Aran Sei

டிராக்டர் பேரணி – ” வன்முறைக்குக் காரணம் அரசின் சதித் திட்டம் ” : விவசாய சங்கங்கள்

Image Credit : thehindu.com

குடியரசு தினத்தன்று, விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறைக்கும் குழப்பத்துக்கும் காரணம் அரசின் சதித் திட்டம்தான் என்று விவசாயிகள் சங்கங்கள் கூறியுள்ளன.

மத்திய அரசின் மூன்று விவசாய சீர்திருத்தச் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா, செவ்வாய்க் கிழமை டெல்லியில் நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது நிகழ்ந்த சில வன்முறை சம்பவங்கள்  தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சத்னம் சிங் பன்னு என்பவரை தலைவராகக் கொண்ட கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் கமிட்டி என்ற ஒரு பஞ்சாப் விவசாயிகள் சங்கத்துடனும், பாஜகவுடன் முன்னர் தொடர்பில் இருந்த பஞ்சாபி நடிகர் தீப் சித்துவுடனும் இணைந்து அரசு இந்தச் சதியை செய்தது என்று விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை நடந்த சில வருந்தத்தக்க நிகழ்வுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று பிப்ரவரி 1-ம் தேதி நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்த நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணியை தள்ளி வைப்பதாகவும், ஜனவரி 30-ம் தேதி காந்தி கொல்லப்பட்ட நாள் அன்று அமைதியையும் வன்முறை மறுப்பையும் வலியுறுத்தும் வகையில் நாடு முழுவதும் ஒரு நாள் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும் என்றும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

“எங்களது இயக்கம் அமைதியானதாக தொடர்கிறது. அரசுடனான வேறுபாட்டை அமைதியான முறையில் வெளிப்படுத்துவதில் விவசாயிகள் நம்பிக்கையுடன் உள்ளார்கள். நேற்றைய பேரணியின் போது வெளிப்பட்ட டெல்லி குடிமக்களின் அன்பு எங்களை நெகிழ வைக்கிறது” என்றும் சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் அறிக்கை தெரிவித்துள்ளது.

ஏற்றுக் கொண்ட பாதையில் இருந்து விலகிச் செல்லும்படி விவசாயிகளை தூண்டி விட்டதாக டெல்லி போலீஸ் விவசாய சங்கத் தலைவர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளது. அரசுடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட பல விவசாய சங்கத் தலைவர்கள் மீது போலீஸ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. டிராக்டர் பேரணிக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றுவதாக அவர்கள் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டிருந்தனர்.

விவசாய சங்கங்கள் பேரணிக்கான விதிகளையும் நிபந்தனைகளையும் பின்பற்றவில்லை என்றும் விவசாய சங்கத் தலைவர்கள் வன்முறையை தூண்டும் வகையில் பேசினார்கள் என்றும் அதன் விளைவாக 394 போலீஸ் படையினர் காயமடைந்துள்ளனர் என்றும் டெல்லி போலீஸ் ஆணையர் எஸ் என் ஶ்ரீவத்சவா கூறியுள்ளார்.

“அமைதியான விவசாயிகளின் பேரணி அரசு போட்ட சதித் திட்டத்தால் பாதிக்கப்பட்டது” என்று பஞ்சாப் விவசாயிகள் சங்கத் தலைவர் பல்பீர்சிங் ரஜேவால் கூறியுள்ளார்.

புதன்கிழமை இரவு சிங்கு எல்லையில் நடந்த சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசினார் என்று தி ஹிந்து தெரிவிக்கிறது.

கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் கமிட்டியைச் சேர்ந்த குழப்பம் விளைவிப்பவர்களுக்காக போலீஸ் தடுப்புகளை நீக்கியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனும் பிரதமர் நரேந்திர மோடியுடனும் தொடர்புடைய, ஆர்எஸ்எஸ் உடன் இணைப்பில் உள்ள நடிகர் தீப் சித்துதான் செங்கோட்டையில் கொடி ஏற்றும்படி தூண்டி விட்டார் என்று அவர் கூறியுள்ளார்.

“இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பேரணி. 2 லட்சத்துக்கும் அதிகமான டிராக்டர்களில் லட்சக்கணக்கான விவசாயிகள் இதில் பங்கேற்றனர். 99.9% விவசாயிகள் அமைதியாக போராட்டத்தில் கலந்து கொண்டனர்” என்று பல்பீர்சிங் ரஜேவால் மேலும் கூறியுள்ளார்.

விவசாயிகளின் பேரணி பெரும்பாலும் அமைதியாக ஏற்கனவே ஒத்துக் கொள்ளப்பட்ட பாதையில் நடந்தது என்றும், அனைத்து எல்லைகளில் இருந்தும் சென்ற விவசாயிகள் தமது பேரணியை அமைதியான முறையில் நேற்றே முடித்துக் கொண்டு விட்டனர் என்றும் சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் அறிக்கை தெரிவிக்கிறது.

சம்யுக்த கிசான் மோர்ச்சாவுடன் இணையாத ராஷ்ட்ரீய கிசான் மஜ்தூர் சங்கதன் தலைவர் வி எம் சிங், பாரதீய கிசான் யூனியன் – பானு ஆகியவை போராட்டத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளன. பாரதிய கிசான் யூனியன் – பானு அரசுக்கு நெருக்கமானதாக கருதப்படுகிறது என்று தி ஹிந்து தெரிவிக்கிறது.

“விவசாயிகள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட போலீஸ் வன்முறையை நாங்கள் கண்டிக்கிறோம். போலீசையும் பிற அரசு நிறுவனங்களையும் பயன்படுத்தி இயக்கத்தை ஒழித்துக் கட்ட முயற்சிக்கும் அரசின் முயற்சிகள் அம்பலப்பட்டுள்ளன” என்று கிசான் சம்யுக்த மோர்ச்சாவின் அறிக்கை தெரிவிக்கிறது.

“பேரணியில் டிராக்டர்களையும் பிற வாகனங்களையும் சேதப்படுத்திய போலீசின் முயற்சிகளையும் அவற்றை கைப்பற்றும் முயற்சிகளையும் நாங்கள் கண்டிக்கிறோம்” என்று விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

“செங்கோட்டையை போலீஸ் மட்டுமின்றி இராணுவ படைகளும் காவல் காக்கின்றன. செங்கோட்டையின் கதவுகளைத் திறந்து யார் போராட்டக்காரர்களை உள்ளே விட்டார்கள்” என்று ஸ்வராஜ் அபியான் தலைவர் யோகேந்திர யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய சின்னங்கள் அவமதிக்கப்பட்டதை விவசாயிகள் கடுமையாக கண்டனம் செய்கிறார்கள் என்றும் விவசாய சங்கங்களின் அறிக்கை கூறுகிறது. விவசாயிகள்தான் மிகப்பெரிய தேசியவாதிகள் என்றும் நாட்டின் நன்மதிப்பை பாதுகாப்பவர்கள் என்றும் அவ்வறிக்கை தெரிவித்துள்ளது. தேசிய சின்னங்களை அவமதித்தவர்கள் மீதும் சேதப்படுத்தியவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கும்படி அறிக்கை கேட்டுக் கொண்டுள்ளது.

“விவசாயிகளின் இயக்கம் வன்முறையானது என்று சித்தரிப்பதை ஏற்க முடியாது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் ஒரு சில சமூக விரோத சக்திகள், அவர்களுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை” என்று விவசாய சங்கங்களின் கூட்டறிக்கை தெரிவிக்கிறது.

“நேற்று கைது செய்யப்பட்ட அமைதியான போராட்டக்காரர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்” என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா கேட்டுக் கொண்டுள்ளது.

டிராக்டர் பேரணி – ” வன்முறைக்குக் காரணம் அரசின் சதித் திட்டம் ” : விவசாய சங்கங்கள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்