Aran Sei

உறுதியாகியுள்ள பிரதமரின் தேர்தல் வெற்றி – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Image Credits: Scroll

த்தரப்பிரதேசம், வாராணசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றதை எதிர்த்து,  எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் தேஜ் பகதூர் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்தே தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

2017-ம் ஆண்டு, தேஜ் பகதூர், காணொளி ஒன்றை பதிவிட்டார். அதில், பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தில் குறைபாடு உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

2019-ம் ஆண்டு, நடைபெற்ற பொது தேர்தலில், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக தேஜ் பகதூர் வேட்பு மனு தாக்கல் செய்தார். முதலில் சுயேட்சை வேட்பாளராகவும், பின்னர் சமாஜ்வாடி கட்சியின் சார்பிலும் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தேர்தல் பொறுப்பு அலுவலர் அவரது வேட்பு மனுவை நிராகரித்தார்.

“ஊழல் குற்றசாட்டு உள்ளவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது. ஊழல் நடவடிக்கை அல்லது அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக கூட தேஜ் பகதூர் பணி நீக்கம் செய்யப்பட்டு இருக்கலாம். ஆனால், தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க அவர், எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்கவில்லை” என்று கூறி அவரது வேட்பு மனுவை நிராகரிக்கப்பட்டது.

‘பிரதமர் அலுவலகம் தனிச் சிறப்பானது, வழக்கை நிலுவையில் வைத்திருக்க முடியாது” : உச்சநீதிமன்றம்

இதை எதிர்த்து தேஜ் பகதூர் தொடர்ந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.

இந்நிலையில், பிரதமரின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, ஆவணங்களைச் சமர்ப்பிக்க தேஜ் பகதூர் தேர்தல் பொறுப்பு அலுவலரிடம் கால அவகாசம் கேட்கவில்லை என்று நீதிமன்றத்தில் வாதிட்டார்.

“வேட்பாளர் இரண்டு நாட்கள் அவகாசம் கேட்கலாம், ஆனால் தேஜ் பகதூர் ஆவணத்தைச் சமர்ப்பிக்க நேரம் எதுவும் கேட்கவில்லை” என்று ஹரிஷ் சால்வே கூறினார்.

நேர நீட்டிப்பு கோரப்பட்டதாகத் தேர்தல் பொறுப்பு அதிகாரியே கூறியுள்ளார் என்று தேஜ் பகதூர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இரு தரப்பு வாதத்தையும் கேட்டஉச்ச நீதிமன்ற நீதிபதிகள்,  பிரதமரின் வெற்றியை எதிர்த்து  தேஜ் பகதூரால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.

உறுதியாகியுள்ள பிரதமரின் தேர்தல் வெற்றி – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்