சார்னா குறியீடு ஜார்க்கண்ட் பழங்குடிகளின் வாழ்வில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தப் போவது எப்படி?
தங்கள் மாநிலத்தில் உள்ள பழங்குடி சமூக மக்களை இனி “சார்னா” என்ற தனி மதப் பிரிவினராக அடையாளப்படுத்தலாம் என ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேரவை நிறைவேற்றியுள்ள தீர்மானம் நீண்ட கால சமூகப் பொருளாதார தாக்கங்களை உண்டாக்கும். நவம்பர் 2000-ல் ஜார்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்தை இந்த நகர்வு நிறைவு செய்கிறது என வல்லுனர்கள் கருதுகின்றனர்.
“மாநில அரசின் இந்தச் செயலுக்குப் பின்னால் உள்ள பகுத்தறிவு சிந்தனையை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என நான் நினைக்கிறேன். ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டதே பழங்குடி சமுதாயங்களின் நலனை பாதுகாப்பதற்காகத்தான். இந்த நகர்வு பழங்குடி சமுதாயங்களின் தனித்துவமான மத பழக்க வழக்கங்களை அங்கீகரிக்கிறது.” என்கிறார் கவுஹாத்தி, டாடா சமூக அறிவியல் நிறுவனத்தின் சமூக அறிவியல் மற்றும் மனித இனங்கள் துறையின் தலைவர் ஜகன்நாத் அம்பாகுடியா. இவர் ‘இந்திய பழங்குடி அரசியல் கையேடு’ என்ற புத்தகத்தை எழுதுபவர்களில் ஒருவர்.
நவம்பர் 11 க-ம் நாள் நடந்த சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவையில் முதல்வர் ஹேமந்த் சோரன் இதனை முன்மொழிந்தார். தீர்மானம், குரல் வாக்கெடுப்பு மூலம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தால் வரும் 2021-ம் ஆண்டு எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது இந்த சமுதாயங்களைச் சேர்ந்த மக்களை தனித்த மதக் குழுவினராக அடையாளப்படுத்திக் கொள்வதற்கு தனி இடம் இருக்கும். தற்போது அவர்கள் தனி மதப் பிரிவைச் சேர்ந்தவர்களாகக் குறிப்பிடப்படுவதில்லை.
முதலமைச்சர் ஹேமந்த் சோரன், இதில் அரசியல் பார்க்காமல் அனைத்து எதிர்கட்சிகளும் ஆதரவு தருவார்கள் என எதிர்பார்ப்பதாகக் கூறினார். “சார்னா குறியீடு பழங்குடி மக்களுக்கு முக்கியமானது. அதை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக உள்ளது. மேலும், இது நாட்டிற்கு ஒரு நல்ல செய்தியை தரும்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.
எனினும் எதிர்கட்சிகள் அரசு இதில் அரசியல் செய்வதாகக் கூறுகின்றன. “நான் இது தொடர்பாக சில தொழில்நுட்ப பிரச்சனைகளை எழுப்ப விரும்பினேன். ஆனால் எனக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை.” என்கிறார் பாஜக தலைவர் பாபுலால் மரான்டி.
இந்த நடவடிக்கையை வரவேற்கும் பழங்குடி மக்கள் உரிமைக்கானப் போராளி நீட்டிஷா (Neetisha Xalxo), “இது பழங்குடி சமுதாயங்களின் உறுப்பினர்களுக்கு ஒரு நல்ல அறிகுறி. இது பழங்குடி சமுதாயங்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். எதிர்காலத்தில் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய நாள். இதற்காக அவர்கள் பல பத்தாண்டுகளாக கோரிக்கை எழுப்பி வருகிறார்கள்.” என்று கூறியுள்ளார்.
1872 லிருந்து 1941 வரை, மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஆதிவாசி மதம் என ஒரு வகைப்பாடு இருந்ததாகவும், “ஆதிவாசிகள்” நாட்டின் மூன்றாவது அதிக தொகையினர் என்றும் அவர் கூறுகிறார். ஆனால் 1951-ல் அது மாற்றப்பட்டு இந்த சமுதாயங்களின் உறுப்பினர்கள் இந்து/ கிறித்துவர் அல்லது பிறர் என்ற பிரிவுகளில் மட்டுமே குறிக்கப்பட்டனர்.
கடந்த சில மாதங்களாக, ஜார்க்கண்ட் மாநிலம் முழுவதும் இந்த குறியீட்டிற்காக போராட்டங்கள் நடைபெற்றன. ‘டெலிகிராப்’ வெளியிட்டுள்ள செய்தியின் படி, ஆகஸ்ட் மாதம் தங்களின் நீண்ட கால கோரிக்கையான, தங்களை “சார்னா” என்ற தனிப் பிரிவில் குறிக்க வாய்ப்பு அளிக்காவிட்டால் எதிர்வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பினை புறக்கணிக்கப் போவதாக 32 பழங்குடி குழுக்கள் அறிவித்தனர்.
மேலும் கடந்த ஆண்டு, 19 மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடி இனத்தவர், மக்கள் தொகை கணக்கெடுப்பில் அல்லது வேறு எந்த படிவத்திலும் தங்களை பழங்குடிகள் அல்லது பூர்வீக குடிகள் என குறிக்க உரிமை வேண்டும் என கோரிக்கை வைத்து புதுடெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு போராட்டத்தை நடத்தினர்.
பெயர் பற்றிய சர்ச்சை
இந்தத் தீர்மானம் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள “ஆல்பர்ட் எக்கா சௌக்’-ல் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட அதே நாளில் பழங்குடியினரின் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. ஆனால், ஒரு சில செயற்பாட்டாளர்கள் சில இந்தப் பெயர் தொடர்பாக சில எதிர்கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இந்த சார்னா குறியீடு பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் இரண்டு குறிப்பிட்ட பிரச்சினைகள் இருப்பதாக “வனங்களைப் பாதுகாப்போம்” இயக்கத்தின் (Jungle Bachao Andholan) செயற்பாட்டாளர் சஞ்சய் பாசு மாலிக் தெரிவிக்கிறார்.
“ஒன்று, சார்னா என்ற சொல் காடுகளையும், நதிகளையும், மலைகளையும் வழிபடுவதை அடிப்படையாகக் கொண்ட இயற்கை மதத்தைச் சார்ந்த அனைவருக்கும் பொதுவானது அல்ல. இது குறித்த விவாதங்கள் ஏற்கனவே தீர்க்கப்பட்டு விட்டன. இயற்கை மதத்தை வெறும் பழங்குடி மக்களுடன் மட்டுமே தொடர்பு படுத்துவது பிரச்சனைகளை உருவாக்கும். இது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.” என்கிறார் அவர்.
இது குறித்து ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் என்று அம்பாகுடியாவும் கூட சொல்கிறார். “எல்லா மலைவாழ் மக்களும் தங்களை சார்னா மதத்தைச் சேர்ந்தவர்களாக கருதுவதில்லை. ஆதலால் இது அரசியலில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது விவாதத்திற்கு உரியது.” என்று கூறுகிறார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை வெவ்வேறான பெயர்களில் அழைத்துக் கொள்கின்றனர். ஆகவே ‘சார்னா’ வை மட்டும் பயன்படுத்துவது கடினமாகவே இருக்கும் என்கிறார் நீட்டிஷா.
மாநில அரசியலில் இதன் தாக்கம்
எனினும் மற்றவர்கள், இவை வெறும் எளிய தொழில்நுட்ப பிரச்சினைகள்தான். நடைமுறையில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்கின்றனர். ராஞ்சியைச் சேர்ந்த பழங்குடி இன அறிஞர் மற்றும் செயற்பாட்டாளர் மகாதேவ் டாப்போ கூறுகையில், “பெரும்பாலானவர்கள் இந்தப் பெயரை ஆர்வமாக கோருவதால் இதில் பிரச்சினை ஏதும் வராது. பெயர் ஒரு பெரிய பிரச்சனையாக மாறுவது நடக்கப் போவதில்லை” என்கிறார்.
அவரது கருத்துப்படி, இந்த அங்கீகாரத்தின் மூலம் மலைவாழ் மக்கள் இழந்த தங்கள் அடையாளத்தையும் கண்ணியத்தையும் மீட்டுக் கொண்டுள்ளார்கள். “பல ஆண்டுகளாக நாங்கள், இந்து, கிறித்துவர்கள் என ஏளனத்திற்கு ஆளாகி வந்தோம். எங்களுக்கு, குறிப்பாக, தங்களை வெறும் பழங்குடி இன உறுப்பினராக மட்டுமே கருதி வந்தவர்களுக்கு, இந்த புதிய அடையாளம் புதிய கண்ணியமான வாழ்க்கையையும் கொடுக்கும்.” என்கிறார் அவர்.
‘ஜார்க்கண்ட் களஞ்சியத்தின்’ இணை ஆசிரியரும், ராஞ்சியைச் சேர்ந்த பத்திரிகையாளருமான சுதிர் பால், டாப்போ வின் கருத்தை ஏற்றுக் கொள்கிறார். “சார்னா அல்லது ஆதி தர்மம்” என்பது பற்றி குறைந்தது ஜார்க்கண்டின் அடிமட்டத்தில் எந்த பிரச்சினையும் இருக்காது. மாநிலத்தில் உள்ள உள்ளூர் பழங்குடி மக்கள் பெரும்பாலும் தங்களை சார்னாக்கள் என்று அழைப்பதை விரும்புகிறார்கள்.” என்று ‘தி வயரிடம்’ கூறினார் பால்.
இது ஒன்றிய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு தனி மதப்பிரிவாக குறிப்பிடப் பட்டால் “வளங்களின் அரசியலிலும்’ தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் பழங்குடியினரின் மத அடையாளம் ‘Jal, Jungle, Zameen’ எனப்படும் நிலம் நீர், காடு ஆகிய இயற்கை வளங்களுடன் தொடர்புடையது. இதனை கிறித்துவ அமைப்புகளும் வரவேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.” என்கிறார் பால்.
மேலும், இந்துத்துவா குழுக்கள் எப்போதும் சார்னாக்களை கிறித்துவர்களுக்கு எதிராக திசை திருப்பி விட்டு பழங்குடி மக்களை சனாதன தர்மத்தின் பகுதியாக பரப்புரை செய்வது நடந்து வருகிறது. “இந்தத் தீர்மானம் மூலம் மாநில அரசு இந்துத்துவாவாதிகளை கடின நிலைக்குத் தள்ளிவிட்டது.” என்கிறார் பால்.
இதற்கிடையில் பாஜக தலைவர்கள் வழிபாட்டு இடத்தின் பெயர் மதத்தின் பெயராக எப்படி இருக்க முடியும் என்பன போன்ற ‘தொழில்நுட்ப’ பிரச்சனைகளை எழுப்புகிறார்கள். பொதுவாக பழங்குடி மக்களின் வழிபாட்டு தலம் சார்னா என்று அழைக்கப்படுகிறது.
எனினும் டாப்போ இதை ‘திசைதிருப்பும் தந்திரம்’ என உதறித் தள்ளுகிறார். “உண்மையில், உள்ளூர் மொழியில் வழிபடும் இடம் சார்னா என்று அழைக்கப்படுவதில்லை. “சாலா டோன்கா” (Chala Tonka) என்றுதான் அழைக்கப்படுகிறது. சார்னா என்ற பெயர் பழங்குடி அல்லாதவர்களால் வைக்கப்பட்ட பெயர் என்கிறார் டாப்போ.
பாஜக தற்போது ஆப்பசைத்த குரங்கின் நிலையில் உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமை, தங்களைத் தேர்ந்தெடுத்தால் நீண்ட கால கோரிக்கையான பழங்குடியினருக்கு தனி சார்னா குறியீடு வழங்குவதை நடைமுறைபடுத்துவோம் என வாக்குறுதி அளித்திருது.
“எங்களுக்கு ஒன்றிய அரசிலும் மாநில அரசிலும் தனிப் பெரும்பான்மை கிடைத்தால் 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பழங்குடி மக்களின் நீண்ட கால கோரிக்கையான, சார்னா குறியீடு மூலம் தனியாக அடையாளப்படுத்துவதை நடைமுறைப் படுத்துவோம்” என்றார் மூத்த பாஜக தலைவரும் அப்போதைய முதல்வருமான ரகுபர்தாஸ் தேர்தல் பரப்புரையில் வாக்குறுதி அளித்தார்.
ஒன்றிய அரசு எந்த முடிவை எடுத்தாலும் ஹேமந்த் சோரனும் அவரது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியும் இதன் மூலம் கூடுதல் செல்வாக்கு பெறுவது உறுதி என்கிறார்கள் வல்லுனர்கள்.
– மஹ்தாப் ஆலம்
thewire.in தளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.