Aran Sei

பஞ்சமி நிலத்தை முறைகேடாக வாங்கிய பாஜக தலைவர் – கைதுக்கு தடை நீங்கியது

பாய்ஜெயந்த் பாண்டா, ஜகி மங்கத் பாண்டா - image credit : indianexpress.com

பாஜகவின் தேசிய துணைத் தலைவர் பாய்ஜெயந்த் பாண்டா அல்லது ஜெய் பாண்டாவுக்குச் சொந்தமான ஒடிசா இன்ஃப்ராடெக் நிறுவனம் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களிடமிருந்து முறைகேடாக நிலக்கைப்பற்றல் செய்த வழக்கில் தலையிடுவதற்கு ஒடிசா உயர்நீதிமன்றம் மறுத்து விட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

“ஓடிவி, அதன் துணை நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்கள், 84 வயதான எனது தந்தை உட்பட எனது குடும்ப உறுப்பினர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் பொய்யானவை. ஒடிசாவின் பிஜூ ஜனதா தள அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை, முதலமைச்சர் நவீன் பட்னாயக்கின் தனிப்பட்ட பழிவாங்கலின் விளைவு” என்று ஜெய் பாண்டாவின் மனைவி ஜகி மங்கத் பாண்டா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்னாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் கட்சியின் ஆட்சி கடந்த 21 ஆண்டுகளாக நடந்து வருகிறது. 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 1 இடத்தில் மட்டும் வெற்றி பெற்ற பாஜக 2019 தேர்தலில் 8 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. பிஜூ ஜனதா தளம் கட்சி 2014-ல் 20 இடங்களிலும், 2019-ல் 12 இடங்களிலும் வெற்றி பெற்றது.

“பிஜூ ஜனதா தளம் அரசாங்கத்தின் பரவலான ஊழலைப் பற்றி எனது கணவர் 5 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தது முதலாகவும், அதன் பின்னர் அவர் பாஜகவில் சேர்ந்த பின்னரும் ஒடிசா அரசாங்கமும் பிஜூ ஜனதா தளமும் எங்களது குடும்பத்தையும் எங்களோடு தொடர்புடைய நிறுவனங்களையும் குறி வைத்து தாக்குகின்றனர், பல இடங்களில் எங்களுக்கு எதிராக வன்முறையை பயன்படுத்தியுள்ளனர்” என்று ஜகி மங்கத் பாண்டா குற்றம் சாட்டியுள்ளார். தனது அறிக்கையை முன்னணி ஊடகங்களையும் டேக் செய்து ட்வீட் செய்துள்ளார்.

ஒடிசா இன்ஃப்ராடெக் நிறுவனத்தை உருவாக்கியவரான ஜகி பாண்டாவுக்கும், ஜெய் பாண்டாவுக்கும் கைது செய்யப்படுவதிலிருந்து அளித்திருந்த பாதுகாப்பையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ஆணையில், நீதிபதி பி பி ரவுத்ரே, “விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது குற்றவியல் நடவடிக்கைகளில் குறுக்கிடப் போவதில்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரிக்கிறேன். இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அனைத்து இடைக்கால உத்தரவுகளும் ரத்து செய்யப்படுகின்றன” என்று கூறியுள்ளார்.

ஒடிசா போலீசின் பொருளாதார குற்றப் பிரிவு அக்டோபர் 31-ம் தேதி ஜெய் பாண்டாவின் நிறுவனமான ஓர்டெல் கம்யூனிகேசனில் ஓட்டுனராக முன்பு பணிபுரிந்த ரபீந்த்ர குமார் சேத்தி என்ற தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் மீது ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. அவர், 2010-க்கும் 2013-க்கும் இடையே ஒடிசாவின் குர்தா மாவட்டத்தைச் சேர்ந்த 22 தலித் மக்களிடமிருந்து 7.294 ஏக்கர் நிலத்தை வாங்கும்படி பாண்டா குடும்பத்தினரால் கட்டாயப்படுத்தப்பட்டார் என்றும், தலித் மக்களுக்குச் சொந்தமான நிலங்களை தலித் அல்லாதவர்கள் வாங்குவதைத் தடுப்பதற்கான மாநில சட்டங்களை மீறுவதற்காக இது செய்யப்பட்டது என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ்.

நிலம் சந்தை விலையில் 50% விலைக்குக் குறைவாக வாங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலத்தை பின்னர் ஒடிசா இன்ஃப்ராடெக் நிறுவனம் ரியல் எஸ்டேட் பயன்பாட்டுக்காக வாங்கியதாக முதல் தகவல் அறிக்கை குற்றம் சாட்டுகிறது. இதற்கு ரூ 65 லட்சம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், ரபீந்த்ர குமார் சேத்திக்கு எந்தத் தொகையும் கொடுக்கப்படவில்லை. பாண்டா குடும்பத்துக்குச் சொந்தமான 100 ஏக்கர் மனைக்கு நடுவில் இருந்த இந்த நிலத்தை தனது ரூ 8,000 மாதச் சம்பளத்தில் சேத்தி வாங்கியதாக காட்டப்பட்டிருந்தது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.

இந்த நிலபேரம் தொடர்பாக ரபீந்திர குமார் சேத்தி முதலில் குர்தா மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்திருக்கிறார். இது தொடர்பான குற்றவியல் பிரிவு விசாரணையில் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் உண்மை என்று தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து ஒடிசா இன்ஃப்ராடெக் நிறுவனத்தின் இயக்குனரான மனோரஞ்சன் சாரதி மற்றும் இன்னொரு ஊழியர் சிப பிரசாத் ஶ்ரீசந்தன் ஆகியயோர் கைது செய்யப்பட்டனர் என்று thewire தெரிவிக்கிறது.

thewire.in உடன் பேசிய ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்ட இருவரும் தாங்கள் ஒடிசா இன்ஃப்ராடெக் நிறுவனத்தின் முழு நேர ஊழியர்கள் இல்லை என்றும், “எல்லா முடிவுகளும் செயல்பாடுகளும் நிறுவன உரிமையாளர்கள் பாய்ஜெயந்த் பாண்டா, ஜகி மங்கத் பாண்டா ஆகியோரின் உத்தரவுப்படிதான் எடுக்கப்பட்டன” என்றும் கூறிதாக தெரிவித்திருக்கிறார்.

ஒடிசா மாநில நில வருவாய் சட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியரின் அனுமதி இல்லாமல் தலித் மக்கள் தமது ஒட்டுமொத்த நிலக் கையிருப்பையும் தலித் அல்லாதவர்களுக்கு விற்பதற்கு அனுமதி இல்லை. விற்பனை சரியான காரணத்துக்காகவும் நோக்கத்துக்காகவும் நடைபெறுகிறது, கட்டாயத்தின் பேரில் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்வதற்காக இந்த விதி உள்ளது.

“இந்த நிலத்தை ஒடிசா இன்ஃப்ராடெக் வாங்கியது தொடர்பான விபரங்கள் எல்லாமே எழுத்தளவில்தான் உள்ளன, இது பினாமி பரிவர்த்தனைகள் சட்டத்தின் கீழான பரிவர்த்தனைகளையும் குற்றத்தையும் குறிக்கிறது” என்றும், “யாரிடமிருந்து நிலம் வாங்கப்பட்டதோ அவர்களது வாக்குமூலங்கள் நீதிபதியின் முன்பு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விட்டன” என்றும் ஒரு மூத்த ஒடிசா போலீஸ் அதிகாரி சொல்வதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.

இந்தப் பரிவர்த்தனைகளில் பெரும்பாலானவை ரொக்கப் பணமாக நடத்தப்பட்டதையும் ஒடிசாவின் பொருளாதார குற்றங்களுக்கான பிரிவு கண்டறிந்துள்ளது.

எஸ்சி/எஸ்டி வன்கொடுமைகள் சட்டம், ஒடிசா நிலச் சீருத்தங்கள் சட்டம், பினாமி சொத்துக்கள் பரிவர்த்தனை தடை சட்டம், வருமான வரி சட்டம் ஆகியவற்றை மீறியதாக பாண்டா குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டப்பட்டு ஒடிசா போலீசால் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று thewire.in தெரிவிக்கிறது.

தமது நிறுவனங்களின் 5 ஊழியர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் 2 பேர் போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் போதே மிரட்டப்பட்டு பதவி விலக வைக்கப்பட்டார்கள் என்றும் ஜகி பாண்டா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

பாஜகவின் சமூக வலைத்தள பிரிவு தலைவர் அமித் மால்வியா, “எதிர்க்கட்சிகள் ஆகும் மாநிலங்களில் தொலைக்காட்சி ஊடகங்கள் அடக்குமுறை எதிர்கொண்டு வருகின்றன. மகாராஷ்டிராவின் காங்கிரஸ்-சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அர்னாப் [கோஸ்வாமி]ஐயும், ரிபப்ளிக் நெட்வொர்க்கையும் குறி வைத்தனர். ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம் ஓடிவியை வேட்டையாடுகிறது” என்று ட்வீட் செய்துள்ளார்.

உயர்நீதிமன்றம் தனது உத்தரவில், முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைப் பற்றி கூறும் போது, “மனுதாரர்கள் [பாண்டா குடும்பத்தினர்] நிலத்தை தமது பெயரில் வாங்குவதற்காக எதிர்த்தரப்பு எண் 3 (சேத்தி)-யை ‘போலி வாங்குபவராக’ பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரிகிறது.”  என்று கூறியுள்ளது.

மேலும், “விசாரணை தொடரும் நிலையில், அது தொடக்க கட்டத்தில் இருக்கும் போது, ஆதாரங்கள் விசாரணையை தொடர்வதை நியாயப்படுத்தவில்லை என்ற வாதம் சரியில்லை என்று தெரிகிறது. குற்றச்சாட்டுகள் அபத்தமானவை என்றும் அடிப்படையிலேயே சாத்தியமற்றவை என்றும் கூட சொல்ல முடியாது” என்று தெரிவித்திருக்கிறது.

பஞ்சமி நிலத்தை முறைகேடாக வாங்கிய பாஜக தலைவர் – கைதுக்கு தடை நீங்கியது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்