரதேசத்தின் ஒவ்வொரு மொபைலின் வாட்ஸ்அப்-லும் ராகேஷ் திகாயத்தின் வீடியோ சென்றடைந்தது.

இது போர்க்குணம் மிக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. இரவு 11 மணியளவில், காசிப்பூரில் மேலும் விவசாயிகள் வந்த சேர ஆரம்பித்தனர். மீரட், பராட், பாக்பத், முராத்நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் குழுக்கள் ராகேஷ் திகாயத்துக்கு ஆதரவாக அந்த இடத்தை அடைந்தனர்.

விவசாயிகளுக்கு தங்கள் ஆதரவை தெரிவிப்பதற்காக ராஷ்டிரிய ஜாட் மகாசங்கமும் காசிப்பூரை அடைந்தது. “இது நமது விவசாயிகளின் மரணத்திற்கு எதிரான போராட்டம். காலையில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் இங்கு இருப்பார்கள்” என்று ஜாட் தலைவர் ரோஹித் ஜாகர் கூறினார்.

ஹரியானாவின் காண்டேலாவில், திகாயத் ஆதரவாளர்கள் ஜிந்த்-சண்டிகர் சாலையை மறித்தனர்.

நள்ளிரவு வாக்கில் பெருகிவரும் கூட்டத்தை எதிர்கொண்ட  காவல்துறையினர் காசிப்பூர் போராட்டக் களத்திலிருந்து திரும்பிச் சென்றனர்.

“ஒன்று மட்டும் உறுதி, காசிப்பூர் போராட்டம் தொடர்கிறது” என்று இந்தியா டுடே கருத்து தெரிவித்துள்ளது.

சம்யுக்த கிசான் மோர்ச்சா, “டெல்லி காவல்துறையினர் அதன் தலைவர்களுக்கு அனுப்பிய நோட்டீஸ்களைக் கண்டு அஞ்சப் போவதில்லை” என்று கூறியுள்ளது. குடியரசு தின பேரணியின் ஒரு பகுதியில் நடந்த வன்முறைக்கு விவசாயத் தலைவர்கள் மீது குற்றம் சாட்டுவதன் மூலம் விவசாயச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் இயக்கத்தை முடித்து வைக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அது குற்றம் சாட்டியது.

“மத்தியில் ஆளும் பாஜக அரசு, பாஜக ஆட்சியில் இருக்கும் மாநில அரசுகளுடன் சே்ர்ந்து போராட்டத்தை ஒழித்துக் கட்ட எல்லா முயற்சிகளையும் எடுக்கிறது.” என்று அது தான் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

Image Credit : indiatoday.in
நள்ளிரவில் காசிப்பூர் – Image Credit : indiatoday.in

காசிப்பூர் போராட்டக் களத்தில் நள்ளிரவில் உரையாற்றிய ராகேஷ் திகாயத் “நாம் ஒரு அமைதியான போராட்டத்தை நடத்தி வருகிறோம். மக்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து வரத் தொடங்கியுள்ளனர். தண்ணீருக்கும் பிற தேவைகளுக்குமான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.” என்று பேசினார்.

“ஒரு சிலரின் தவறான செயல்களால் போராட்டத்தை கைவிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. இந்தப் போராட்டத்தில் முதலில் எனது தந்தையை இழந்தேன். போராட்டத்தை முடித்துக் கொண்டால் அது எனது குடும்பத்திற்கு இரட்டை இழப்பாக இருக்கும்” என்று டிசம்பர் 14-ம் தேதி சிங்குவிலிருந்து திரும்பி வரும்போது இறந்த சுக்தேவ் சிங்கின் (64) மகன் குர்தீப் சிங் கூறினார் என்று இந்தியா டுடே செய்தி தெரிவிக்கிறது.

நள்ளிரவுக்குப் பின் காசிப்பூரில் குவியும் விவசாயிகள் – போராட்டத்துக்கு பெருகும் ஆதரவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்