இந்தியாவோடு விரைவாக இணைவது பாகிஸ்தானுக்கு நல்லது. அகண்ட பாரதம் எதிர்காலத்தில் நிகழும் என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், இந்து மதம், இஸ்லாம், பாகிஸ்தான் தொடர்பான கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார். அதில், ”இந்து என்பது ஒரு மதமோ, ஒரு நம்பிக்கையோ, ஒரு பிரிவோ கிடையாது. இந்து என்பது ஒரு கலாச்சார பெயர். இந்து அடையாளம் என்பது ஒவ்வொரு இந்தியருக்குமான கலாச்சார குடியுரிமை.
இந்தியாவிலிருந்து ஹஜ் செல்பவர்களை, அங்குள்ளவர்கள்(அரபுக்கள்) இந்து என்றுதான் குறிப்பிடுகிறார்கள். ஒருவரும் இவர்களை(இந்தியாவிலிருந்து ஹஜ் செல்பவர்களை) ஹாஜியாக பார்ப்பதில்லை. ஒருவரும் இவர்களை இஸ்லாமியர்களாக ஏற்பதில்லை. இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது இந்தியா ஒரு இந்து நாடு என்பது புரியும். ஏனெனில் இங்குள்ள குடிமக்கள் எல்லோரும் இந்துக்கள்தான். இந்து என்பதை மதத்தோடோ, நம்பிக்கையோடோ, பிரிவோடோ நாம் இணைக்கிறோம் என்றால், புரிந்துகொள்வதில் நாம் தவறு செய்கிறோம் என்று அர்த்தம்.
ஆன்மிக உலகில் பாகிஸ்தானுக்கு உண்மையான தனி அடையாளம் என்று ஏதுமில்லை. ஒன்று உண்மையானதாக இல்லாதபோது அது நீண்ட காலம் நீடிக்காது. அது இந்தியாவோடு விரைவாக இணைவது அதற்கு நல்லது. அகண்ட பாரதம் ஒரு உண்மை. எதிர்காலத்தில் அது நிகழும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Source : the hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.