பெங்களூருவைச் சேர்ந்த 21 வயதான பருவநிலை செயல்பாட்டாளர் தீஷா ரவியை டெல்லி போலீஸ் ஞாயிற்றுக் கிழமை கைது செய்துள்ளது.
ஸ்வீடனைச் சேர்ந்த பருவநிலை செயல்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க், இந்தியாவில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு வழிகாட்டும், “டூல்-கிட்”, ஒன்றை பகிர்ந்திருந்தது தொடர்பாக, இந்திய அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக டெல்லி போலீஸ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தது.
விவசாயிகள் போராட்டம் – களமிறங்கிய சுற்றுச்சூழலாளர்கள் – உலக அரங்கில் கவனம் அதிகரிப்பு
தேசவிரோத சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்று போலீஸ் கூறும் இந்த “டூல்-கிட்” என்பது உண்மையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பான கட்டுரைகள், சமூக வலைத்தள கணக்குகள் ஆகியவற்றின் தொகுப்பு ஆகும். இந்தப் போராட்டத்தைப் பற்றி அறிந்து கொண்டு, அதை பரப்புவதற்கு விரும்பும் யாருக்கும் உதவுவதற்காக அது உருவாக்கப்பட்டது என்று தி வயர் தெரிவிக்கிறது.
“டூல்-கிட் என்பது போராட்டங்களுக்காக தயாரிக்கப்படுவது, அது போராட்டத்தை ஆதரிப்பவர்கள் இயக்கத்தில் பங்கேற்க உதவுகிறது. அதிக எண்ணிக்கையில் ஆதரவாளர்களை திரட்டுவதன் மூலம் இயக்கத்தை வலுப்படுத்துகிறது” என்று தி வயர் விளக்கியிருந்தது. “ஒரு நீண்ட கால இயக்கத்தில், போராட்டத்தின் நியாயங்களை தெளிவுபடுத்தும் ஒரு துண்டறிக்கையின் புதிய வடிவம்” என்று டூல்-கிட்டை கருதலாம்”எ ன்றும் அது கூறியிருந்தது.
சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் மீது வழக்கு – டெல்லி காவல்துறை நடவடிக்கை
இந்த வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு டெல்லியில் ஒரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்ட தீஷா ரவியை 5 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுப்பியுள்ளார் நீதிபதி. இது கோபத்தையும், அதிர்ச்சியையும் சம அளவு தோற்றுவித்துள்ளதாக தி வயர் தெரிவிக்கிறது.
“நான் விவசாயிகளை ஆதரிக்க மட்டும்தான் செய்தேன்.. ஏனென்றால் அவர்கள்தான் நமது எதிர்காலம்… அவர்கள்தான் நமக்கு தேவையான உணவை வழங்குகிறார்கள்… நாம் எல்லோருக்கும் உணவு அவசியமானது.” என்று தீஷா ரவி நீதிமன்றத்தில் கூறியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.
தான் இந்த டூல்-கிட்-ஐ உருவாக்கவில்லை என்றும், ஆவணத்தில் இரண்டு எடிட்களை (திருத்தங்களை) மட்டும் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜாமியா மாணவி குல்பிஷா பாத்திமா – சிறையில் மதரீதியாகத் துன்புறுத்தப்படுவதாகப் புகார்
தீஷா ரவி சமீபத்தில் பெங்களூருவின் மவுன்ட் கார்மல் கல்லூரியில் இருந்து பட்டப் படிப்பு முடித்திருந்தார். இந்தியாவில் பருவநிலை மாற்றத்தை எதிர்ப்பதற்கான “எதிர்காலத்துக்கான வெள்ளிக் கிழமைகள் (Fridays for Future)” என்ற இயக்கத்தைத் உருவாக்கியவர்களில் அவரும் ஒருவர்.
தீஷா ரவி சார்பில் வாதிடுவதற்கு வழக்கறிஞர் யாரும் இல்லாத நிலையில், நீதிமன்ற விசாரணை நடைபெற்றதாக ரெபெக்கா மம்மன் ஜான் என்ற கிரிமினல் வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளதாக தி வயர் செய்தி தெரிவிக்கிறது.
“குற்றம் சாட்டப்பட்டவரை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு வழக்கறிஞர் உள்ளாரா என்பதை உறுதி செய்யாமல், ஒரு இளம் பெண்ணை 5 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுப்பிய, டெல்லி பட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தின் நீதிபதியின் நடத்தை மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
“வழக்கு பதிவேடுகளும், கைது அறிக்கையும் பரிசீலிக்கப்பட்டனவா? பெங்களூரு நீதிமன்றங்களின் இடமாற்ற பிடி உத்தரவு இல்லாமல் தீஷா ரவி பெங்களூருவிலிருந்து டெல்லியில் ஏன் நேரடியாக கொண்டு வரப்படுகிறார் என்று நீதிபதி கேட்டாரா” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சித்திக்கிற்கு ஒரு நீதி, அர்னாப் கோசாமிக்கு ஒரு நீதியா? – கபில் சிபல் கேள்வி
“விவசாயிகள் போராட்டம் தொடர்பான டூல்-கிட்-ல் அவர் பல திருத்தங்களைச் செய்தார் என்பதையும், அதனை பல சமூக ஊடகங்களின் சில குழுக்களில் பகிர்ந்தார் என்றும் நாங்கள் கண்டறிந்தோம்” என்று ஒரு போலீஸ் அதிகாரி தி ஹிந்துவிடம் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, டெல்லி போலீஸ் கூகிள் மற்றும் பிற சமூக ஊடக நிறுவனங்களிடம், விவசாயிகள் போராட்டம் பற்றிய இந்த “டூல்-கிட்”-ஐ உருவாக்கியவர்களுடன் தொடர்புடைய மின்னஞ்சல் முகவரிகள், இணைந்தள முகவரிகள், சில குறிப்பிட்ட சமூக ஊடக கணக்குகள் தொடர்பான தகவலை தரும்படி கேட்டிருந்தது.க
மத்திய அரசுக்கு அடிபணிந்த ட்விட்டர் நிறுவனம் – 500 க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகள் முடக்கம்
இது தொடர்பான, டெல்லி போலீசின் முதல் தகவல் அறிக்கை, “இந்திய அரசுக்கு எதிராக சமூக, கலாச்சார, பொருளாதார போர் நடத்தியதற்காக” பெயர் குறிப்பிடப்படாத “காலிஸ்தானி ஆதரவு” டூல்-கிட் உருவாக்கியவர்கள் மீது பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு கிரிமினல் சதித் திட்டம், தேச துரோகம் மற்றும் இந்திய குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தி வயர் தெரிவிக்கிறது.
இந்த டூல்-கிட்டின் ஒரு குறிப்பிட்ட பிரிவில், “ஜனவரி 26 அன்று ஹேஷ்டேகுகள் மூலம் டிஜிட்டல் தாக்குதல்கள் நடத்துவது, ஜனவரி 23 முதல் ட்வீட் மழை பொழிவது, ஜனவரி 26 அன்று நேரடியாக செயல்படுவது, விவசாயிகள் டெல்லிக்கு அணிவகுத்துச் செல்வதையும், பின்னர் போராட்டக் களத்துக்குத் திரும்புவதையும் கவனிப்பது” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸ் கூறுகிறது.
போலீசின் இந்தக் குற்றச்சாட்டுகள் செல்லத்தக்கவை இல்லை என்பதையும், இந்த விஷயம் தொடர்பான விசாரணையில் எந்த அர்த்தமும் இல்லை என்று ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி என்.சி அஸ்தானா தி வயர் தளத்தில் எழுதியிருந்தார்.
“அதனளவில் இந்த டூல்-கிட் முதல் தகவல் அறிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ள சட்டப் பிரிவுகளுடன் சிறிதளவும் கூட தொடர்புப்படுத்த முடியாதது. கிரிமினல் சதித்திட்டம் என்ற குற்றச்சாட்டைப் பொறுத்தவரையில், ஒரு விஷயத்தை ஆதரிப்பதும், ஒரு விஷயத்துக்கு ஆலோசனை வழங்குவதும், கிரிமினல் சதித்திட்டமாகாது” என்று அவர் தெளிவுபடுத்தியிருந்தார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.