டெல்லி எல்லையில், மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டக் களத்தில், பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள டெல்லி காவல்துறையினரில் பலர் பகுதி நேர விவசாயிகளாவோ அல்லது விவசாயிகளின் மகன்களாகவோ உள்ளனர் என்று தி ஹிந்து வெளியிட்டுள்ள ஒரு செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.
சிங்கு எல்லையில் போராட்டக் களத்தில், ஒரு தலைமை காவலர் அடுக்கடுக்கான தடுப்பு அரண் வரிசைகளுக்கு மேலாக, எதிர் பக்கம் நிற்கும் தனது அப்பாவை நேருக்கு நேர் பார்க்கிறார். இருவரும் தமது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர்.
விவசாயச் சட்டங்கள் தொடர்பாக எதிரெதிர் திசையில் நின்றாலும், அவர்கள் நாள் இறுதியில் வீட்டுக்குச் சென்ற பிறகு, அவர்கள் அமைதியாக சேர்ந்து வாழ்கின்றனர். ஆனால், அவ்வப்போது சூடான விவாதங்கள் நடக்கின்றன.
“என் அப்பா தடுப்பரண்களின் எதிர்ப்பக்கத்தில் உள்ளார். அவர் சில நேரங்களில் போராட்டத்துக்கு வருகிறார். அவர்கள் எது சரி என்று நம்புகிறார்களோ அதற்காக போராடுகிறார்கள், நாங்கள் எங்கள் கடமையைச் செய்வதில் உறுதியாக உள்ளோம்” என்று அவர் கூறுகிறார்.
51 வயதான ஒரு உதவி துணை ஆய்வாளர் தனது கிராமத்துக்குப் போகும் போது, “ஏன் இன்னும் பணிக்கு போகிறீர்கள்? உங்களுக்கு அடி விழுந்தது” என்று அவரது குடும்பத்தினர் கேள்வி எழுப்புகின்றனர்.
விவசாயியான தனது அப்பாவுடன் வாழ்ந்த போதும், அவர் போராடும் விவசாயிகள் மீது கோபமாக உள்ளார்.
“நாங்கள் இப்போது சீருடையில் உள்ளோம், ஆனால், பணி முடிந்ததும் நாங்கள் சுதந்திரமாக பேசலாம்” என்கிறார் அவர்.
இன்னொரு தலைமை காவலர் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை புரிந்து கொள்வதாகவும், ஆனால், தனது சக கிராம மக்களிடம் ஏதாவது சொன்னால், “அரசாங்கத்திடமிருந்து உங்களுக்கு சம்பளம் வருகிறது, அதனால் நீங்கள் அரசாங்கத்தின் பக்கம்தான் நிற்பீர்கள்” என்று அவர்கள் தன்னை விமர்சிப்பதாகவும் கூறுகிறார்.
காவலர் பிரபாத் தான் கிராமப்புற பின்னணியில் இருந்து வருவதாகவும், அவரது அப்பா ஒரு விவசாயி என்றும் கூறுகிறார்.
“உத்தர பிரதேசம் ஷாம்லியில் எங்களுக்கு ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. 10 பேர் கொண்ட குடும்பத்துக்கு அது போதுமானதாக இல்லை. விவசாயம் எப்போதுமே லாபகரமானதாக இருந்ததில்லை. என் குடும்பத்துக்கு நல்ல வாழ்க்கை தருவதற்காக நான் போலீஸ் தேர்வுக்கு தயாரித்து டெல்லி போலீசில் 2010-ல் சேர்ந்தேன். யார் சரி, யார் தவறு என்று எனக்குத் தெரியாது. ஆனால், போலீஸ்காரர்களும் போராடுபவர்களின் அதே கிராமங்களில் இருந்துதான் வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்கிறார்.
தன் பெயர் சொல்ல விரும்பாத இன்னொரு காவலர், சிங்கு எல்லையில் 2 மாதம் பணி புரிந்த பிறகு கிராமத்துக்கு திரும்பியுள்ளதாகவும், இப்போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறுகிறார்.
“மோசமான காலநிலைகளில் 12 மணி நேர ஷிஃப்டுகளில் இரண்டு மாதங்கள் நாங்கள் வேலை செய்தோம். இரண்டு தரப்பின் வலியையும் நான் புரிந்து கொள்ள முடிகிறது. கடந்த 2 ஆண்டுகளாக டெல்லியில் போராட்டங்களும் வன்முறையும் வாடிக்கையாகி விட்டது. ஒவ்வொரு முறையும் டெல்லி போலீஸ் போராடுபவர்களின் கோபத்துக்கு இலக்காகிறது” என்கிறார் அவர்.
காசிப்பூர் எல்லையில் பணியில் உள்ள ஒரு தலைமை காவலர், மேற்கு உத்தர பிரதேசத்தில் உள தனது அப்பாவின் வயல்களில் தான் வேலை செய்திருப்பதாகவும், விவசாயிகளின் வலி தனக்குத் தெரியும் என்றும் கூறுகிறார். குடியரசு தினத்தன்று காவலர்களை தாக்கியவர்கள் விவசாயிகளாக இருக்க முடியாது என்று அவர் கூறுகிறார்.
“விவசாயிகளுக்கு என்ன வேண்டும் என்றும் மத்திய அரசு என்ன செய்ய தயாராக உள்ளது என்றும் எனக்குத் தெரியவில்லை. ஆனால், விவசாயிகள் காவலர்களை தாக்க வேண்டாம் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்” என்கிறார், அவர்.
“நான்கு தலைமுறைகளாக விவசாயம் செய்து வருகிறோம். எப்போதுமே பண நெருக்கடியில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என் குடும்பத்தில் நான்தான் முதல் முதலாக அரசாங்க வேலை கிடைத்து ஹரியானாவிலிருந்து டெல்லிக்கு குடும்பத்தோடு வந்தேன். என் குழந்தைகளின் படிப்புக்காக விவசாய நிலங்களை விற்றாலும் விற்பேனே தவிர, கிராமத்துக்குத் திரும்பிச் செல்ல மாட்டேன்” என்கிறார் இன்னொரு காவலர்.
கீழ்மட்ட காவலர்களின் பணி நிலைமை மோசமாக உள்ளது. இங்கு எல்லையில் பணியில் இருக்கும் ஒரு தலைமை காவலரின் வேலை நேரம் 18 மணி நேரம் வரை நீடிக்கிறது.
காஷ்மீர் கேட்டில் உள்ள பழைய போலீஸ் லைனில் பணியில் உள்ள, அவர் முதலில் சோனிபட்டில் உள்ள தனது வீட்டில் இருந்து பழைய போலீஸ் லைனுக்குச் செல்ல வேண்டும். பின்னர் மீண்டும் வீட்டுக்கு அருகிலேயே உள்ள சிங்கு எல்லைக்கு வர வேண்டும்.
“போக்குவரத்து மாற்றங்கள் காரணமாக, பழைய போலீஸ் லைனுக்கு போய்ச் சேர இரண்டு மணிநேரமும், மீண்டும் போராட்ட களத்துக்கு திரும்பி வர ஒரு மணிநேரமும் பிடிக்கிறது. 12 மணி நேரம் ஷிப்ட் சில நேரம் 14 மணி நேரம் வரை நீடிக்கிறது. அதன் பிறகு மீண்டும் பழைய போலீஸ் லைனுக்குச் சென்று அங்கிருந்து மறுபடியும் சோனிபட்டில் உள்ள வீட்டுக்குத் திரும்பி வர வேண்டும்” என்று அவர் கூறுகிறார்.
ஆய்வாளர் மட்டத்துக்கு மேல் பதவிகளில் உள்ளவர்கள் மட்டுமே தங்கள் சொந்த வண்டிகளை தடுப்பு பகுதிக்குள் கொண்டு வர அனுமதி உள்ளது.
“நான் சிங்கு எல்லைக்கு மிக அருகில் வசிக்கிறேன், ஆனால் என் மகன் எனக்கு மதிய உணவு கொடுக்க இங்கு வர முடியாது. அதை வாங்கிக் கொள்ள நான் தடுப்புகள் வரை செல்ல வேண்டும். எங்கள் வண்டிகளை இங்கு கொண்டு வர எங்களுக்கு அனுமதி இல்லை. போலீசுக்கு ஒதுக்கப்பட்ட பேருந்துகளில்தான் நாங்கள் இங்கு வருகிறோம், ”என்றார், அவர்.
“பெரும்பாலான மொபைல் கழிப்பறைகள் தண்ணீர் இல்லாமலும், அசுத்தமாகவும் உள்ளன. புதர்களுக்கு பின்னால்தான் நாங்கள் இயற்கை உபாதைகளை கழித்துக் கொள்கிறோம்” என்றார் ஒரு காவலர்.
பெண் காவலர்கள் அருகில் உள்ள பெட்ரோல் பங்கிலும் ஒரு கோயிலிலும் உள்ள கழிப்பறைகளை பயன்படுத்துகின்றனர். சிங்கு எல்லைக்கு அருகில் உள்ள இரண்டு ரிசார்ட்டுகளின் கழிவறைகளையும் அவர்கள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.