Aran Sei

“இது நரேந்திர மோடி அரசின் அராஜகத்திற்கு எதிரானது” – டெல்லி சலோ குறித்து ராகுல்காந்தி ட்வீட்

ந்தியா முழுவதும் தொழிற்சங்கங்களால் நடத்தப்பட்டுவரும் பொது வேலை நிறுத்தம் மற்றும் விவசாயச் சங்கங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள ‘டெல்லி சலோ’ (டெல்லி போவோம்) பேரணி ஆகியவற்றால் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

மத்திய அரசின் விவசாய மற்றும் தொழிலாளர் சட்டங்களைக் கண்டித்துத் தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. தேசிய தலைநகரை இணைக்கும் ஐந்து நெடுஞ்சாலைகள் வழியே ‘டெல்லி சலோ’ (டெல்லி போவோம்) பேரணியில் விவசயிகள் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு வங்கம், கேரளா மற்றும் தமிழகத்தில் பெரும் பேரணிகள் நடைபெற்றுள்ளன. ஒடிசா, பஞ்சாப், ஹரியானா, தெலங்கானா, மகாராஷ்டிரா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களிலும் “நல்ல எதிரொலி” இருந்ததாக ஏஐடியுசிவின் பொதுச் செயலாளர் அமர்ஜீத் கவுர் தெரிவித்துள்ளார்.

டெல்லி உட்பட கிட்டத்தட்ட அனைத்து முக்கிய நகரங்களிலும் எதிர்ப்புப் பேரணிகள் நடைபெற்றன.

இந்திய பொது வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக மதுரையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தினை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தொடங்கி வைத்துள்ளார். இது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள சு.வெங்கடேசன் “போராட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துத் தொழில்சங்க இயக்கங்களுக்கும், தோழர்களுக்கும் வாழ்த்துகள்..” என்று கூறியுள்ளார்.

“மத்திய அரசின் மக்கள்விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், வேளாண் மற்றும் தொழிலாளர் நலச்சட்ட திருத்தங்களை எதிர்த்தும் நடைபெறும் அகில இந்தியப் பொது வேலை நிறுத்தத்தின் பகுதியாக மதுரையில் நடைபெற்ற மறியல் போரினை துவக்கி வைத்தேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். #26November #GeneralStrike #StrikeHard போன்ற ஹாஷ்டகுகளையும் பயன்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி “இதுதான் உண்மையான இந்தியப் பிரதமர் மோடி. நீங்கள் எங்களின் கோரிக்கைகளைக் கேட்பதற்கான கட்டாயத்தை ஏற்படுத்துவோம். உங்கள் தேச விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளை வாபஸ் பெறுங்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில், சிஐடியூ தொழிற்சங்கத்தின் சார்பில் ஆட்டோக்களின் பேரணி நடைபெற்றுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இந்திய அளவில் வைரலாகியுள்ளது.

இந்தப் புகைப்படத்தை தொழிற்சங்கத்தினர் மட்டுமல்லாமல் பலரும் பகிர்ந்துவருகின்றனர். “இன்றைய செயல்பாடுகளின் தீவிரமும் அழகியலும் நம் கண்களுக்கு விருந்தாகியுள்ளது” போன்ற பல வாசகங்கள் இந்தப் புகைப்படத்துடன் பகிரப்படுகின்றன.

இதற்கிடையில், அம்பாலா அருகே டெல்லி-ஹரியானா எல்லையில் ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காவல்துறையினர் தண்ணீர் பீரங்கிகள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர். விவசாயிகள் காவல்துறையினரால் அமைக்கப்பட்ட தடுப்புகளை ஆற்றில் வீசியுள்ளனர். காவலர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இடையே மோதலும் ஏற்பட்டுள்ளது.

இதைப் பற்றிக் கருத்து தெரிவித்துள்ள காங்கிரசின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “இந்தியாவின் விவசாயிகள் நரேந்திர மோடி அரசின் அராஜகத்திற்கு எதிராக உறுதியாக நிற்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

“உங்கள் நாட்டின் விவசாயிகளை இது போன்று நடத்தக் கூடாது திரு.நரேந்திர மோடி. இதற்கான விலையை நீங்கள் செலுத்த வேண்டும்” என்று ஒரு ட்விட்டர் பயனாளி தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் ஆதரவாகப் பலர் கருத்து பதிவிட்டு வந்த நிலையில், “அமைதியான முறையில் போராடுவது விவசாயிகளின் உரிமை” என்று தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் “விவசாயிகள் மீதான இந்த அடக்குமுறை முற்றிலும் தவறானது” என்றும் கூறியுள்ளார்.

“இது நரேந்திர மோடி அரசின் அராஜகத்திற்கு எதிரானது” – டெல்லி சலோ குறித்து ராகுல்காந்தி ட்வீட்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்