நமது நாட்டின் அரசியல் சாசனம் (பட்டியல் சாதிகள்) ஆணை- 1950, இந்து, சீக்கிய, பௌத்த மதத்தை தவிர்த்து பிற மதங்களை சேர்ந்த எவரும் பட்டியல் வகுப்பினராக கருதப்பட முடியாது என்று கூறுகிறது.
ஆனால், இஸ்லாமிய, கிறிஸ்தவ குழுக்கள் தங்கள் மதங்களுக்கு மாறியுள்ள தலித்துகளுக்கு பட்டியல் வகுப்பினருக்குரிய அந்தஸ்து, சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரி வருகின்றன. ஆனால் இந்த கோரிக்கையை பாஜக கடுமையாக எதிர்த்து வருகிறது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், இதுதொடர்பாக ஆராய்வதற்கு உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் ஒன்றிய அரசு ஒரு ஆணையத்தை அமைத்துள்ளது.
3 உறுப்பினர்களை கொண்ட இந்த ஆணையத்தில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் ரவீந்தர் குமார் ஜெயின், பல்கலைக்கழக மானியக்குழு பேராசிரியர் சுஷ்மா யாதவ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இதற்கான அரசிதழ் அறிவிப்பை ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகார வழங்கல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. வரலாற்று ரீதியாக தாங்கள் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்கள், அதே நேரத்தில் அரசியல் சாசனத்தின் 341-வது சரத்தில் குறிப்பிடப்படாத பிற மதங்களுக்கு மாறி உள்ளோம் என்று கூறுகிறவர்களுக்கு பட்டியல் வகுப்பினர் அந்தஸ்து வழங்கப்படுவது குறித்து இந்த ஆணையம் ஆராயும்.
தலித்துகள் மதம் மாறிய பிறகு, அவர்களது பழக்கவழக்கங்கள், மரபுகள், சமூக பாகுபாடு, தாழ்வு நிலை ஆகியவற்றால் ஏற்படும் மாற்றங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும். இது குறித்த முடிவினால் ஏற்படுகிற தாக்கங்கள் குறித்தும் இந்த ஆணையம் ஆராயும்.
இந்த விவகாரத்துடன் பொருத்தமானதாக கருதும் மற்ற தொடர்புடைய கேள்விகளையும் ஒன்றிய அரசுடன் கலந்தாலோசித்து அதன் ஒப்புதலுடன் ஆணையம் ஆராயும். இந்த ஆணையம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும். இந்த ஆணையத்தின் தலைவர் பொறுப்பேற்றது முதல் 2 ஆண்டுகளுக்குள் தனது அறிக்கையை ஒன்றிய அரசுக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள் ஒன்றிய அரசின் அரசிதழ் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன. கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய மதத்துக்கு மாறிய தலித் மக்களுக்கு பட்டியல் வகுப்பினருக்கான அந்தஸ்து வழங்கினால், அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் வழங்கப்படுகிற இட ஒதுக்கீடு சலுகை, இவர்களுக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : indian express
PMK Ramados exposed in thilakavathy case as court acquitted akash | Thol Thirumavalavan | BJP | PMK
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.