முஹம்மது நபி தொடர்பாக அவதூறு கருத்து தெரிவித்த பாஜக பிரமுகர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிப்பதற்கு உத்தரபிரதேச பாஜக தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை (ஜூன் 10) தொழுகைக்கு பிறகு நடைபெற்ற போராட்டத்தின் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது, சட்டவிரோதமாக கூடியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பெயரில் பிரக்யாராஜ் பகுதியைச் சேர்ந்த அரசியல் செயல்பாட்டாளர் ஜாவேத் முகமது உள்ளிட்ட 255 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சனிக்கிழமை (ஜூன் 11) இரவு 8 மணி நிலவரப்படி, உத்தரபிரதேசத்தின் 8 மாவட்டங்களில் இருந்து இருந்து 255 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அதிகபட்சமாக பிரயாக்ராஜ் (68), சஹரன்பூர் (64), ஹத்ராஸ் (50), அம்பேத்கர் நகர் (28), மொராதாபாத் (27), ஃபிரோசாபாத் (13), அலிகார் (3), ஜலான் (2) ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை மாநில அரசு தீவிரப்படுத்திய நிலையில், புல்டோசர் கொண்டு வீடுகளை இடிப்பதற்கு உத்தரபிரதேச பாஜக தலைவர் ஸ்வதந்திர சிங் உள்ளிட்ட பல பாஜக பிரமுகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பிரக்யாராஜில் அட்டாலா பகுதியில் வெள்ளிக்கழமை (ஜூன் 10) தொழுகைக்கு பிறகு காவல்துறையினர் மீது கல்வீசிய புகாரில் 68 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் சொத்துக்கள் இடிக்கப்படும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
போராட்டம் கலவரமாக மாறியதற்கு பின்னால் இருக்கும் சதிக்கு ஜாவேத் பம்ப் என்கிற ஜாவேத் முகமது தான் காரணம் என்று காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜேஎன்யூ மாணவர் உமர் காலித்தின் தந்தை எஸ்.கியூ.ஆர் இலியாஸ் தலைமையிலான வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் பெடரல் குழுவில் உறுப்பினராக உள்ளார்.
பிரக்யராஜின் மூத்த காவல் கண்காணிப்பாளர் அஜய் குமார், “வாட்ஸ் அப் சாட் மூலம் பாரத் பந்த்தில் ஈடுபட அட்டாலா பகுதி மக்களுக்கு ஜாவேத் அழைப்பு விடுத்தை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.” என்று கூறியுள்ளார்.
டெல்லியில் வசிக்கும் மாணவர்கள் செயல்பாட்டாளரான மகள் அப்ரீன் பாத்திமாவிடம் போராட்டங்கள்குறித்து ஜாவேத் ஆலோசனை நடத்தியுள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாத்திமாவிடம் விசாரணை நடத்தப்படும். அவருக்கு எதிராக நம்பகமான ஆதாரங்களை கிடைத்தால், அவரை காவலில் எடுக்க டெல்லி காவல்துறையிடம் உத்தரபிரதேச காவல்துறை அனுமதி கேட்கும் என்று அஜய் குமார் தெரிவித்துள்ளார்.
ஜாவேத்தின் கைது சட்டவிரோதமானது. அவரை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம் என்று வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் தலைவர் இலியாஸ் கூறியுள்ளார்.
பெரிய சதியை காவல்துறையினர் முறியடித்திருப்பதாக தெரிவித்துள்ள அஜய் குமார், “ஜாவேத்தின் செல்போனில் இருந்து எண்கள் அழிக்கப்பட்டிருப்பதால், அதை தடயவியல் சோதனைக்கு அனுப்பியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.
வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு நடைபெற்ற போராட்டம் தொடர்பாக 9 மாவட்டங்களில் 13 முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டிருப்பதாக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரக்யாராஜ் குல்தாபாத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் காவல்துறைக்கு எதிராக செயல்பட்டதாக 70 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அடையாளம் தெரியாத நபர்கள் என்று 5 ஆயிரம் பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஜஹாங்கீர்புரி: காவல் துறைக்கு பயந்து ஊரிலிருந்து வெளியேறும் இஸ்லாமிய இளைஞர்கள்
கரேலி காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு முதல் தகவல் அறிக்கையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது குற்றவியல் சதி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட இரண்டு டஜன் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
காவல்துறையினர் இதுவரை எந்த குறிப்பிட்ட குழு அல்லது கட்சியின பங்கைக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், தனிநபர்களின் பங்கைக் கண்டுபிடித்துள்ளது.
கலவரத்தின்போது பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும். குண்டர் சட்டத்தின் கீழ் அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று உத்தரபிரதேச காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் (சட்டம் – ஒழுங்கு) பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார்.
புல்டோசரால் வீடுகள் இடிக்கப்படும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஊடக ஆலோசகர் மிருத்யுஞ்சய் குமார், ”ஒவ்வொரு வெள்ளிக்கிழமைக்கு பிறகு சனிக்கிழமை வரும் என்பதை அடங்காத சக்திகள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று எச்சரித்துள்ளார்.
வீடுகள்மீது புல்டோசரின் நிழல் விழுந்தவர்கள்; மற்றவர்கள்மீது கற்களை எறிய வேண்டாம் என்று உத்தரபிரதேச பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் கூறியுள்ளார்.
வெள்ளிக்கிழை இரவு எங்கள் வீட்டிற்கு காவல்துறை குழு சென்றுள்ளது. அவர்கள் எங்கள் குடும்பத்திடம் ஆக்ரோஷமான மற்றும் அச்சுறுத்தும் முறையில் பேசியுள்ளனர் என்று ஜாவேத்தின் மகள் பாத்திமா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியிருக்கும் காணொளியில், “எங்கள் வீட்டிலிருந்து எங்களை வெளியேற்ற முயன்றனர். எங்கள் வீடு புல்டோசரால் இடிக்கப்படும் என்று நாங்கள் அஞ்சுகிறோம்” என்று பாத்திமா கூறியிருந்தார்.
Source: The Hindu
அண்ணாமலை முட்டுக் கொடுப்பாரா? பாலியல் குற்றவாளியை தண்டிக்க போராடுவாரா? | BJP | Virudhunagar
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.