Aran Sei

விவசாயிகள் போராட்டத்திற்கு அனுமதி – முடிவை வரவேற்ற பஞ்சாப் முதல்வர்

Image Credits: The Tribune India

த்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்துப் பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த விவசாய குழுக்கள் டெல்லி நோக்கிய பேரணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் குழுவினர் இன்று காலை டெல்லி எல்லையை அடைந்துள்ளனர். கண்ணீர்ப்புகை குண்டுகள் மற்றும் நீர் பீரங்கிகளைப் பயன்படுத்தி, அவர்கள் நகரத்திற்குள் நுழைவதைத் தடுக்கும் முயற்சியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது, வடமேற்கு டெல்லியில் நிரங்கரி மைதானத்தில் அமைதியான முறையில் போராட்டத்தை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்களுக்குக் கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதியன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து மசோதாக்கள் சட்டமாக்கப்பட்டன. இதனை எதிர்த்து ‘டெல்லி சலோ’ (டெல்லி போவோம்) எனும் பேரணியில் விவசாய சங்கங்கள் அழைப்புவிடுத்தன.

கொரோனா தோற்றுக் காலகட்டத்தில் பொதுக்கூட்டங்களில் ஈடுபடுவது ஆபத்து என்பதைச் சுட்டிக்காட்டி டெல்லி காவல்துறை, இந்தப் போராட்டத்திற்கு அனுமதியை மறுத்தது. விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக முள்வேலி, மணல் மூட்டைகள் , ட்ரோன்கள், நீர் பீரங்கிகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. டெல்லியில், பல இடங்களில் மெட்ரோ சேவைகள் நிறுத்தப்பட்டன.

“போராட்டத்தின்போது, விவசாயிகள் கைது செய்யப்படலாம். அவ்வாறு கைதானால் அவர்களை அடைத்து வைப்பதற்காக ஒன்பது அரங்கங்களை பயன்படுத்தக் காவல்துறை டெல்லி அரசிடம் அனுமதி கோரியுள்ளது” என்று ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

அரங்கங்களைச் சிறைகளாகப் பயன்படுத்த அனுமதி வழங்கக் கூடாது என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ராகவ் சாதா டெல்லி அரசிடம் வலியுறுத்தினார். “நம் நாட்டின் விவசாயிகள் குற்றவாளிகளோ தீவிரவாதிகளோ அல்ல. அமைதியாக எதிர்ப்பு தெரிவிப்பதற்கான உரிமை இந்திய அரசியலமைப்பு – 19 (1) பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. போராட்டங்கள் ஒரு சுதந்திரமான, ஜனநாயக சமுதாயத்தின் தனிச்சிறப்பாகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அரங்கங்களைச் சிறையாக மாற்ற டெல்லி அரசு அனுமதி வழங்கவில்லை. தற்போது, நிரங்கரி மைதானத்தில் அமைதியான முறையில் போராட்டத்தை நடத்த மத்திய அரசு விவசாயிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மத்திய அரசின் இந்த முடிவை வரவேற்றுள்ளார்.

விவசாயிகள் போராட்டத்திற்கு அனுமதி – முடிவை வரவேற்ற பஞ்சாப் முதல்வர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்