Aran Sei

குடியுரிமை திருத்த சட்டம் – பாகிஸ்தான் திரும்பும் இந்து மற்றும் சீக்கிய அகதிகள்

credits : indian express

பாகிஸ்தானிலிருந்து இந்தியா திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்ட இந்து மற்றும் சீக்கிய அகதிகள் உள்ளிட்ட 243 பாகிஸ்தான் குடிமக்கள், இந்தியாவில் அவர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மீண்டும் பாகிஸ்தான் திரும்புகிறார்கள் என தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்தி ஓராண்டு கடந்த நிலையிலும் அந்தச் சட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து இந்திய அரசிடமிருந்து எந்த அறிவிப்பும் வராததால் இந்தியாவில் வாழ்ந்து வரும் இந்து, சீக்கிய அகதிகளின் ஒரு குழுவினர் தற்போது வாகா எல்லையின் வழியே மீண்டும் பாகிஸ்தான் செல்ல இருப்பதாக தி எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

credits : the wire
credits : the wire

இந்தியாவின் அண்டை நாடுகளான, இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் வாழும் இந்து, சீக்கிய மதம் உள்ளிட்ட சிறுபான்மை மதத்தினர், இந்தியாவுக்கு அகதிகளாக வரும்போது அவர்களுக்குத் துரிதமாக இந்தியக் குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமைச் சட்ட திருத்த மசோதாவை, மத்திய அரசு கொண்டு வந்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டுப் பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்ற இந்தச் சட்டம் ஜனவரி 10, 2020 –ல் இருந்து அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இந்தச் சட்டத்துக்கான விதிமுறைகளை அரசு இன்னும் அறிவிக்கவில்லை .

சிஏஏ எதிர்ப்புப் போராட்டம் – இருவர் கைதுக்கு இடைக்கால தடை

பாகிஸ்தான் குடிமக்கள் இந்தியாவில் இருந்து வெளியேறுவதற்கு (exit) ஆட்சேபனை  இல்லை (no objection) என்று அறிவிப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், நீண்ட கால விசாவில் (எல்டிவி) இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களின்  விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், இந்தியாவில் இருந்து வெளியேற விரும்புவர்கள் அதற்கான அனுமதியைச் சம்பந்தப்பட்ட வெளிநாட்டுப் பிராந்தியப் பிரிவு அலுவலக (எஃப்ஆர்ஆர்ஓ) அதிகாரிகளிடமிருந்து பெற வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்த அகதிகள், கொரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு திரும்ப முடியாமல் இந்தியாவுக்குள் சிக்கிக் கொண்டவர்களையும் உள்ளடக்கிய 243 பாகிஸ்தான் குடிமக்கள் என்று தி வயர் தெரிவிக்கிறது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள உமர்கோட் மாவட்டத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்த 37 வயதான அகதி ஶ்ரீதர், சிஏஏ மூலம் பயனடைய முடியும் என்று நம்பியவர்களில் ஒருவர். ஆனால் “எனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கான விசாக்களைப் பெறுவதற்காக ஜோத்பூரில் உள்ள எஃப்ஆர்ஆர்ஓ அலுவலகம் மற்றும் டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சகத்திற்கும் பல முறை ஓடினேன். நான் இப்போது முயற்சியைக் கை விட்டுவிட்டேன், திரும்பிச் செல்ல விரும்புகிறேன், ”என்று ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

சிஏஏ எதிர்ப்பு போராட்டம் – 11 மாதங்களுக்குப் பின் சிறையிலிருந்து மீண்ட சிறுவன்

”சிறந்த வாழ்வாதாரத்தைத் தேடி இந்தியா வந்தோம். நீண்ட கால விசா பெற கடந்த ஒரு ஆண்டாக முயற்சித்தும் பயனில்லை. ஊரடங்கு மற்றும் நோய்த்தொற்று காரணமாக எனது குடும்பம் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. அவர்கள் இப்போது திரும்பிச் செல்ல முடிவு செய்து விட்டனர்” என்று ஹைதராபாத்தைச் சேர்ந்த அகதியான மிதுன் எகனாமிக் டைம்ஸ் நாளிதழிடம் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் திரும்பிச் செல்ல விரும்பும் அகதிகளின் விண்ணப்பங்கள் பெரும்பான்மையாக குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகிய பகுதிகளிலிருந்து பெறப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விண்ணப்பங்களைச் சரிபார்க்கும் போது அகதிகளைத் துன்புறுத்துவது மற்றும் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக அந்தச் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.

credits : the indian express
credits : the indian express

சிஏஏ-வின் மூலம் 2014 டிசம்பர் 31 க்கு முன்னர் இந்தியா வந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷின் இஸ்லாமியர் அல்லாத குடிமக்கள், துரிதமாக இந்தியக் குடியுரிமை பெற அனுமதிக்கப்படுவார்கள். இந்தச் சட்டம் கடுமையான எதிர்ப்பை சந்தித்தது. இந்தச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் போராடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குடியுரிமை திருத்த சட்டம் – பாகிஸ்தான் திரும்பும் இந்து மற்றும் சீக்கிய அகதிகள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்