Aran Sei

‘அனுராக் காஷ்யபுடன் இருக்கும் போது பாதுகாப்பாக உணர்கிறேன்’ : ராதிகா ஆப்தே

Image Credits: The News Minute

பிரபல பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார்.

பிளாக் ஃபிரைடே (Black Friday), தி லன்ச் பாக்ஸ் (The lunch Box), கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் (Gangs of Wasseypur) போன்ற வெற்றி படங்களை இயக்கிய அனுராக் காஷ்யப், 2018-ம் ஆண்டு வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார்.

தொடர்ந்து துணிச்சலாகத் தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்திவந்த காஷ்யப் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இயக்குனர் மணி ரத்னம், இயக்குனர் அபர்ணா சென் உட்பட 49 பிரபலங்களுடன் சேர்ந்து பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.

“முஸ்லிம்கள், தலித்துகள், பிற சிறுபான்மை இனத்தவர்களை அடித்துக் கொல்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். 2016-ம் ஆண்டுத் தலித்துகளுக்கு எதிராக நாட்டில் 840-க்கும் மேற்பட்ட வன்முறைகள் நடத்தப்பட்டதாகத் தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிவரத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்,” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

காஷ்யப்பின் அரசியில் நிலைப்பாடு காரணமாக, அவரது குடும்பத்தினரை பலரும் அச்சுறுத்துவதாகக் கூறி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது டிவிட்டர் கணக்கை விட்டு அனுராக் காஷ்யப் வெளியேறினார்.

இருப்பினும், மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்த  சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்களுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவந்தார்.

சமீபத்தில் ஸ்டாண்ட்-அப் நகைச்சுவையாளர் குணால் கம்ராவுடன் சேர்ந்து, பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு காலணியைப் பரிசளிக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பாலிவுட் நடிகை பாயல் கோஷ், தனது டிவிட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியை ‘டேக்’ செய்து, காஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

“இயக்குனர் அனுராக் காஷ்யப் என்னுடன் பாலியல் ரீதியில் தவறாக நடந்துகொண்டார். இந்தச் சம்பவம் 2014-2015-ல் நடந்தது. அப்போது, தனக்கு அமிதாப் பச்சன் நெருக்கமானவர் என்று அனுராக் காஷ்யப் கூறினார். மேலும், பல நடிகைகளுடன் நெருக்கமாக இருந்துள்ளதாகவும் தெரிவித்தார்.” என்று  பாயல் கோஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“இவருக்கு எதிராக பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் படைப்பாளிக்குப் பின்னால் உள்ள சாதனையை நாடு தெரிந்து கொள்ளட்டும். இதனால், எனக்கு தீங்கு விளையும் என்றும், எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் எனக்குத் தெரியும். எனவே, தயவுசெய்து உதவுங்கள்,” என்றும் அவர் அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

இதற்குப் பதிலளித்துள்ள காஷ்யப் “என்ன அதிசயம்! என் குரலை ஒடுக்கும் முயற்சிக்கு இத்தனை நீண்ட காலம் எடுத்திருக்கிறதே! சரி, போகட்டும். என்னை வாயடைக்கச் செய்ய முயற்சி செய்து ஒரு பெண்ணாக இருந்து கொண்டே பிற பெண்களையும் தன்னோடு சேர்த்துக் கொள்ளும் அளவுக்கு பொய் சொல்லியிருக்கிறார். கொஞ்சமாவது மரியாதை இருக்கட்டும், மேடம்! உங்கள் குற்றச்சாட்டு எல்லாமே எந்த அடிப்படையும் இல்லாதவை என்று மட்டும் சொல்வேன்,” என்று கூறியுள்ளார்.

காஷ்யப்பின் முதல் மனைவி ஆர்த்தி பஜாஜ், நடிகை தாப்ஸி பன்னு போன்றோர் காஷ்யப்புக்கு ஆதரவு தெரிவித்துவந்த நிலையில், நடிகை ராதிகா அப்தேவும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஷ்யப்புடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து காஷ்யப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

“நீங்கள் எனது மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர். எப்போதும் எனக்கு ஊக்கமளிப்பவராகவும் ஆதரவாகவும் இருந்திருக்கிறீர்கள். நீங்கள் என்னை எப்போதும் சமமாக நடாத்தியுள்ளீர்கள். நாம் இருவரும் பகிரும் அன்பையும் மரியாதையையும் நான் எப்போதுமே மனதில் போற்றி பாதுகாத்து வைத்திருக்கிறேன். உங்களை முதலில் பார்த்த நாளிலிருந்து, உங்கள் அருகில் இருக்கும்போது நான் மிகுந்த பாதுகாப்பாக உணர்ந்திருக்கிறேன். நீங்கள் எப்போதும் எனது நம்பிக்கையான நண்பர். லவ் யூ,”

என்று ராதிகா ஆப்தே புகைப்படத்துடன் இட்ட பதிவில் கூறியுள்ளார்.

‘அனுராக் காஷ்யபுடன் இருக்கும் போது பாதுகாப்பாக உணர்கிறேன்’ : ராதிகா ஆப்தே

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்