காஷ்மீர் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தலுக்கான, தேர்தல் அறிக்கையில் உள்ளூர் மக்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீட்டில் 70,000 வேலை வாய்ப்புகள் வழங்குவதாகப் பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
மேலும், தனியார் துறையில் வேலைவாய்ப்புகள், நட்பான முறையில் தொழில்துறை கொள்கைகள் மற்றும் தூய்மையான, வெளிப்படையான நிர்வாகம் ஆகியவற்றை உறுதி செய்வதாகக் கூறியுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் மாவட்ட மேம்பாட்டு கவுன்சிலுக்கு (பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்), நவம்பர் 28 முதல் டிசம்பர் 24 வரை 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.
நேற்று (நவம்பர் 26), பாஜக மாநில பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தேவிந்தர் சிங் மன்யால் மற்றும் தலைமை செய்தித் தொடர்பாளர் சுனில் சேதி ஆகியோர் இணைந்து கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
காஷ்மீர் மாவட்ட கவுன்சில் தேர்தல் – குழிதோண்டி புதைக்கப்படும் ஜனநாயகம்
அந்த அறிக்கையில், 70,000 வேலை வாய்ப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் 100 சதவீத அரசு வேலைகளை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்குவதால், அவர்கள் பயனடைவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
#DDCElections#JKWithBJP
J&K BJP Election Manifesto for DDC Election.@ImRavinderRaina @AshokKoul59 @ianuragthakur @tarunchughbjp pic.twitter.com/r3n0R3No8A— BJP Jammu & Kashmir (@BJP4JnK) November 26, 2020
காஷ்மீர் தொழில்துறையின் வளர்ச்சிக்குப் பெரிய அளவில் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்குத் தனியார் துறையில் முதலீடுகள் கொண்டு வரவும் தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழில்துறை கொள்கைகள், மாநில தொழில்துறையின் வளர்ச்சிக்கு பெரிதும் கவனம் செலுத்தும் என்றும் தினசரி கூலிகள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை முறைப்படுத்துவதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
”ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து நிலத்தை மீட்டெடுத்து, வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை அகற்றுவோம்.” என்று அறிக்கையில் பாஜக தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. அதன்பிறகு, நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, சிறப்பு அந்தஸ்து நீக்கம், ஜம்மு காஷ்மீரில் ஒரு புதிய தொடக்கத்தை உண்டாக்கும் என்றும், காலி பணியிடங்களை நிரப்ப அரசு ஈடுபாடுடன் இருக்கிறது என்றும் அவர் கூறியிருந்தார்.
ஆனால், அதன் பின் கடந்த ஓராண்டில், காஷ்மீரில் 5 லட்சம் மக்கள் வேலை இழந்துள்ளனர் என்றும் கல்வி, சேவை, போக்குவரத்து, வணிகம் ஆகிய துறைகள் 40 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்புகளை சந்தித்துள்ளது என்றும் காஷ்மீர் தொழில்துறை மற்றும் வணிகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கையில், ஜம்மு காஷ்மீரில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 11.1 சதவீதம் உள்ளது என்றும் இந்தியாவின் பிற பகுதியில் வேலைவாய்ப்பின்மையின் அளவு சராசரியாக 8.3 சதவீதமாக உள்ளது என்றும் ’தி வயர்’ இணையதளம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.