மூன்று விவசாயச் சீர்திருத்தச் சட்டங்களை ஒரு ஆண்டு முதல் ஒன்றரை ஆண்டு காலம் வரை நிறுத்தி வைக்கவும், அவை தொடர்பாக பரிசீலிக்க ஒரு கமிட்டியை நியமிக்கவும் மத்திய அரசு முன் வந்துள்ளது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு முதலில் பணிந்து விட்டிருக்கிறது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.
விவசாய மசோதாக்கள் : உள்ளூர் வணிகர்களுக்கு பதில் கார்ப்பரேட்டுகள்
மத்திய அரசின் மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக லட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த நவம்பர் மாதம் முதல் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் போராடி வருகின்றனர். அந்தச் சட்டங்கள் விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்குவதற்கு இட்டுச் செல்லும் என்றும், இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரங்களை அழித்து விடும் என்றும் அவர்கள் அவற்றை எதிர்த்து வருகின்றனர்.
இது தொடர்பான 10-வது கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் நரேந்திர தோமர், பியூஷ் கோயல், சோம் பிரகாஷ் ஆகியோர் மத்திய அரசின் சார்பிலும் விவசாயிகளின் சார்பில் 40 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டதாக தி வயர் செய்தி தெரிவிக்கிறது.
பேச்சுவார்த்தையின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய நரேந்திர தோமர், “ஒரு ஆண்டு அல்லது ஒன்றரை ஆண்டுகளுக்கு விவசாய சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்க அரசு தயாராக உள்ளது” என்றும் “இந்தக் காலகட்டத்தில் அரசு பிரதிநிதிகளும் விவசாயிகளின் பிரதிநிதிகளும் ஒரு தீர்வை காண்பார்கள். தீர்வு என்னவாக இருந்தாலும் அது முன்னெடுத்துச் செல்லப்படும்” என்றும் கூறியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.
விவசாய சட்டங்கள் – ’வாய்ச் சொல்லால் பயனில்லை; குறைந்தபட்ச விலையை சட்டமாக்குங்கள்’ : காங்கிரஸ்
மூன்று விவசாயச் சட்டங்களை திருத்த வேண்டுமா, அல்லது ரத்து செய்ய வேண்டுமா என்று கமிட்டி பரிந்துரை வழங்கும் என்று பேச்சு வார்த்தையில் பங்கேற்ற மகிளா கிசான் அதிகார் மஞ்ச் என்ற விவசாய சங்கத்தின் தலைவர் கவிதா குருகாந்தி கூறியுள்ளார். குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான பிரச்சினைகளையும் இந்த கமிட்டி விவாதிக்குமா என்பதில் தெளிவில்லை என்று தி ஹிந்து கூறுகிறது.
உச்சநீதிமன்றம் அமைத்த குழுவிலிருந்து புபிந்தர் சிங் விலகல் – போராடும் விவசாயிகளோடு நிற்பதாக கருத்து
இந்த அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் ஒரு உறுதிமொழிப் பத்திரத்தையும் தாக்கல் செய்ய அரசுத் தரப்பு முன் வந்ததாக விவசாயிகள் சங்கத் தலைவர்கள் கூறியுள்ளனர். விவசாயிகள் போராட்டத்தை முடித்து வைப்பதற்காக உச்சநீதிமன்றம் நியமித்த 4 பேர் கொண்ட கமிட்டியில் பங்கேற்கப் போவதில்லை என்று விவசாய சங்கங்கள் முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் இந்த முன்வைப்புகளை திங்கள் கிழமையன்று சம்யுக்த கிசான் மோர்ச்சாவில் விவாதித்து, வெள்ளிக் கிழமை நடைபெறவுள்ள அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகளின் போது தமது பதிலை தெரிவிக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்ததாக தி ஹிந்து செய்தி கூறுகிறது.
“அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!” – பஞ்சாப் விவசாயிகளின் போராட்ட உணர்வு
விவசாய விளைபொருட்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையில் விற்கப்படுவதை உறுதி செய்வதற்கான சட்டரீதியான உத்தரவாதத்தையும் போராடும் விவசாயிகள் கோரி வருகின்றனர்.
புதன்கிழமை பேச்சு வார்த்தைகளின் போது விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கு தேசிய புலனாய்வு முகமை நோட்டீஸ்கள் அனுப்பியிருப்பதையும், அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டிருப்பதையும் விவசாய சங்கங்கள் எழுப்பினர்.
“ஒரு புறம் தீர்வுகளை காண்பது பற்றி பேசிக் கொண்டே, மறுபுறம் தேசிய புலனாய்வு முகமையும், மாநில போலீசும் போராடுபவர்களையும் அவர்களது ஆதரவாளர்களையும் அச்சுறுத்தி அழுத்தம் கொடுத்து வருகின்றன” என்று பாரதிய கிசான் யூனியனின் ஒரு பிரிவின் தலைவரான ராகேஷ் திகாயத் கூறியுள்ளார். இந்த விஷயத்தை உள்துறை அமைச்சகத்திடம் கொண்டு செல்வதாக நரேந்திர தோமர் உறுதியளித்துள்ளதாக திகாயத் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 26 பேரணி – லட்சம் டிராக்டர்களை அணிதிரட்டும் விவசாயிகள் சங்கங்கள்
Tractor2twitr என்ற போராடும் விவசாயிகளின் டிவிட்டர் கணக்கு “விவசாயச் சட்டங்கள் விவசாயிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் கொண்டு வரப்பட்டன. வரைவு எதுவும் பகிர்ந்து கொள்ளப்படவோ, விவாதிக்கப்படவோ இல்லை. முதலில் அவற்றை ரத்து செய்யுங்கள், பின்னர் புதிதாகத் தொடங்குவோம்” என்று ட்வீட் செய்துள்ளது.
Farm Laws were brought in without consultation with farmers. No draft was shared or discussed.
Repeal them first and we can start over.
#NoRepealNoGharWapsi pic.twitter.com/ZIay36nuYW— Tractor2ਟਵਿੱਟਰ (@Tractor2twitr) January 21, 2021
“இன்றைய ஹேஷ்டேக் ‘ரத்து இல்லை என்றால், வீடு திரும்புவதும் இல்லை'” என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக பல கருத்துப் படங்களையும் tractor2twitr வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.