“வருகின்ற 2021-ம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்று மூன்றாவது முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்பதைப் பார்க்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார் கூர்க்கா மக்கள் விடுதலை இயக்கம் (கோர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா), ஜிஜேஎம் தலைவர் பிமல் குருங்.
மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சாவின் நிறுவனர் பிமல் குருங், கொல்கத்தாவில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். “பாஜக டார்ஜிலிங்கின் மலைவாழ் மக்களுக்கு வாக்களித்த எதையும் செய்யவில்லை” என்று கூறி பாஜகவுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்வதாக அறிவித்தார். மேலும் கொல்கத்தா முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு தன் ஆதரவு கரங்களை நீட்டியுள்ளார் என்று தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா இந்தியத் தேர்தல் ஆணையத்தால் பதிவு பெற்ற ஆனால் அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தது. ஜிஜேஎம் டார்ஜிலிங் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து வந்திருக்கிறது. என்றும் 2019-ல் நடைபெற்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் ராஜூ பிஸ்டா 4 லட்சம் வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்று தி ஹிந்து தெரிவிக்கிறது.
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கில் நேபாளி மொழி பேசும் கூர்க்கா இன மக்கள் கூர்க்காலந்து எனும் தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 2007 முதல் போராட்டங்களை நடத்தினார்கள். போராட்டத்தின் விளைவாக 14 மார்ச் 2012 அன்று டார்ஜிலிங் மாவட்டம் மற்றும் காளிம்பொங் மாவட்டம் அடங்கிய கூர்க்காலந்து பிரதேச நிர்வாகம் அமைக்கப்பட்டது (ஜிடிஏ).
17 செப்டம்பர் 2015 அன்று இக்கட்சிக்கு மேற்குவங்க சட்டமன்றத்தில் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். கூர்க்காலந்து பிரதேச நிர்வாகத்திற்கு மம்தா பானர்ஜியின் அரசு போதிய நிதி வழங்காததால் கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சாவின் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் 18 செப்டம்பர் 2015-ல் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்..
2017-ம் ஆண்டு கூர்க்காலாந்து தனி மாநிலமாக வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றது. டார்ஜிலிங்கின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். இந்தப் போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் இருவர் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கும் பலியானதாகவும் பிபிசியின் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தப் போராட்டங்களை தலைமையேற்று நடத்தினார் குருங் இந்தப் போராட்டங்கள் வன்முறையில் முடிந்ததால் அங்கு 100 நாட்கள் ஊரடங்கு போடப்பட்டது. சட்டவிரோத நடவடிக்கை (UAPA) உட்பட பல வழக்குகள் அவர்மீது போடப்பட்டதால் அவர் டார்ஜிலிங் மலைகளில் இருந்து வெளியேறினார்.
“மாநிலத்தில் பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கோர்க்கா ஜனசக்தி மோர்ச்சாவை பாஜக பயன்படுத்தி வருகிறது” என்று திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது.
இந்நிலையில் 2017-ல் நடந்த போராட்டங்களுக்குப் பிறகு தலைமறைவான பிமல் குருங் தற்போது மம்தா அரசுக்குத் தனது ஆதரவு கரங்களை நீட்டியுள்ளார். இவர் மீது 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவின் நீண்ட நாள் நண்பரும் (12 ஆண்டுகள்) தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாகவும் இருந்து வந்த ஜிஜேஎம் தற்போது தன் உறவை முறித்துக் கொண்டுள்ளது.
“கடந்த ஆறு ஆண்டுகளாக பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சரோ தங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை” என்றும், “மாறாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி மக்களுக்குக் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டார் ” என்றும் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார் குருங்..
அவர் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் குறித்து கேள்வி எழுப்பிய போது “நான் கொலைகாரனோ பயங்கரவாதியோ கிடையாது. அவை என்மீது அரசியல் ரீதியாகப் போடப்பட்ட வழக்குகள் அவற்றை அரசியல் ரீதியாக எதிர் கொள்வேன்“ என்று பதிலளித்தார்.
கூர்க்காலாந்து பிரச்சனை குறித்து பதிலளித்த அவர் ”என்னைக் கைது செய்து சிறையில் அடைத்தாலும் கூட கூர்க்காலந்து பிரச்சனைக்காக சிறையில் இருந்தும் போராடுவேன்“ என்று கூறினார்.
பெனாய் தமாங் தலைமையிலான ஜிஜேஎம்மின் மற்றொரு பிரிவு தலைமை தற்போது டார்ஜிலிங் மக்களின் பிராந்திய தன்னாட்சி அமைப்பான கூர்க்காலாந்து பிராந்திய நிர்வாகத்தின் (ஜிடிஏ) பொறுப்பில் உள்ளது.
டார்ஜிலிங் மக்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டறிவதற்காக, சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தால் நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில் குருங் சார்பாக அவரது பிரதிநிதியும் கலந்துகொண்டார் என்று தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.
இந்தக் கூட்டம் நடந்த சிறிது காலத்தில் குருங்கிடம் இருந்து மம்தா பானர்ஜியை ஆதரித்து கருத்து வெளியாகியிருப்பது மேற்கு வங்க அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்று தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.