Aran Sei

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் – கலவர களமாக மாற்ற முயற்சிக்கும் பாஜக

Image Credit : thewire.in

ஹைதராபாத்தில் ஒரு மாநகராட்சி தேர்தல் கலவரம் செய்யும் களமாக மாறியுள்ளது.

பாஜகவின் பிரச்சார வியூகங்கள் அனைத்தும் பயன்படுத்தப்பட வேண்டியதை உறுதி செய்ய பாஜகவின் முக்கிய தலைவர்களை அனைவரும் ஹைதராபாத்தில் களம் இறங்கியுள்ளனர் . பாகிஸ்தான், காஷ்மீர், முகலாயர்கள், பிரியாணி, அயோத்தியா, ரோஹிங்யா அகதிகள் என பல மாநிலங்களில் பல பிரச்சார மேடைகளில் கேட்கப்பட்ட அதே வார்த்தைகள் ஹைதராபாத்திலும் கேட்கப்படுகின்றன.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஹைதராபாத்தின்  “நிஜாமி கலாச்சாரத்தை  ஒழித்து  “மினி பாரத்”தாக மாற்றுவதாக வாக்குறுதி அளித்துள்ளார். ஹைதராபாத்தின் அடையாளமாக சார்மினாரின் சுவர்களையொட்டி இருக்கும் சர்ச்சைக்குரிய ஆலயத்திற்கு சென்று தன்னுடைய பிரச்சாரத்தை அவர் தொடங்கியுள்ளார்.

பாஜகவின் முதன்மை பிரச்சாரகராக உத்திர பிரதேச முதல்வர் ஆதித்தியநாத், தனக்கு பழக்கமான ‘பெயர் மாற்றம்’ எனும் கருவியை கையில் எடுத்துள்ளார். “ஹைதராபாத்” எனும் பெயர் இஸ்லாமிய வரலாற்றோடு இருப்பதால், அது “பாக்யநகர்” என மாற்றப்படும் என்று உறுதியளித்திருக்கிறார்.

தடுப்பு மருந்து தயாரிக்கும் ஒரு இடத்திற்கு மோடியும் சத்தமில்லாமல் வந்திருக்கிறார். டிசம்பர் 1 தேர்தல்களில் வெற்றி பெற்றால் இலவசமாக தடுப்பு மருந்துகளும், பரிசோதனைகளும் செய்யப்படும் என்று அளித்த வாக்குறுதிக்கும் இதற்கும் தொடர்பில்லை என நம்ப வேண்டுமாம்.

ஒரு சாதாரண மாநகராட்சி தேர்தலுக்கு இவ்வளவு அழுத்தமும், பதட்டமும் அவசியம் இல்லை.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்?

பாஜக இந்த தேர்தல்கள் வழியே இரண்டு போர்களை எதிர்கொள்ள நினைக்கலாம். சில காலமாகவே, தெலுங்கானா ராஷ்ட்ர சமிதியின் முதல்வர் கே. சந்திரசேகர் ராவிற்கு மிக அருகில் பாஜக போட்டியிடும் அளவு வளர்ந்து நிற்கிறது.

துபாகா சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு, தெலுங்கானாவில் தங்களுக்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக பாஜக நம்புகிறது. 24 சட்டசபை தொகுதிகள் இருக்கும்  ஹைதராபாத்தின் மாநகராட்சி தேர்தல்களை வென்றால், மாநில அளவில் போட்டியிட இது ஒரு தொடக்கமாக இருக்கும் என்று பாஜக கணிக்கிறது.

பல ஆண்டுகளாக, எந்த பிரச்சினையும் இல்லாமல், கே.சி.ஆர் தெலுங்கானாவை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். ஆனால் அவருடைய சர்வாதிகார ஆட்சிமுறை, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, சமீபத்திய வெள்ளத்தின் போது சரியான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது மக்களை பொறுமையிழக்க செய்திருக்கிறது.

தெலுங்கானா தனி மாநிலம் வேண்டும் எனும் கோரிக்கையின் முகமாக இருந்த அவருடைய கட்சி, கூடிய விரைவில் இனவாத அரசியலால் மறைக்கப்படலாம். இதே அரசியலை வைத்து சில மாநிலங்களில் பாஜக கால் பதித்திருக்கிறது.

தேசிய அளவிலான பார்வையாளர்களுக்காக ஒரு பெரிய அரசியல் போர் நடத்தவும் பாஜக முயற்சிக்கலாம். அசாதுதீன் ஒவைசிக்கும், அவருடைய அனைந்து இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹத்-உல்-முஸ்லீமின் கட்சிக்கும் ஹைதராபாத் தான் தாய் நகரம். மாநகராட்சியின் 150 சீட்களில் 50 சீட்கள், இஸ்லாமிய பெரும்பான்மையினர் இருக்கும் பகுதிகளில் இருக்கிறது – இந்தப் பகுதிகள் ஏ.ஐ.எம்.ஐ.எம்-ன் கோட்டையாக இருப்பவை.

தெலுங்கானாவிற்கு வெளியே தேர்தல்களில் ஒவைசியின் கட்சி தங்களை மாற்று “இஸ்லாமிய” தேர்வாக காண்பித்துக் கொள்கிறார்கள். முதன்முறையாக பீகாரில் ஐந்து சட்டசபை சீட்களை வென்றிருக்கிறார்கள். தமிழ்நாடு தேர்தல்களில் பங்கேற்க விரும்புவதாகவும், 2021 வங்காள தேர்தல்களில் பங்கேற்க திட்டங்கள் வகுப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தத் தொகுதிகளை பாஜக வெல்லவோ வெல்ல முயற்சிக்கவோ செய்யாது. ஆனால், ஏ.ஐ.எம்.ஐ.எம்-ஐ அச்சுறுத்தல் என பிரச்சாரம் செய்வதன் மூலம் இந்து வாக்குகளை ஒருங்கிணைக்க பாஜகவால் முடியும்.

கலவரங்கள் ஹைதராபாத்திற்கு புதிதல்ல. இந்நகரின் போர்களும், கலவரங்களும், குண்டு வெடிப்புகளும் இங்கிருக்கும் சமூகங்களை பிரித்திருக்கிறது.  ஹைதராபாத் பழைய நகரில் இருக்கும் ரோஹிங்யா அகதிகள் குறித்த அச்சம் சில ஆண்டுகளாகவே பரப்பப்பட்டு வருகிறது. மாநில மற்றும் பொதுத் தேர்தல்களில் இனவாத தொனியை உபயோகப்படுத்துவது வழக்கமானதாக இருந்து வருகிறது.

ஆனால், ஹைதரபாத் நகருக்கு பொறுப்பேற்ற அரசுகள் இதைக் கடந்து வந்திருக்கின்றன. ஹைதராபாத்தை கல்வி மற்றும் மென்பொருள் கூடமாக, நவீனமான முற்போக்கான மாநிலமாக உருவாக்கி காட்டியிருக்கின்றன. பாஜக அழிக்கப் போவதாகச் சொல்லும் நிஜாமி கலாச்சாரம் அந்நகரின் அத்தனை மக்களின், இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களின், பாரம்பரியம்.

ஹைதராபாத்தின் வளர்ச்சி சமீப காலமாக முடங்கியிருக்கிறது என்பது வேறு விஷயம். ஹைதராபாத் மக்கள் மோசமான சாலைகள், மோசமான சுகாதாரம், கல்வி குறித்து கவலைப்படுவதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். பொருளாதார சிக்கல் இருக்கும் நிலையில், மக்களில் பெரும்பாலானோர் உணவு வாங்குவதற்கு கூட சிரமப்படுகின்றனர். உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய குடிமக்கள் பிரச்சினையை எல்லாம் இந்த தேர்தல் பிரச்சாரத்தின் கூச்சல் மூழ்கடித்திருக்கிறது. ஹைதராபாத் மக்கள் இதைவிட சிறப்பான நிர்வாகத்தை, தலைவர்களை பெற தகுதியானவர்களே.

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் – கலவர களமாக மாற்ற முயற்சிக்கும் பாஜக

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்