Aran Sei

`காஷ்மீரில் ஒன்பது லட்சம் ராணுவப் படைகள் எதற்கு’ – மெஹ்பூபா முப்தி கேள்வி

காஷ்மீரில் மத்திய அரசு ஜனநாயகத்தைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டியதோடு, அங்கு எதற்கு ஒன்பது லட்சம் ராணுவப் படைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன என்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் (டிடிசி) தேர்தல் நடந்து வருகிறது. அதில், நீக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட குப்கர் கூட்டணியைச் சேர்ந்த தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி ஆகியவை ஓரணியாகப் போட்டியிடுகின்றன.

மேலும், பாஜக, மற்றும் பிறகட்சிகள் ஓரணியாகப் போட்டியிடுகின்றன. நேற்று முன் தினம் (நவம்பர் 28) முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் தேர்தல்: நிலவும் மும்முனைப் போட்டி

இந்நிலையில், நேற்று (நவம்பர் 29), ஸ்ரீநகரில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹ்பூபா முப்தி செய்தியாளரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

அப்போது, “மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் (டிடிசி) தேர்தலிலும் மேயர் தேர்தலிலும் அவர்கள் (மத்திய அரசு) ஜனநாயகத்தைக் கொலை செய்கிறார்கள். எல்லா குப்கர் கூட்டணி வேட்பாளர்களும் வீடுகளில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் மற்றவர்கள் முழுச் சுதந்திரத்தையும் அனுபவிக்கிறார்கள்.” என்று விமர்சித்துள்ளார்.

காஷ்மீர் மாவட்ட கவுன்சில் தேர்தல் – குழிதோண்டி புதைக்கப்படும் ஜனநாயகம்

டிடிசி தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்த சில நாட்களிலேயே, பயங்கரவாதிகளோடு தொடர்பு இருப்பதாகக் கூறி, மக்கள் ஜனநாயகக் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் பர்ரா வாஹீத் கைது செய்யப்பட்டார். அவரைப் பற்றிப் பேசும் போது, அவர் ஜனநாயகத்திற்காகவும் நல்லிணக்கத்திற்காகவும் மக்களிடம் உரையாடினார் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

“14 மாதங்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், ஜனநாயகத்தை உயிரோடு வைத்திருப்பதற்காகத் தேர்தலில் போட்டியிட பர்ரா வாஹீத் முடிவு செய்தார். ஆனால், அடுத்த நாளே அவருக்குத் தேசியப் புலனாய்வு அமைப்பிலிருந்து (என்ஐஏ) கைது செய்யப்படுவதற்கான அழைப்பு வந்தது.” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் – உரிமையை இழந்த மக்களின் கதை

பாஜக ஆட்சியில் மாற்றுக்கருத்துகள் `தேச விரோதம்’ என்று பச்சைக்குத்தப்பட்டு, தேச விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுகின்றன என்றும் பாஜக ஆட்சி செய்யும் இந்தியாவில் உண்மையான ஜனநாயகத்திற்கு இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

“முஸ்லிம்களை பாகிஸ்தானியர்கள் என்றும், சீக்கியர்களை காலிஸ்தானியர்கள் என்றும் மாணவர்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் தேச விரோதிகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். எல்லோரும் தேச விரோதிகள் என்றால் இந்தியர்கள் யார்? பாஜக மட்டும் தானா? ” என்று மெஹ்பூபா முப்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

‘ஜம்மு காஷ்மீர் விற்பனைக்கு’ – நிலத்தின் மீது உரிமையை இழந்த மக்கள்

மேலும், “370 வது சட்டப் பிரிவை நீக்கியதால், காஷ்மீரின் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுவிட்டன என்றால், ஏன் ஒன்பது லட்சம் ராணுவப் படைகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிறுத்தப்பட்டுள்ளன? அவை ஏன் எல்லைகளுக்கு அனுப்பப்படவில்லை? ” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிக வாக்குப்பதிவு சதவீதம் காஷ்மீரின் பிரச்சினையில் எந்தத் தீர்வையும் கொடுக்காது என்றும், கடந்த தேர்தல்களிலும் இதே வாக்குப்பதிவு சதவீதம் பதிவானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீர்: உரிமைகள் மறுக்கப்பட்டதன் நினைவு நாள் -ஆகஸ்ட் 5

ரோஷ்னி வழக்கில் ஏழைகளுக்கு எதிராக மத்திய அரசு உபயோகிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும்,”பாஜக பெரிய மீன்களைப் துரத்திப் பிடிக்க வேண்டும். ஆனால் அரை ஏக்கர் நிலம் கூட இல்லாத ஏழைகளை அல்ல. துரதிர்ஷ்டவசமாக, ஏழைகளுக்குத்தான் வழக்கு நோட்டீஸுகள் அனுப்பப்படுகின்றன.”என்று மெஹ்பூபா முப்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

`காஷ்மீரில் ஒன்பது லட்சம் ராணுவப் படைகள் எதற்கு’ – மெஹ்பூபா முப்தி கேள்வி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்