Aran Sei

‘துப்பாக்கிகளுக்கு எதிராக போராடிய எங்களுக்கு எலிகளை கண்டு பயமில்லை’ – பாஜகவை எச்சரித்த மம்தா பானர்ஜி

சிறைசாலைகளை காட்டி எங்களை பயமுறுத்த முயற்சிக்க வேண்டாம் என்றும் துப்பாக்கிகளுக்கு எதிராக போராடிய எங்களால், எலிகளுக்கு எதிராக போராடுவதில் எந்த பயமும் இல்லை என்றும் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

நேற்று (பிப்ரவரி 21), மேற்கு வங்க தலைநகர் கல்கத்தாவில் உலக தாய்மொழி தினத்தையொட்டி நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார்.

மாநில அமைச்சர் மீது வெடிகுண்டு வீச்சு: ‘கட்சி மாற வற்புறுத்தி தாக்குதல்’ – மம்தா குற்றஞ்சாட்டு

அதில், “சிறைசாலைகளை காட்டி எங்களை பயமுறுத்த முயற்சிக்க வேண்டாம். துப்பாக்கிகளுக்கு எதிராக போராடிய எங்களுக்கு, எலிகளுக்கு எதிராக போராடுவதில் எந்த பயமும் இல்லை. நான் உயிரோடிருக்கும் வரை, உங்களின் எந்த மிரட்டலுக்கும் நான் அஞ்ச மாட்டேன்.” என்று பாஜகவை மறைமுகமாக அவர் எச்சரித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், “2021-ம் ஆண்டில் ஒரு சவால் இருக்கிறது. யாருடைய வலிமை அதிகம் என்பதை பார்ப்போம். இந்தாண்டு ஒரே ஒரு விளையாட்டு மட்டுமே நடக்கும். அந்த போட்டியில் நான் கோல்கீப்பராக இருப்பேன். யார் வெற்றி பெறுகிறார்கள். யார் தோல்வியுறுகிறார்கள் என்பதைப் பார்க்க விரும்புகிறேன். நாங்கள் தோல்வியடைய கற்றுக் கொடுக்கப்படவில்லை. அவர்களால் எங்களை தோற்கடிக்க முடியாது.” என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளதாக அச்செய்தி தெரிவித்துள்ளது.

”நான் வாழும் காலம் வரை, வங்கப் புலி போல வாழ்வேன்” – ஜே.பி.நட்டாவிற்கு மம்தா பானர்ஜி பதிலடி

நிலக்கரி மோசடி வழக்கு தொடர்பாக மம்தாவின் சகோதரர் மகனும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜியின் மனைவிக்கும் மைத்துனருக்கும் சிபிஐ நோட்டீஸ் அனுப்பியதை  அடுத்து, மம்தா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அபிஷேக் பானர்ஜி, “இன்று பிற்பகல் 2 மணியளவில், சிபிஐ என்னுடைய மனைவியின் பெயரில் ஒரு நோட்டீஸை அனுப்பியது. இந்நாட்டின் சட்டங்களுக்கு மேல் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த சூழ்ச்சிகளைப் பயன்படுத்தி நம்மை அச்சுறுத்திவிடலாம் என்று அவர்கள் நினைத்தால், அவர்கள் தப்புக்கணக்கு போடுகிறார்கள். நாங்கள் ஒருபோதும் கோழைகளாக இருக்க மாட்டோம்.” என்று கூறியுள்ளார்.

‘துப்பாக்கிகளுக்கு எதிராக போராடிய எங்களுக்கு எலிகளை கண்டு பயமில்லை’ – பாஜகவை எச்சரித்த மம்தா பானர்ஜி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்