Aran Sei

ஊரடங்கு தந்த பரிசு – வாழ்விடங்களில் இருந்து வெளியேறும் பழங்குடிகள்

டிசாவின் மலைப்பகுதியான மல்காங்கிரி மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 3,500 அடி உயரத்தில் அமைந்திருக்கும் போண்டா பழங்குடி கிராமங்களைச் சென்றடைவது எளிதானதல்ல. அதனால்தான் போண்டா பழங்குடி மக்கள், இந்த நவீனச் சமூகத்தின் நீரோட்டத்திலிருந்து ஒதுங்கியே வாழ்கிறார்கள்.

ஆனால், போண்டா மக்களில் இளவயது உடையவர்களை தொலைதூர நகரங்களுக்குக் குறைந்த ஊதியத்திற்காக அழகிய கிராமங்களை விட்டு வெளியேறும் கட்டாயத்தை, ஒதுங்கி வாழும்முறை ஏற்படுத்தாமல் இல்லை. மேலும், இந்தக் கொரோனா தொற்றுநோய், இந்த இடம்பெயர்வை வேகப்படுத்தியுள்ளது.

பழங்குடியினர் வீட்டில் `லஞ்ச்’ – மேற்கு வங்கத்தில் அமித் ஷா புது வியூகம்

60 வயதான சோம்பாரி முதுலி, தனது கிராமத்திலிருந்து 80 கிமீ தூரத்தில் உள்ள மல்கன்கிரி மாவட்ட தலைநகருக்கு ஒரு முறைதான் சென்றுள்ளார். ஆனால், அவரது 16 வயது மகள் குருபரி, விசாகப்பட்டினத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் வேலை செய்ய, மாநில எல்லைகளைத் தாண்டியுள்ளார்.

கொரோனா தொற்று பரவல் குறையும் வரை காத்திருக்காமல், குருபாரி சில மாதங்களுக்கு முன்பு வேலைக்காகப் புலம்பெயர்ந்துவிட்டார். அதே பகுதியைச் சேர்ந்த, 16 வயதான பிரதான் பத்ரியும், 17 வயதான குஜி சிசாவும் பொதுமுடக்கத் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே ஆந்திராவுக்கு வேலை தேடிச் சென்றுவிட்டனர்.

பள்ளிப்படிப்பு

தொற்றுக் காலத்துக்கு முன்னர், படித்துக்கொண்டிருந்த போண்டா பள்ளி மாணவர்களிடமும், இந்த ஊரடங்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் வசதி இல்லாததால், ஊரடங்கு காலத்தில் அந்த மாணவர்களால் கல்வியைத் தொடர முடியாமல் போனது என்று ஆண்ட்ரஹால் கிராமத்தைச் சேர்ந்த சதா ஹந்தல் கூறியுள்ளார்.

மேலும், “பள்ளிப் படிப்பை நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது” என்றும், “அவர்கள் படிப்பை விடும் முடிவை எடுக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. உடனே தொழிலாளர் முகவர்களிடம் சென்று விட்டனர். அவ்வாறு மாணவர்களின் படிப்பு இழுத்து மூடப்பட்டது” என்றும் சதா ஹந்தல் தெரிவித்துள்ளார்.

மூடப்படும் சந்தைகள்

போண்டா இன மக்கள் பெரும்பாலும் அரசின் உணவு மானியங்களை நம்பியிருந்தார்கள். அதனால், உணவு விஷயத்தில் ஊரடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், பல மாதங்களாகச் சந்தை அடைக்கப்பட்டிருந்ததால் அவர்கள் தங்கள் நிலங்களிலும் வனங்களிலும் உற்பத்தி செய்தவற்றை விற்க முடியவில்லை.

மேற்கு வங்க தேர்தல் – குடியுரிமை திருத்தச் சட்டத்தை கையில் எடுக்கும் பாஜக

“நான் முந்திரிப் பருப்புகளை மொத்தமாக விற்பனை செய்து, ஆண்டு முழுவதும் அந்தப் பணத்தை எங்கள் தேவைகளுக்கு வைத்துக்கொள்வோம். இப்போது, ​​எங்கள் தேவைகள் அதிகரித்துள்ளன. அதைப் பூர்த்தி செய்ய, என் மகள் வேலை தேடி கிராமத்தை விட்டு வெளியேற வேண்டியிருக்கிறது.” என்று சோம்பாரி முதுலி கூறியுள்ளார்.

வளர்ச்சித் திட்டங்கள்

மலையுச்சியில் வாழும் இந்தப் பழங்குடி சமூகம் மிகவும் பின் தங்கியிருப்பதால், ஒடிசா அரசு 1976-77 காலத்திலேயே அவர்களின் வளர்ச்சிக்கு ஒரு திட்டத்தைத் தொடங்கியது.

`பழங்குடியினரை மதம் மாற்றுவது பொறுத்துக்கொள்ள முடியாது’ : மத்தியப் பிரதேச முதல்வர்

போண்டா மேம்பாட்டு நிறுவனம் (பிடிஏ) என்ற பெயரில் மொத்தம் நான்கு கிராமப் பஞ்சாயத்துகளிலிருந்து 32 குடியிருப்புகள் திட்டத்தில் சேர்க்கப்பட்டன. மல்கன்கிரியின் உயரமான மலைச் சிகரங்களில் 1,919 போண்டா குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

ஆனால், பல ஆண்டுகளாக அரசின் தலையீடு இருந்தபோதிலும், போண்டாஸ் இன மக்கள் மத்தியில் சொல்லிக்கொள்ளும் படியான எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை.

சிறையில் மனிதாபிமானம் ததும்புகிறது – ஸ்டேன் சாமி உருக்கம்

நிதி ஒதுக்கீடுகள்

ஒடிசா மாநிலப் பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடத்திய மதிப்பீட்டின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் போண்டா மேம்பாட்டு நிறுவனத்துக்கு, 18.23 கோடி ஒதுக்கப்பட்டிருந்தாலும், அதில் 11.57 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

போண்டா மக்களுக்கான வாழ்வாதாரங்கள் குறைந்துகொண்டே வந்தாலும், அதைச் சரி செய்வதற்கான நிதியைச் செலவு செய்ய போண்டா மேம்பாட்டு நிறுவனத்துக்குத் திறன் இல்லை என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.

இதற்கு, மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும் தன்மை இல்லாதது ஒரு முக்கியக் காரணம். இந்த 32 குடியிருப்புகளில், 16 கிராமங்களில் சாலைகள் இல்லை. அந்த கிராமங்களைக் கடினமான பாதை வழியாகத்தான் சென்றடைய முடியும்.

“ஒரு சமூகத்தின் வாழ்வாதார நிலையை மதிப்பிடுவதற்கான குறியீடாக இடம்பெயர்வு உள்ளது. போண்டா மக்களிடையே பல ஆண்டுகளாக இந்த இடம்பெயர்வுகள் அதிகரித்துள்ளன.” என்று பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

(’தி இந்து’ இணையதளத்தில் வந்த கட்டுரையின் சுருக்க மொழியாக்கம்.)

ஊரடங்கு தந்த பரிசு – வாழ்விடங்களில் இருந்து வெளியேறும் பழங்குடிகள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்