ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் இணைந்து, கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. இந்த மருந்தின் பரிசோதனையைப் புனேவின் சீரம் நிறுவனம், மத்திய அரசின் மேற்பார்வையில் நடத்தி வருகிறது.
தமிழகத்தில், சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகத்தில், கோவிஷீல்டு தடுப்பு மருந்து, எதிர்ப்புச் சக்தியை உருவாக்குகிறதா என கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 40 வயது மதிக்கதக்க ஆண் ஒருவருக்கு, ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் கோவிஷீல்டு தடுப்பு மருத்து செலுத்தப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி கோவிஷீல்டு தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டவருக்கு, அடுத்த 10 நாட்களில் உடல் நலம் பாதிப்படைந்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பு மருந்து அவரது உடம்பில் பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
”அவருடைய நடவடிக்கைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது, மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடந்துக்கொண்டார்” என பாதிக்கப்பட்டவரின் மனைவி கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. இதையடுத்து அப்போல்லா மருத்துவமனையில் பரிசோதனை செய்துக்கொண்ட அவருக்கு நரம்பியல் குறைபாடு ஏற்பட்டு மூளையில் பாதிப்படைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டதுதான் காரணம் எனக் கூறி பூனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனத்திடம் ரூ 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு பதிவு செய்துள்ளார்.
இவருடைய குற்றச்சாட்டுக்குப் பதிலளிதுத்துள்ள சீரம் நிறுவனம், தவறான புரிதலுடன் நிறுவனத்தின் பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் நோக்கத்தோடு பாதிக்கப்பட்ட நபர் செயல்படுவதாகக் கூறியுள்ளார். சீரம் நிறுவனத்திற்கு அவர் ஏற்படுத்தியுள்ள அவப்பெயர் காரணமாக அவர்மீது ரூ 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தாக்கல் செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
“அவர் எந்த அடிப்படை நியாயமுமின்றி சீரம் நிறுவனத்திற்கு எதிராக அபாண்டமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தன்னார்வலரின் மருத்துவ நிலை குறித்து வருத்தம் கொண்டிருந்தாலும், தடுப்பூசி சோதனைக்கும் தன்னார்வலரின் மருத்துவ நிலைக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. சீரம் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்திலேயே இது திட்டமிட்டுப் பரப்பபட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என்று மருந்து நிறுவனம் கூறியதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைவரும், நிறுவன நெறிமுறைக் குழுவும் அவரது உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றம் அவருக்கு வழங்கப்பட்ட கோவிஷீல்டு மருந்தினாலா என விசாரித்து வருகின்றனர் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தொற்று நோய்கள் பிரிவின் தலைவரான சமிரன் பாண்டா தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.