மத்திய அரசின் மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக, பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களில் பஞ்சாயத்து கூட்டங்களை நடத்தி வருகிறார். நேற்று உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில் நடைபெற்ற விவசாயிகள் சபையில் பேசிய அவர் கார்ப்பரேட்டுகளை புதிய வடிவத்திலான “திருடர்கள்” என்று அழைத்திருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
“நாட்டின் பசி எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக விலை வைத்து கார்ப்பரேட்டுகள் விற்பார்கள். உங்கள் உணவுப் பொருட்களை யாரையும் கட்டுப்படுத்த விடாதீர்கள்.” என்று அவர் பேசியுள்ளார்.
“குறைந்த பட்ச ஆதரவு விலை தொடர்பான சட்டத்தை அவர்கள் கொண்டு வர மாட்டார்கள். உணவுப் பொருட்களின் விலை குறையும்போது மலிவாக வாங்கி, அதிக விலைக்கு விற்பார்கள். இவர்கள் புதிய வடிவத்திலான திருடர்களை. நாட்டை இவர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
விவசாயிகளின் போராட்டம், ஏழைகளுக்கான போராட்டமும் ஆகும் என்று ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார். “பெட்ரோல், டீசல் விலைகள் என்ன அளவுக்கு போய் விட்டன! பெட்ரோல் விலை உயர்ந்தால் வாடகை அதிகரிக்கும், செலவுகளும் உயரும்” என்று விலைவாசி உயர்வதை சுட்டிக்காட்டிய அவர், அதை எதிர்த்து விவசாயிகள் போராடுவார்கள் என்று கூறியுள்ளார்.
“இந்த திருடர்கள் விவசாயிகளின் தலைப்பாகையுடன் விளையாடி விட்டனர், அதற்கான விலையை கொடுப்பார்கள்” என்று அவர் எச்சரித்துள்ளார்.
மதங்களுக்கு இடையே ஒற்றுமைக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
“அரசாங்கத்தின் திட்டங்கள் தொடர்பாக நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முசாஃபர் நகரில் அவர்கள் இந்துக்களையம் முஸ்லீம்களையும் சண்டை போட வைத்தார்கள். சீக்கியர்களை பிரிக்க நினைக்கிறார்கள். இதற்கு பலியாகி விடாமல் நாம் கவனமாக இருக்க வேண்டும். ஒற்றுமையாக தொடர வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.