Aran Sei

புதிய கல்விக்கொள்கையில் ‘இடஒதுக்கீடு’ என்ற சொல்லே இடம் பெறாதது ஏன்? – சீதாராம் யெச்சூரி

‘புதிய கல்வி கொள்கை 2020′ இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்கின்றதா?, என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய கல்விக் கொள்கைக்கு, இந்த ஆண்டு, ஜூலை மாதம், மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது 34 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1986-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட கல்வி தொடர்பான தேசிய கொள்கையை மாற்றியமைக்கிறது. புதிய கொள்கையில் இடஒதுக்கீடை பற்றிய விவரம் எதுவும் இடம்பெறவில்லை.

இது தொடர்பாக சீதாராம் யெச்சூரி பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவர ‘புதிய கல்வி கொள்கை 2020’ முயல்கிறதா? இல்லையென்றால், இதில் இட ஒதுக்கீடு பற்றி ஏன் குறிப்பிடப்படவில்லை என்பதை தெளிவுபடுத்த முடியுமா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘பல முக்கியமான காரணங்களுக்காக’ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்தில் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்ததாகவும், ஆனால், எந்த ஒப்புதலும் இல்லாமல் இது செயல்படுத்தப்படுவதாகவும் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.

எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூகங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இடையே பெரும் கவலையை ஏற்படுத்தும் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையை குறித்து கவனத்தை கொண்டுவர, தான் இந்த கடிதத்தை எழுதியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

“இந்த புதிய கொள்கையினால் பெரும் சீர்திருத்தங்கள் ஏற்படும் என்று உங்கள் அரசு அறிவித்தது. ஆனால், இதன் மூலம் நன்மை ஏற்படுமா என்பதை குறித்த நிச்சயமற்ற தன்மையும் குழப்பமும் உருவாகியுள்ளது” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“புதிய கல்விக் கொள்கையில், இந்தப் பிரிவுகளுக்கான இட ஒதுக்கீட்டைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஆசிரியர் அல்லது பிற பணி நியமனம், மாணவர் சேர்க்கை ஆகியவற்றில் இட ஒதுக்கீட்டை குறித்த விவரம் இடம் பெறவில்லை. இன்னும் சொல்லப் போனால், ‘இட ஒதுக்கீடு’ எனும் சொல்லே கொள்கை ஆவணத்தில் எங்கும் இடம்பெறவில்லை” என்று சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

“இது வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டுள்ளதா எனும் கவலை பரவலாக ஏற்பட்டுள்ளது. இது இந்திய கல்வி முறையில் தரம், அளவு மற்றும் சமத்துவத்தை ஒருங்கிணைக்க பல தசாப்தங்களாக எடுக்கப்பட்ட முயற்சிகளை முறியடிக்கும் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது” என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக்கொள்கையில் ‘இடஒதுக்கீடு’ என்ற சொல்லே இடம் பெறாதது ஏன்? – சீதாராம் யெச்சூரி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்