மக்கள் ஒன்று கூடும் போது சட்டங்களை மாற்றுவது மட்டுமில்லை, அரசாங்கங்களையே மாற்ற முடியும் என்று விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் கூறியுள்ளார்.
சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்
ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் கர்கோடா நகரில் நேற்று நடந்த விவசாயிகள் மகா பஞ்சாயத்தில் பேசிய அவர், மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும் என்று அவர் பேசியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
நள்ளிரவுக்குப் பின் காசிப்பூரில் குவியும் விவசாயிகள் – போராட்டத்துக்கு பெருகும் ஆதரவு
விவசாயச் சட்டங்களை ரத்து செய்யவில்லை என்றால், அரசாங்கம் அதிகாரத்தில் தொடர முடியாது என்று ராகேஷ் திகாயத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்களின் கூட்டம் அரசாங்கத்தையே மாற்ற முடியும்
“கூட்டங்களை கூட்டுவதன் மூலம் சட்டங்களை ரத்து செய்து விட முடியாது என்று அமைச்சர் பேசியிருக்கிறார். அவர்களுக்கு பைத்தியம் பிடித்து விட்டது. மக்கள் கூட்டமாக கூடும் போது அவர்கள் அரசாங்கங்களை மாற்ற முடியும்” என்று திகாயத் கூறியுள்ளார்.
வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசு யாரிடமும் கருத்து கேட்கவில்லை – ஆர்டிஐ மூலம் அம்பலம்
ஞாயிற்றுக் கிழமை அன்று மத்திய பிரதேசத்தின் குவாலியரில் பேசிய மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர தோமர், “கூட்டங்கள் கூடுவதால் மட்டும் சட்டங்களை ரத்து செய்ய முடியாது” என்று பேசியிருந்தார்.
விவசாயச் சட்டங்கள் மட்டும்தான் பிரச்சினையா?
“அரசாங்கம் சட்டங்களை திருத்துவதற்கு தயாராக உள்ளது, ஆனால் விவசாய சங்கங்கள் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மட்டும் கூறுகின்றனர். என்னென்ன ஷரத்துகளை திருத்த வேண்டும் என்று அவர்கள் சொல்ல வேண்டும்” என்று தோமர் கூறியிருந்தார்.
“விவசாயச் சட்டங்கள் மட்டும் பிரச்சினையில்லை. மின்சார (திருத்த) மசோதா, விதை மசோதா… என்று என்ன மாதிரியான சட்டங்களை அவர்கள் கொண்டு வருகிறார்கள்!!” என்று கேள்வி எழுப்பியுள்ளார் ராகேஷ் திகாயத்.
குறைந்தபட்ச ஆதரவு விலையில் வாங்க வேண்டும்
“விவசாயிகளுக்கு சட்டங்களைப் பற்றி அறிவு இல்லை என்று அமைச்சர்கள் கூறுகின்றனர். ஒரு விவசாயியைப் பொறுத்த வரையில் வேளாண் விளைபொருட்களை நியாயமான விலையில் வாங்கப்பட்டால், சட்டங்கள் சரியானவை. விளைபொருட்களை பாதி விலைக்கு வாங்குகிறீர்கள் என்றால், அது சட்டங்களைப் பற்றி என்ன சொல்கிறது?” என்றும் அவர் கேட்டுள்ளார்.
“23 விளைபொருட்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையில் வாங்கப்படுவதில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலைக்குக் கீழே பயிர்களை வாங்க அனுமதிக்காத சட்டங்கள் வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
விவசாயிகளின் போராட்டம் மட்டும் இல்லை
இந்தப் போராட்டம் விவசாயிகளுக்கானது மட்டுமில்லை, ஏழைகள், தினக்கூலி தொழிலாளர்கள் போன்ற பிற பிரிவினருக்கும் ஆனது. விவசாயச் சட்டங்களை ஏழைகளை அழித்து விடும் என்று திகாயாத் கருத்து தெரிவித்துள்ளார்.
“இது ஒரு சட்டம் பற்றிய விஷயம் மட்டுமில்லை, இது போல இன்னும் பல சட்டங்கள் வரவிருக்கின்றன. இப்போது தடை போடா விட்டால், அரசாங்கம் கட்டுப்படுத்த முடியாததாகி விடும்” என்று அவர் பேசியுள்ளார்.
கிராமங்களில் மூக்குடைபடும் பாஜகவினர்
“பாஜக விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த தனது நாடாளுமன்ற உறுப்பினர்களை கிராமங்களுக்கு அனுப்புகிறது. முதல் நாளில் இருந்தே அவர்கள் எதிர்ப்பையே சந்தித்தார்கள். யாரும் அவர்களை உட்காரக் கூடச் சொல்வதில்லை” என்று திகாயத் தெரிவித்துள்ளார்.
“விவசாயிகளை ஏமாற்ற வழி சொல்லுங்கள்” – பாஜக தலைவர்களிடம் ஆலோசனை கேட்ட தொண்டர்கள்
விவசாயிகள் மீது பொய் வழக்குகள்
விவசாயிகள், பத்திரிகையாளர்கள், போராட்டத்தோடு தொடர்புடையவர்கள் மீது வழக்குகளை தொடுக்கும் அரசாங்கத்தை அவர் விமர்சித்துள்ளார். “பிரசாதம் கொடுப்பது போல கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குகளை சுமத்துகிறார்கள். அவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.
‘எமர்ஜென்சியை நோக்கி செல்கிறோம்’ – திஷா ரவிக்கு ஆதரவாக விவசாயிகள், அரசியல்வாதிகள், பொதுமக்கள்
சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் தலைமை
விவசாயத் தலைவர்களின் 40 பேர் கொண்ட சம்யுக்த கிசான் மோர்ச்சா மீது நம்பிக்கையை உறுதி செய்த அவர், அரசாங்கம் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் அழைப்பின் பேரில் விவசாயிகள் 3 லட்சத்துக்கும் அதிகமான டிராக்டர்களை டெல்லிக்கு கொண்டு சென்றனர். 40 லட்சம் டிராக்டர்களை போராட்டத்துடன் இணைப்பதற்கான இலக்கு வைத்துள்ளோம்.” என்று கூறிய அவர், கர்நாடகாவில் 10,000 டிராக்டர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டன. ஆனால், பேனாவும் கேமராக்களும் துப்பாக்கியின் கண்காணிப்பின் கீழ் இருப்பதால் அந்தச் செய்தியை வெளியில் பரப்ப முடியவில்லை” என்று அவர் பேசியுள்ளார்.
இந்த மாதத்தில் மட்டும் ராஜஸ்தானில் 7 விவசாயிகள் மகா பஞ்சாயத்துகள் திட்டமிடப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
பயிர்களை அழிக்க வேண்டாம்
மூன்று விவசாயச் சட்டங்களை எதிர்த்து தமத விளைபயிர்களை சில விவசாயிகள் அழித்தது பற்றிய செய்திகளை குறிப்பிட்ட ராகேஷ் திகாயத், “பயிர்களை அழிக்க வேண்டாம்” என்று விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.
“பயிர்களை அழிப்பதற்கான நேரம் இன்னும் வரவில்லை. இப்போதைக்கு விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். வயல்களில் வேலை செய்ய வேண்டும். மத்திய அரசு கொண்டு வரும் கொள்கைகளை கண்காணித்து வர வேண்டும்” என்று அவர் பேசியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.