மாநிலங்களவையில் குழப்பங்களுக்கு இடையே மசோதாக்கள் ஏன் நிறைவேற்றப்படவில்லை என்று பிரதமர் மோடி தன்னிடம் கேள்வி எழுப்பினார் என்று முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி தனது புதிய புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
ஹமீத் அன்சாரி 2007 முதல் 2017 வரை குடியரசு துணைத்தலைவர் பதவி வகித்து ஆகஸ்ட் 10, 2017-ல் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். முன்னதாக அவர் பல்வேறு நாடுகளில் இந்திய தூதராகவும், தேசிய சிறுபான்மையினர் கமிஷனின் தலைவராகவும் பணியாற்றினார்.
குடியரசு துணைத் தலைவர் என்ற வகையில் அவர் மாநிலங்களவையின் தலைவர் பொறுப்பையும் ஏற்று நடத்தி வந்தார்.
அவரது சமீபத்திய புத்தகமான “By Many a Happy Accident: Recollections of a Life”-ல் அவர் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார் என்று தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
மாநிலங்களவையில் கூச்சலும் குழப்பமும் நிலவும் போது மசோதாக்களை நிறைவேற்றக் கூடாது என்ற கொள்கையை, தான் கடைப்பிடித்ததாக ஹமீத் அன்சாரி கூறியுள்ளார். காங்கிரஸ் அரசும் அதை விரும்பவில்லை என்றாலும், பாஜக, “தனக்கு மக்களவையில் பெரும்பான்மை இருப்பதால், மாநிலங்களவையின் நடைமுறை விதிகளை மீறிச் செல்வதற்கான தார்மீக உரிமை தனக்கு இருப்பதாக” கருதியதாக அவர் தெரிவித்துள்ளார்.
“ஒரு நாள் பிரதமர் மோடி எனது மக்களவை அலுவலகத்துக்குள் திடீரென்று வந்தார். எனது ஆச்சரியத்தை மறைத்துக் கொண்டு அவரை உபசரித்த போது, ‘நீங்கள் அதிக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நீங்கள் எனக்கு உதவ மாட்டேன் என்கிறீர்கள்’ என்று மோடி கூறினார்” என்று ஹமீத் அன்சாரி பதிவு செய்துள்ளார்.
“மாநிலங்களவையில் அமளிக்கு மத்தியில் மசோதாக்கள் ஏன் நிறைவேற்றப்படுவதில்லை” என்று மோடி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
2017-ம் ஆண்டு ஹமீத் அன்சாரியின் பிரிவு உபசார கூட்டத்தில் பேசிய போது மோடி, “உங்களது வெளியுறவுத் துறை பணி வாழ்வின் பெரும் பகுதி மேற்கு ஆசிய நாடுகளில் ஒரே மாதிரியான சூழலில், விவாதங்களில் கழிந்தது. அந்தப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு சிறுபான்மையினர் கமிஷனிலும் அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகத்திலும் உங்கள் நேரம் கழிந்தது. அதுதான் உங்கள் வரம்பு” என்று கூறியிருக்கிறார்.
“மாநிலங்களவை தலைவராக எனது பணி பற்றி பேசவில்லை. இந்தியாவுக்கான வெளியுறவு தூதராக நான் ஆற்றிய பணியை குறிப்பிட்டாலும் அது முஸ்லீம் நாடுகளின் சூழல் என்ற வரம்புக்குட்படுத்தப்பட்டது.
“பிற நாடுகளிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் இந்தியாவின் பிரதிநிதியாக நான் செய்த பணிகளை புறக்கணித்தது ஏதோ தவறுதலாக நடந்து விடவில்லை. இந்தியாவின் பிரதிநிதியாக, எந்த மட்டத்தில் பணியாற்றினாலும், இந்தியாவின் கருத்துக்களையும், இந்தியாவின் நலன்களையும் வெளிப்படுத்துவதுதான் எனது பணி என்ற உண்மை வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டது. குறிப்பிட்ட நாட்டின் சூழல்களையோ, தனிப்பட்ட விருப்புகளையோ அது சார்ந்ததல்ல என்பதை பொருட்படுத்தவில்லை” என்று ஹமீத் அன்சாரி கூறியுள்ளார்.
2007-ம் ஆண்டு மோடியை சந்தித்தது பற்றி குறிப்பிட்ட ஹமீத் அன்சாரி, “குஜராத் முதல்வராக இருந்த மோடி என்னைச் சந்திக்க வந்த போது, சிறுபான்மையினர் கமிஷனின் தலைவர் என்ற எனது முந்தைய பொறுப்பில் இருந்திருந்தால், எனது மனதில் பல கேள்விகள் உள்ளன என்று தெரிவித்தேன். கோத்ராவுக்குப் பிந்தைய குஜராத் வன்முறை நிகழ்வுகளைப் பற்றி குறிப்பிட்டு அவற்றை ஏன் அவர் அனுமதித்தார் என்று கேட்டேன்” என்று பதிவு செய்துள்ளார்.
பலரும் இந்த விஷயத்தின் ஒரு அம்சத்தை பற்றி மட்டும்தான் பார்க்கின்றனர். ஆனால், நான் செய்த பல நல்ல விஷயங்களை குறிப்பாக முஸ்லீம் பெண் குழந்தைகளின் கல்விக்கு செய்த பணிகளை யாரும் கவனிப்பதில்லை என்று மோடி கூறியதாக ஹமீத் அன்சாரி தெரிவித்துள்ளார் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரிவிக்கிறது.
“இது தொடர்பான விபரங்களை தருமாறு கேட்ட நான், அவற்றை மோடி வெளியிட வேண்டும் என்று கூறினேன். ‘அவ்வாறு செய்வது எனக்கு அரசியல் ரீதியாக பலனளிக்காது’ என்று மோடி வெளிப்படையாக கூறி விட்டார்” என்று முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி தனது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.