Aran Sei

கடும் குளிரிலும் தொடரும் விவசாயிகள் போராட்டம் – பேச்சுவார்த்தை நடக்குமா?

டெல்லியில் சிங்கு எல்லையில் போராடும் விவசாயிகள் - Image Credit : indiatoday

விவசாயிகள், போராடுவதற்கென்று குறிக்கப்பட்ட இடத்துக்குப் போய் விட்டால், அவர்களுடன் டிசம்பர் 3-ம் தேதி பேச்சு வார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்த ஒன்றிய அரசு, விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளை இன்று மதியம் 3 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.

அரசு 32 விவசாயிகள் சங்கங்களை மட்டும் பேச்சவார்த்தைக்கு அழைத்திருப்பதை ஏற்றுக் கொள்ளாத போராடும் விவசாயிகள், நாடு முழுவதிலிருந்தும் 500 குழுக்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று கூறியுள்ளதாக இந்தியா டுடே செய்தி தெரிவிக்கிறது.

குளிர்காலத்தையும், கொரோனா நோய்த்தொற்றையும் காரணமாகக் காட்டி பேச்சுவார்த்தையை இன்று மதியம் 3 மணிக்கு நடத்த முன் வந்திருப்பதாக ஒன்றிய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர தோமார் கூறினார் என்று என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

“போராடுவதற்கென்று ஒதுக்கப்பட்ட இடமான புராரி மைதானம் திறந்த வெளி சிறை போன்றது” என்றும், “அரசு நிபந்தனைகள் அற்ற பேச்சுவார்த்தைக்கு முன் வர வேண்டும்” என்று கூறி விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் ஒன்றிய அரசின் முந்தைய அறிவிப்பை நிராகரித்திருந்தனர்.

நேற்று, டெல்லியின் சிங்கு எல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய கிசான் யூனியன் – தாகுண்டா தலைவர் ஜக்மோகன் சிங் நரேந்திர மோடியின் அணுகுமுறை தொடர்பாக வன்மையாக கண்டனம் தெரிவித்தார் என்று தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.

“பிரதமர் விவசாயிகளின் ‘மன் கி பாத்’ ஐ கேட்க வேண்டிய நேரம் வந்து விட்டது, இல்லா விட்டால் அவர் பெருத்த விலை கொடுக்க வேண்டியிருக்கும்” என்றும், “மூன்று விவசாய சீர்திருத்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற தமது கோரிக்கையை விட்டுக் கொடுக்க முடியாது” என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

நேற்று, சீக்கிய மதத்தை உருவாக்கியவரான குரு நானக்கின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக தமது ஊர்களில் தங்கியிருந்த விவசாயிகளும் இன்று முதல் டெல்லி போராட்டத்தில் இணைவார்கள் என்று விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன. டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள் நேற்று சாலைகளிலேயே குரு நானக் ஜெயந்தியை கொண்டாடினர் என்று இந்தியா டுடே செய்தி தெரிவிக்கிறது.

ஹரியானாவைச் சேர்ந்த அனைத்து காப் பஞ்சாயத்துகளும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக முடிவு செய்து, இன்று டெல்லியை நோக்கிச் செல்லவிருப்பதாக அறிவித்துள்ளன.

“விவசாய சட்டங்களை மறுபரீசலனை செய்யும்படி ஒன்றிய அரசை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.” என்று ஹரியானா காப் தலைவரும் தாத்ரி எம்எல்ஏவுமான சோம்பீர் சங்வான் கூறியிருக்கிறார்.

நேற்று இரவு போராடும் விவசாயிகளில் ஒருவரான, பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தின் கத்ரா கிராமத்தைச் சேர்ந்த கஜ்ஜன் சிங் என்ற விவசாயி டெல்லியின் திக்ரி எல்லையில் மாரடைப்பால் காலமானார் என்று என்டிடிவி செய்தி தெரிவிக்கிறது. அவரது உடல்நிலை கடும் குளிரால் மோசமடைந்தது என்று செய்தி தெரிவிக்கிறது.

டெல்லியின் சிங்கு எல்லையிலும், டிக்ரி எல்லையிலும் இருவழிப் போக்குவரத்துக்கும் மூடப்பட்டிருப்பதாக டெல்லி போலீஸ் ட்வீட் செய்திருக்கிறது. இரண்டு பகுதிகளிலும் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. டெல்லி- உத்தர பிரதேச எல்லையான காசிபூரில் போக்குவரத்து தடுக்கப்படவில்லை, அங்கு போராட்டம் நடந்து வருகிறது.

2 மாதங்களுக்கு மேலாக திட்டமிடப்பட்டு வந்த இந்தப் போராட்டத்தில் 500-க்கும் அதிகமான விவசாயிகளின் சங்கங்கள் பங்கேற்கின்றன. 3 லட்சம் விவசாயிகள் இந்த “டெல்லி சலோ” போராட்டத்தில் பங்கேற்பதாக விவசாய சங்கத் தலைவர்கள் கூறுகின்றனர்.

தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றா விட்டால், டெல்லிக்குள் வருவதற்கான  புள்ளிகளான சோனிபட், ரோஹ்தக், ஜெய்பூர், காசியாபாத்-ஹாப்புர், மதுரா ஆகிய இடங்களில் மறியல் செய்து டெல்லியை முற்றுகை இடப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

கடும் குளிரிலும் தொடரும் விவசாயிகள் போராட்டம் – பேச்சுவார்த்தை நடக்குமா?

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்