Aran Sei

“போராடும் விவசாயிகளை காலிஸ்தானி ஆதரவாளர்கள் என்பதா” – அகாலி தள் கண்டனம்

Image Credit : thehindu.com

ள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நிபந்தனையுடன் கூடிய பேச்சுவார்த்தையை போராடும் விவசாயிகள் நிராகரித்து விட்டனர் என்று என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

ஒன்றிய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் பஞ்சாப் விவசாயிகள், தமது போராட்டத்தை அதற்கென ஒதுக்கப்பட்ட இடமான புராரி மைதானத்துக்கு மாற்றிக் கொண்டால் பேச்சு வார்த்தையை உடனடியாக தொடங்கலாம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்லியிருப்பதை விவசாயிகளின் கூட்டமைப்பு நிராகரித்திருக்கிறது.

7 உறுப்பினர்கள் கொண்ட விவசாயிகளின் கமிட்டி இந்த முடிவை எடுத்துள்ளதாக ஸ்வராஜ் இந்தியா கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார். தாங்கள் தொடர்ந்து டெல்லிக்கு வெளியே தங்கியிருக்கப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

அரசு பரிந்துரைக்கும் போராட்ட இடங்கள் திறந்த வெளி சிறைச்சாலைகளாக மாறி விடும் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர். முன்னதாக, டெல்லி போலீஸ் விவசாயிகளை விளையாட்டு மைதானங்களில் சிறை வைக்க அனுமதிக்கும்படி அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசாங்கத்தை கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. போராடும் விவசாயிகள் டெல்லியின் “விருந்தினர்கள்” என்று கூறி கேஜ்ரிவால் அரசாங்கம் அந்தக் கோரிக்கையை நிராகரித்திருந்தது.

“நாங்கள் ஒரு போதும் புராரி மைதானத்துக்குப் போக மாட்டோம். அது ஒரு மைதானம் இல்லை, அது ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலை” என்று “பாரதிய கிசான் யூனியன் கிராந்திகாரி”யின் மாநிலத் தலைவர் சுர்ஜீத் சிங் பால் ஞாயிற்றுக் கிழமை மாலை, சிங்கு எல்லையில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

“உத்தர் காண்ட் மாநிலத்திலிருந்து ஒரு விவசாயிகளின் குழு இன்று டெல்லிக்கு வந்தது. அவர்கள் டெல்லியின் மையத்தில் உள்ள ஜந்தர் மந்தருக்குச் செல்ல விரும்பினர். டெல்லி போலீஸ் அவர்களை அங்கு அழைத்துச் செல்வதாகக் கூறியது. ஆனால், அவர்கள் புராரி மைதானத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்” என்று அவர் குற்றம் சாட்டினார்.

டெல்லி போலீஸ் மத்திய உள்துறையின் கீழ் வருகிறது என்பது நினைவுகூரத்தக்கது

தடைகளை மீறித் தொடரும் விவசாயிகள் போராட்டம் – இன்று தில்லி முற்றுகை

“நிபந்தனைகளை விதிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும், சட்டங்களின் ஆதாயங்கள் பற்றி விவசாயிகளுக்கு விளக்குவதற்காக பேச்சுவார்த்தை என்று நினைப்பதை விட்டுத் தள்ள வேண்டும், நேரடியாக தீர்வை முன் வைக்கவேண்டும்” என்று விவசாயிகள் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளதாக என்டிடிவி செய்தி கூறுகிறது.

அகில இந்திய விவசாயிகள் கூட்டணிகளையும், பிற பிராந்திய அமைப்புகளையும் பேச்சு வார்த்தைக்கு அனுப்ப ஒன்றிய அரசாங்கம் மறுப்பதை சில விவசாயத் தலைவர்கள் கண்டித்துள்ளனர் என்று தி ஹிந்து தெரிவிக்கிறது. “பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் மட்டும் இந்த மசோதாக்களை எதிர்க்கவில்லை. உத்தர பிரதேசம், உத்தர்காண்ட், மத்திய பிரதேசம், கர்னாடகா மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த எங்கள் சகோதரர்களும் டெல்லி எல்லைகளில் போராடுகின்றனர்” என்று கிசான் கிராந்திகாரி யூனியன் தலைவர் தர்ஷன் பால் கூறியுள்ளார்.

“டெல்லி நகரம் முழுவதும் ஆயுதப் படைகள் குவிக்கப்பட்டிருப்பது, போராடும் விவசாயிகள் மத்தியிலும், டெல்லி மக்கள் மத்தியிலும் அச்சுறுத்தலும் கவலையும் நிரம்பிய சூழலை உருவாக்கியுள்ளது” என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.

’கார்பரேட்டுகளால் சுரண்டப்பட்டுச் சாகபோகிறோம்’ – தில்லி எல்லையைத் தகர்கும் விவசாயிகள்

“விவசாயிகளையும் அவர்களது போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவதாக” அரியானா முதலமைச்சர் எம் எல் கட்டார் மீது அகாலி தள கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதல் குற்றம் சாட்டியுள்ளார்.

“விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளை காலிஸ்தானிகள் என்று முத்திரை குத்தும் ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டாரின் அறிக்கையை சிரோமணி அகாலிதள் வன்மையாகக் கண்டிக்கிறது”

“இது விவசாயிகளையும் அவர்களது போராட்டத்தையும் களங்கப்படுத்துவதற்கான சதித் திட்டம். இதன் மூலம் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதற்கான வழி ஏற்படுத்தப்படுகிறது” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

முன்னதாக, பிரதமர் மோடி தனது “மன் கி பாத்” உரையில், “விவசாய சீர்திருத்தங்கள் நமது விவசாயிகளுக்கு புதிய சாத்தியங்களை திறந்து விட்டுள்ளன” என்று கூறியிருந்தார்.

விவசாயிகள் ஒன்றிய அரசின் மூன்று விவசாய சீர்திருத்த சட்டங்களை ரத்து செய்யவும், மின்சார மசோதாவை திரும்பப் பெறவும் கோரி போராடி வருகிறார்கள் என்று தி ஹிந்து செய்தி குறிப்பிடுகிறது.

ஹரியானா வழியாக தமது மூன்று நாட்கள் பயணத்தின் போது தண்ணீர் பீரங்கிகள், கண்ணீர் புகை, போலீஸ் தடுப்புகளை இவற்றை எதிர்த்து போராடி, டெல்லி எல்லையை அடைந்துள்ளனர் விவசாயிகள். டெல்லிக்குள் நுழைந்து விட்ட விவசாயிகள் வடக்கு டெல்லியில் உள்ள ஒரு மைதானத்தில் முகாமிட்டுள்ளனர். மற்றவர்கள் எல்லையில் தங்கியுள்ளனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் – கட்டவிழ்த்து விடப்படும் ஒடுக்குமுறை

சிங்கு மற்றும் டிக்ரி எல்லைகளில் டிரக்குகளிலும், டிராக்டர்களிலும், பிற வாகனங்களிலும் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் அங்கிருந்து நகர மறுத்து விட்டிருக்கின்றனர்.

பல மாதங்களுக்கு போதுமான உணவுப் பொருட்களுடன் வந்துள்ள விவசாயிகள், தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படா விட்டால் டெல்லிக்குள் நுழைவதற்கான 5 பாதைகளில் மறியல் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர் என்று தி ஹிந்து தெரிவிக்கிறது.

“போராடும் விவசாயிகளை காலிஸ்தானி ஆதரவாளர்கள் என்பதா” – அகாலி தள் கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்