Aran Sei

“எங்களுக்கு நடக்கப் போகும் விபரீதம் தெரிகிறது ; அதனால்தான் ரத்தம் கொதிக்கிறது” – விவசாயிகள்

ம்பது எட்டு வயதான ஜஸ்பீர் சிங், டெல்லிக்கு 250 கி.மீ தொலைவில் இருக்கும் பஞ்சாப்பின் ஃபதேகர்ஃப் சாஹிப் மாவட்டத்தில் இருக்கும் தன்னுடைய வீட்டில் இருந்து புறப்பட்டு, டெல்லியின் சிங்கு எல்லைக்கு வரும் வழியில் ஹரியானாவில் எத்தனை இடங்களில் காவல்துறையின் தடைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருந்தது எனப் பட்டியலிட்டுள்ளார்.

பஞ்சாப்பிற்கும் ஹரியானாவிற்கும் நடுவில் இருக்கும் ஷம்பூவில் சாலைகளில் சிமெண்டால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கர்னலில், ஓட்டுநர்கள் இல்லாத 150 லாரிகளை அதிகாரிகள் நெடுஞ்சாலையின் நடுவே நிறுத்திவைத்திருக்கிறார்கள். பானிபட்டிலும், சோனிபட்டிலும் நெடுஞ்சாலைக்கு நடுவே எட்டு அடி ஆழத்தில் குழிகள் தோண்டப்பட்டிருக்கின்றன.

புதிய விவசாயச் சட்டங்கள் மூன்றையும் திரும்பப் பெற வேண்டும் என்று பஞ்சாப்பிலும் ஹரியானாவிலும் உத்திரப்பிரதேசத்திலும் இருந்து டெல்லிக்குத் தங்கள் ட்ராக்டர்களில் போராடச் சென்ற பல ஆயிரம் பேரில் ஒருவர்தான் சிங். இந்தப் புதுச் சட்டங்கள் அவர்களின் முக்கியமான பயிர்களுக்கு எல்லாம் கிடைக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை ரத்து செய்து, கார்ப்பரேஷன்களின் கருணையை நம்பி வாழ வேண்டிய நிலைக்குக் கொண்டு போய் விடும் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

ஹரியானாவிலும், உத்தரப்பிரதேசத்திலும் இருக்கும் பாஜக தலைமையிலான அரசுகள், இவர்கள் மாநில எல்லையைக் கடப்பதைத் தடை செய்ய முயற்சித்துக்கொண்டிருக்கிறது. விவசாயிகள் தடைகளைத் தாண்டி வரும் போது கண்ணீர்ப்புகைக் குண்டுகள், நீர் பீரங்கி, காவல்துறையினரின் தடியடி போன்றவற்றால் தாக்கப்படுகின்றனர்.

Photo Credit : thewire

“முதலில் கட்டரின் (ஹரியானா முதல்வர் மனோஹர் கட்டர்) அகங்காரத்தை உடைத்தோம். பிறகு, மோடியின் அகங்காரத்தை உடைத்தோம்” என்கிறார் ஜஸ்பீர் சிங். ஒரு வழியாக, நவம்பர் 27 ஆம் தேதி அன்று அவர் டெல்லி எல்லையை அடைந்ததாகத் தெரிவித்திருக்கிறார்.

நரேந்திர மோடி உட்பல பல தலைவர்கள், இந்தப் புதுச்சட்டங்கள் விவசாயிகளுக்கு மேலும் வசதிகளை உருவாக்கி அவர்களுக்கு இப்போது கிடைக்கும் விலைகளை மேம்படுத்தவே செய்யும் என்கிறார்கள். விவசாயிகளைத் தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகள் வதந்திகளைப் பரப்புவதாக மோடி சொல்லியிருக்கிறார்.

ஆளுங்கட்சியின் சில உறுப்பினர்கள், போராட்டக்காரர்களை இழிவு செய்ய இன்னும் ஒரு படி மேலேயும் சென்றனர். ஹரியானா முதல்வர் கட்டர், தனி சீக்கிய தாய்நாடு கேட்கும் பிரிவினைவாதிகள் போராட்டத்தில் இணைந்திருப்பதாகவும் போராட்டக்காரர்களுக்கு மத்தியில் “காலிஸ்தானிகள் இருப்பதாக” தகவல் வந்ததாகவும் சொன்னார்.

எந்த சாட்சியும் இல்லாத இந்தக் குற்றச்சாட்டுப் பல செய்தி நிறுவனங்களால் பூதாகரமாக்கப்பட்டது.

இது பல போராட்டக்காரர்களைப் புண்படுத்தவும் ஆக்ரோஷமடையவும் செய்திருக்கிறது.

பஞ்சாப்பின் காபூர்தலாவில் இருந்து வந்து 50 வயதான விவசாயி ஜோகா சிங், “மோடி ஊடகம் எங்களை காலிஸ்தானிக்கள் என்கிறது. நாங்கள் இரண்டு மாதங்களாக அமைதியாக இருக்கிறோம். நாங்கள் பயங்கரவாதிகளா? தயவு செய்து எங்களோடு இருங்கள். நீங்கள் எங்களுக்குக் குரல் கொடுக்கவில்லையென்றால், பிறகு மோடிக்கு எப்படி தெரியும்?” என்றார்.

“தேசிய ஊடகம் எங்களோடு இல்லை”

திங்களன்று, வட மேற்கு டெல்லியில் இருக்கும் ஒரு இடத்திற்கு விவசாயிகளை நகர்த்த அரசு முயற்சித்த போதும், டெல்லியின் எல்லைகளை விட்டு விலகாமல் அங்கேயே தங்கள் வண்டிகளோடு விவசாயிகள் நின்றார்கள். அரசு இவர்களை நகர்த்த நினைப்பது ஒரு “ திறந்தவெளி சிறைக்கு” எனச் சொல்கின்றனர்.

நூற்றுக்கணக்கான ட்ராக்டர்கள் ஜிடி கர்னல் நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்த போதும், டெல்லிக்கும் ஹரியானாவிற்கும் இடையே இருக்கும் சிங்கு எல்லை திறக்கப்படவில்லை. தடுப்புகளாலும், கன்சர்டினா வயராலும் சூழப்பட்டிருக்கும் இந்தப் போராட்டக்களத்தில் இப்போது ஒரு மேடையும், சமூக சமையல் கூடமும், சில மருத்துவக் கூடாரங்களும் (கியோஸ்குகள் – kiosks) இருக்கின்றன.

இந்தியாவின் இரண்டாவது பிரதமர் லால் பஹதுர் சாஸ்திரியின் “ஜெய் ஜவான், ஜெய் கிசான்” – “போர்வீரன் நீடுழி வாழ்க, விவசாயி நீடுழி வாழ்க” எனும் கோஷம் இந்தப் பகுதியில் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.

இதற்கு நடுவே, தங்களை பயங்கரவாதிகள் என்றழைத்த தேசிய ஊடகங்களை விமர்சித்து பதாகைகளை தாங்கியபடி விவசாயிகளின் குழு ஒன்று நின்றது.

“எங்களிடம் ஏதாவது ஆயுதங்கள் இருக்கின்றனவா? யாருடைய சார்பாக இவர்கள் எங்களை பயங்கரவாதிகள் என்கின்றனர்? நாங்கள் விவசாயிகள், படித்த விவசாயிகள் என்கிறார்” பஞ்சாப்பின் லூதியானாவைச் சேர்ந்த 26 வயதான விவசாயி ப்ரப்ஜித் சிங்.

இன்னொருவர் தேசிய ஊடகங்கள் போராட்டம் குறித்து நேர்மையான செய்திகளை அளிக்கவில்லை என்கிறார். “ ஆஜ் தக், ஸீ ந்யூஸ், ஏபிபி என எந்த தேசிய ஊடகமும் எங்களோடு இல்லை” என்கிறார் ஹரியானாவின் அம்பாலாவில் இருந்து வந்த 34 வயது விவசாயி சுக்ஜெயின் சிங்.

நேர்மையான செய்திகளை வெளியிடுவது ஏன் அவசியம் என்றும் அவர் விவரித்தார். “ சேமிப்பிற்கான வரம்பை நீக்கும் நாள், சாதாரண மனிதன் சாவான்” என்றார். வணிகர்கள் தானியங்கள் மற்றும் பருப்புகளைச் சேமித்து வைக்க இருக்கும் வரம்பை நீக்கும் புதுச்சட்டங்களில் ஒன்றைச் சுட்டிக் காட்டி இதைச் சொன்னார்.

“இது எப்படி தன்னைப் பாதிக்கும் என்பது இன்னமும் பாமரனுக்குப் புரியவில்லை, தேசிய ஊடகம் இதைக் காண்பிப்பதில்லை” என்றார் சுக்ஜெயின்.

சிங் டெல்லிக்குப் பயணித்த போது அம்பாலா மற்றும் குருஷேத்ராவுக்கு இடையே இருக்கும் ஷாபாத் எனும் இடத்தில் கண்ணீர்ப் புகைக் குண்டுகள், நீர் பீரங்கிகளால் தாக்கப்பட்டார். “ட்ராக்டரின் டயருக்குக் கீழே கால் வழுக்கி, அடிபட்டுவிட்டது” எனக் கட்டுப் போட்டிருக்கும் காலை காட்டியவர், “ பீரங்கிகளில் இருந்து வரும் தண்ணீரின் அழுத்தம் அதிகமாக இருந்தது” என்றார்.

Photo Credit : thewire

விவசாயத்தின் எதிர்காலம்

பாஜக தலைவர்கள் விவசாயிகளுக்குச் சட்டம் புரியவில்லை என்கின்றனர். சிங்கு எல்லையில் இருக்கும் விவசாயிகள் இதை மறுக்கிறார்கள். “நான் படிக்காதவன்தான், ஆனால், யாராவது ஒருத்தர் இந்தச் சட்டங்கள் எப்படி நல்லவை என்று விளக்கட்டும் பார்ப்போம்” என்கிறார் ஜஸ்பீர் சிங்.

சட்டங்கள் சொல்வது போல தனியார் கார்ப்பரேஷன்கள் விவசாயத் துறைக்குள் வந்தால், அது குறைந்தபட்ச ஆதார விலைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்கிறார்.

“குறைந்தபட்ச ஆதார விலை ஏற்கனவே குறைந்தபட்சமாகத்தான் இருக்கிறது. கார்ப்பரேட்கள் அதிக விலை கொடுத்து வாங்குவார்கள் என்கிறது அரசு. ஆனால், அதிக விலைக்கு யாரும் வாங்கப்போவதில்லை. இரண்டு வருடங்களுக்கு வாங்கிச் சேமித்து வைத்துக்கொள்வார்கள். மண்டிகள் காலியான பிறகு நாங்கள் குறைந்த விலைக்கு விற்க கட்டாயப்படுத்தப்படுவோம்” என்கிறார்.

எதிர்க்கட்சிகளால்தான் இந்தப் போராட்டங்கள் நடத்தப்படுகிறது எனும் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தனர் சிலர்.

ஹரியானாவின் கர்னலைச் சேர்ந்த விவசாயி சதீஷ் குமார், “இங்கே உட்கார்ந்திருப்பது எல்லாம் காங்கிரஸ் கட்சியினர் என்கிறார் மோடி. ஆனால், மிஸ்டர் மோடி, இது எந்தக் கட்சி குறித்ததும் அல்ல. யாரும் யாருடைய மேலாதிக்கத்தினாலும் இங்கு வரவில்லை. எங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைத் தெரிந்ததால்தான் எங்கள் ரத்தம் கொதிக்கிறது” என்கிறார்.

இந்தச் சட்டங்கள் எல்லாம் நட்பு முதலாளித்துவத்தின் விளைவுதான் என்றும், ஆளும் கட்சியோடு தொடர்பில் இருக்கும் கார்ப்பரேஷன்கள் லாபம் பார்க்க இயற்றப்பட்டிருக்கின்றன என்றும் சில விவசாயிகள் சொல்கின்றனர்.

“பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்க நினைக்கிறார்கள், எங்கள் நிலத்தை முதலாளிகளுக்கு கொடுக்க நினைக்கிறார்கள்” என்கிறார் ஃபதெகர் சாஹிப்பை சேர்ந்த குர்ப்ரீத் சிங்.

விவசாயத்தின் எதிர்காலத்திற்கு இந்தப் போராட்டங்கள் முக்கியமானவை என்கிறார் குமார்.

“இடைத்தரகர்களை நீக்குவதாகச் சொல்கிறார்கள். ஆனால், (முகேஷ்) அம்பானி, (கௌதம்) அதானி என இரண்டு இடைத்தரகர்களை அவர்கள்தான் கொண்டு வருகிறார்கள். நாங்கள் விவசாயம் செய்வதையே நிறுத்த வேண்டியதாக இருக்கும். பணம் கிடைக்கும் என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் இல்லை” என்கிறார் குமார்.

26 வயதான பவன் தீப் சிங், அரசு தான் மக்களை தவறாக வழிநடத்துவதாக சொல்கிறார்.

“எங்களை தேச விரோதிகள் என்றார்கள். டெல்லியில் (குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு) போராட்டம் நடந்த போது அவர்களை தேச விரோதிகள் என்றார்கள். அப்படி என்றால் யார் தான் இந்த நாட்டின் பிரஜை? சாதாரண குடிமக்கள் எந்தப் பிரச்சினையையும் உருவாக்குவதில்லை. அரசுதான் எப்போதுமே அதைச் செய்கிறது” என்றார்.

நெடும் பயணத்துக்கான ஏற்பாடு

நீண்ட போராட்டத்திற்குத் தயாராகவே தாங்கள் வந்திருப்பதாகச் சில விவசாயிகள் தெரிவித்தனர்.

Photo Credit : thewire

பொழுது சாயும் போது, சிங்கு எல்லையில் ஒரு வீட்டுச் சூழல் நிலவியது. போராட்டக்களத்தில் நின்றிருந்த லாரிகளில் பாத்திரங்களும் மெத்தைகளும் துணிகளும் நிறைந்தன. சிலர் துணி துவைத்து இரண்டு ட்ராக்டர்களுக்கு இடையே கட்டப்பட்டிருந்த கயிற்றில் காயப் போட்டனர்.

பஞ்சாப்பின் காபுர்தலாவில் இருந்து நவம்பர் 2 ஆம் தேதி புறப்பட்ட போது தன்னுடைய ட்ராக்டரில் எரிவாயு சிலிண்டரும், ஆறு மாதத்திற்கான மளிகைப் பொருட்களும், சப்பாத்தி கட்டையும், ஒரு மெத்தையும், ஐந்து ஜோடி துணிகளும் கொண்டு வந்ததாகச் சொல்கிறார் ஜோகா சிங்.

மேலும் அவர், “இந்த அநியாயமான சட்டங்களை அரசு திரும்பப் பெற நாங்கள் எங்களையே தியாகம் செய்ய வேண்டும் என்றால் அதையும் செய்வோம். ஆறு மாதங்கள் உட்கார வேண்டும் என்றால் அமைதியாக உட்காருவோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

“எங்களுக்கு நடக்கப் போகும் விபரீதம் தெரிகிறது ; அதனால்தான் ரத்தம் கொதிக்கிறது” – விவசாயிகள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்