பஞ்சாபின் பர்னாலாவில் நடந்த விவசாயிகள் – தொழிலாளர்கள் ஒற்றுமை பொதுக்கூட்டத்தில், விவசாய சங்கத் தலைவர்கள் “பஞ்சாபுக்கு வராதீர்கள்” என்று டெல்லி போலீசுக்கு அறைகூவல் விடுத்துள்ளனர்.
குடியரசு தினத்தன்று நடந்த வன்முறை தொடர்பாக டெல்லி போலீஸ் அனுப்பும் நோட்டீஸ்களை கிழித்து எறியுமாறும், அவர்களை கைது செய்ய வரும் போலீஸ் படையினரை முற்றுகையிடுமாறும் விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் கேட்டுக் கொண்டுள்ளனர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.
விவசாயிகளின் குடியரசு தின பேரணியில் நடந்தது என்ன? – ஊடகங்களின் பிரச்சாரம் உண்மையா?
ஆயிரக்கணக்கான விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் கலந்த கொண்ட “விவசாயி-தொழிலாளர் ஒற்றுமை” பொதுக்கூட்டத்தின் போது இந்த அறைகூவல்களை விவசாய சங்கங்கள் வெளியிட்டுள்ளன. இந்த கூட்டத்துக்கு பாரதிய கிசான் யூனியன் (உக்ரஹான்)-ம், பஞ்சாப் விவசாய தொழிலாளர் யூனியனும் அழைப்பு விடுத்திருந்தன.
(Images from Twitter)
இந்தக் கூட்டம் பற்றி “பர்னாலாவில் இன்று நடந்த விவசாயிகளின் மகாபஞ்சாயத்து” என்று புகைப்படங்களை உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ட்வீட் செய்துள்ளார்.
This is today's Kisan Mahapanchayat at Barnala. And the Govt & its Godi media says that the Farmers movement has fizzled out! No wonder the BJP scored a 🦆 in the municipal polls in Punjab. pic.twitter.com/0Equc0DrJD
— Prashant Bhushan (@pbhushan1) February 21, 2021
“விவசாயிகள் போராட்டம் பிசுபிசுத்துப் போனது என்று அரசும், அதன் அடிமை ஊடகங்களும் கூறுகின்றன!” என்றும் பிரசாந்த பூஷண் கிண்டல் செய்திருந்தார்.
கூட்டத்தில் பேசிய பாரதிய கிசான் யூனியன் (உக்ரஹான்) தலைவர் ஜோகிந்தர் சிங் உக்ரஹான் குடியரசு தின வன்முறை அரசால் தூண்டிவிடப்பட்ட ஒரு கும்பலால் நிகழ்த்தப்பட்டது என்று கூறியிருக்கிறார்.
“ஜனவரி 26 நிகழ்வு தொடர்பாக அவர்கள் முன் விசாரணைக்கு வரும் நோட்டீஸ்களை பொருட்படுத்தத் தேவையில்லை. அவற்றை எரித்து விடுங்கள். இந்த ஆணைகள் தொடர்பாக பஞ்சாபுக்குள் வர வேண்டாம் என்று டெல்லி போலீசை எச்சரிக்கிறோம். பஞ்சாப் போலீசும் இந்த நோட்டீஸ்கள் தொடர்பாக விவசாயிகளை தொந்தரவு செய்யக் கூடாது.” என்று ஜோகிந்தர் சிங் உக்ரஹான் கூறியுள்ளார்.
விவசாய சங்கங்களுக்கிடையே வேறுபாடுகள் உள்ளன என்று மத்திய அரசு காட்ட விரும்புகிறது, ஆனால், “இங்க நாங்கள் எல்லோரும் ஒரே மேடையில் இருக்கிறோம். இந்தப் போராட்டத்தை நடத்திச் செல்வதற்கான வலிமை எங்களுக்கு உள்ளது. சகோதரர்களிடையே வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் வெளி ஆட்கள் தாக்கும் போது ஒருவரை ஒருவர் பாதுகாத்துக் கொள்ள ஒன்று சேர்ந்து விடுவார்கள்.” என்று ஜோகிந்தர் சிங் உக்ரஹான் கூறியுள்ளார்.
மாநிலங்களில் விவசாயிகளின் மகாபஞ்சாயத்துகள் : டெல்லி எல்லையில் போராட்டம் வலுவிழக்கிறதா ?
“இந்தப் போராட்டம் நமது குழந்தைகளின் எதிர்காலத்துக்கானது. இது நமது நாட்டின் மதச்சார்பற்ற மக்களுக்கானது. இது அரசு-கார்ப்பரேட் கூட்டுக்கு எதிரானது” என்று அவர் கூறியுள்ளார்.
பாரதிய கிசான் யூனியன் (ராஜேவால்) தலைவர் பல்பீர் சிங் ராஜேவாலும் இதே போன்ற அறைகூவல் விடுத்தார்.
“எங்களுக்கு ‘லங்கர்’ உணவுப் பொருட்களை கொண்டு வருபவர்களுக்கும், உதவி செய்பவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இதை யாரும் பொருட்படுத்த வேண்டாம். விசாரணைக்குப் போக வேண்டாம்” என்று அவர் பேசியுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு ஹரியானா பாரதிய கிசான் யூனியன் தலைவர் குர்னான் சிங் சதுனி, டெல்லி போலீஸின் நோட்டீஸ்களை பொருட்படுத்த வேண்டாம் என்று கூறியிருந்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.
பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் பாஜக படுதோல்வி – விவசாயிகள் போராட்டம் காரணமா?
பஞ்சாப் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் லச்மன் சிங், “மத்திய அரசின் விவசாயச் சட்டங்கள் விவசாயத் தொழிலாளர்களின் வேலை வாய்ப்புகள் மீதும், வாழ்வாதாரத்தின் மீதும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்” என்று பேசியுள்ளார்.
தொழிலாளர், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட தலித் இளம் பெண் – காவல் நிலையத்தில் சித்திரவதை
பாரதிய கிசான் யூனியர் (ஏக்தா உக்ரஹான்) பொதுச் செயலாளர் சுக்தேவ் சிங் கொக்ரிகாலன், கர்னால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தொழிலாளர் உரிமை செயல்பாட்டாளர் நவ்தீர் கவுரை விடுவிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.