இந்திய ஒருமைப்பாட்டிற்கு விரோதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துக்களை ஊக்குவிப்பதாக கூறி 43 கைபேசி செயலிகளுக்கு (mobile apps) மத்திய அரசு தடை விதித்துள்ளது.
தடைசெய்யப்பட்ட 43 சீன செயலிகள்:
லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறலை கண்டிக்கும் வகையில், கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி, ‘டிக்டாக்’ உட்பட, 59 சீன செயலிகளுக்கு, இந்தியா தடை விதித்தது. உள்நாட்டு பாதுகாப்பு, தனி நபர் தகவல் சுதந்திரம் ஆகியவற்றுக்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.
பின்னர், பயனாளர் விபரங்களை சேகரிப்பது மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துதல் போன்ற காரணங்களால், செப்டம்பர் மாதம் 2-ம் தேதி மேலும் 118 செயலிகளை மத்திய அரசு தடை செய்தது.
இந்நிலையில், தற்போது ‘இந்திய ஒருமைப்பாட்டிற்கு விரோதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துக்களை ஊக்குவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டதாக’ கூறி 43 கைபேசி செயலிகளுக்கு தடைவிதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் சட்டத்தின் 69 ஏ பிரிவின் கீழ் இந்திய பயனர்கள் (users) இந்த செயலிகளை பயன்படுத்தாத வகையில் தடை செய்துள்ளதாக அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல விற்பனை வலைத்தளம் அலிஎக்ஸ்பிரஸ் தடைசெய்யப்பட்ட செயலிகளில் ஒன்றாகும். அலிஎக்ஸ்பிரஸ் உட்பட அலிபாபாவின் பல செயலிகள் தடைசெய்யப்பட்டுள்ளன. இது சீன இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவுக்கு பெரும் பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தும் என்று தி மின்ட் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட 43 கைபேசி செயலிகளில் 4 அலிபாபா குழுமத்திற்குச் சொந்தமானவை. இவை அனைத்தும் சீன செயலிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.