Aran Sei

‘லவ் ஜிகாத்’ – சேர்ந்து வாழும் உரிமை அடிப்படையானது – அலகாபாத் உயர்நீதிமன்றம்

அலகாபாத் உயர்நீதிமன்றம் - Image Credit : ndtv.com

த்தர பிரதேசத்தின் குஷிநகரைச் சேர்ந்த சலாமத் அன்சாரி மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“பிரியங்கா கர்வாரும் சலாமத் அன்சாரியும் இரண்டு வயது வந்த தனிநபர்கள். அவர்களது சொந்த விருப்பத்தின் பேரிலும், சுய முடிவின்படி அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் ஒரு ஆண்டுக்கு மேல் சேர்ந்து வாழ்கிறார்கள். இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 21-ன் கீழ் தனிநபருக்கு உத்தரவாதம் செய்யப்பட்டுள்ள வாழ்வையும் உயிரையும் உறுதி செய்ய வேண்டியது நீதிமன்றங்களின் மற்றும் அரசியல் சட்ட நீதிமன்றங்களின் பணியாகும்” என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா மாநிலங்களில், “லவ் ஜிகாத்” என்று வலதுசாரி குழுக்களால் வெறுப்பு பெயர் சூட்டி அழைக்கப்படும், முஸ்லீம் ஆண்களுக்கும் இந்து பெண்களுக்கும் இடையேயான உறவுகளுக்கு எதிராக, கடுமையான சட்டம் இயற்றுவது தொடர்பான விவாதங்கள் நடந்து வரும் நிலையில், கடந்த 11-ம் தேதி இந்தத் தீர்ப்பு வெளியாகியிருப்பதை என்டிடிவி சுட்டிக் காட்டுகிறது.

“மேஜர் வயதை எட்டிய ஒரு தனிநபர் யாருடன் சேர்ந்து வாழ்கிறார் என்பது அவரது சொந்த விருப்பத்தின்பாற்பட்டது. அவரது இந்த உரிமை மீறப்படுமானால், வாழ்வதற்கும் தனிநபர் சுதந்திரத்திற்கும் அந்த நபருக்கு இருக்கும் அடிப்படை உரிமையை அது மீறுவதாகும். துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை, சுயமரியாதையுடன் வாழ்வதற்கான உரிமை ஆகியவற்றை உறுதி செய்யும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு வழங்கும் தேர்ந்தெடுக்கும் உரிமையையும் அது உள்ளடக்கியது” என்று கூறியுள்ளனர்.

“நடந்ததாக சொல்லப்படும் திருமணம் செல்லுபடியாகுமா என்பது பற்றி” தாங்கள் கருத்து தெரிவிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ள நீதிபதிகள், “குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்பதாலும் தமது சொந்த விருப்பத்தின் பேரில் ஒரு ஆண்டுக்கும் மேலாக சேர்ந்து வாழும் வயது வந்த இரண்டு தனிநபர்கள் நம் முன் இருக்கிறார்கள் என்ற உண்மையை” கருத்தில் கொண்டும் வழக்கை தள்ளுபடி செய்வதாக கூறியுள்ளனர்.

சலாமத் அன்சாரியும், பிரியங்கா கர்வாரும் ஆகஸ்ட் 2019-ல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு முன்பு பிரியங்கா கர்வார் முஸ்லீமாக மதம் மாறி தனது பெயரை ஆலியா என்று மாற்றிக் கொண்டார்.

பிரியங்கா அல்லது ஆலியாவின் பெற்றோர் சலாமத் அன்சாரி மீது பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில், கடத்தல், திருமணத்துக்குக் கட்டாயப்படுத்துவதற்காக கடத்திச் செல்லுதல், குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பதற்கான சட்டம் ஆகியவற்றின் கீழ் புகார்களை கூறியிருந்தனர் என்று என்டிடிவி கூறுகிறது.

திருமணத்தின் போது பெண் மேஜர் என்பதை உறுதி செய்து கொண்ட உயர்நீதிமன்றம், “வாழ்வையும் சுதந்திரத்தையும்” உறுதி செய்வது குறித்து பல கருத்துக்களை தெரிவித்துள்ளது.

அரசியல் சட்டத்தை மேற்கோள் காட்டிய நீதிபதிகள், “ஒரே பாலினத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் கூட அமைதியாக ஒன்றாக சேர்ந்து வாழ்வதை சட்டம் அனுமதிக்கிறது. இந்நிலையில் இரண்டு வயது வந்த தனிநபர்கள், தமது சொந்த விருப்பத்தின் கீழ் சேர்ந்து வாழ்வதில் எந்த ஒரு நபருக்கோ அல்லது ஒரு குடும்பத்துக்கோ, ஏன் அரசுக்குக்கூட எந்த மறுப்பும் இருக்கக் கூடாது.” என்று கூறியுள்ளனார்.

“தான் தேர்ந்தெடுக்கப்பட்ட நபருடன் சேர்ந்து வாழ்வதற்கான உரிமை, அவர் எந்த மதத்தை பின்பற்றினாலும், உயிர் வாழும் உரிமையிலிருந்தும் தனிநபர் சுதந்திரத்திலிருந்தும் பிரிக்க முடியாத ஒன்று” என்று உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தெரிவிக்கிறது.

நவம்பர் 11-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த 14 பக்க உத்தரவில் நீதிபதிகள் விவேக் அகர்வால் மற்றும் பங்கஜ் நக்வி இருவரும் அலகாபாத் உயர்நீதிமன்றத்திலேயே இதற்கு முன்பு பிறப்பிக்கப்பட்ட இரண்டு உத்தரவுகள் தொடர்பாக கடுமையான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

2014-ம் ஆண்டு  வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு இடையேயான திருமணங்களுக்குப் பிறகு பாதுகாப்பு கோரிய 5 தம்பதியினரின் ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம், திருமணமாகி 3 மாதங்களுக்குப் பிறகு பாதுகாப்பு கோரி மனு தாக்கல் செய்த தம்பதியினரின் பிரச்சனையில் தலையிடுவதற்கு ஒற்றை நீதிபதி அமர்வு மறுத்து விட்டிருந்தது. “திருமணத்துக்காகவே மதம் மாறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது” என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை நீதிபதி சுட்டிக் காட்டியிருந்தார்.

“இரண்டு வயதுவந்த தனிநபர்களின் வாழ்வும் சுதந்திரமும் தொடர்பான பிரச்சனையை இந்த இரண்டு தீர்ப்புகளும் கையாளத் தவறி விட்டன. தமது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் உரிமையையோ, யாருடன் சேர்ந்து வாழ்வது என்று முடிவு செய்வதில் அவர்களுக்கு இருக்கும் சுதந்திரத்தையோ இந்தத் தீர்ப்புகள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. நூர்ஜகான் (2014) மற்றும் பிரியான்ஷி (செப்டம்பர் 2020) என்ற இந்த இரண்டு தீர்ப்புகளும் நல்ல சட்டத்தை வழங்கவில்லை என்று நாங்கள் தீர்ப்பளிக்கிறோம்” என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

‘லவ் ஜிகாத்’  – சேர்ந்து வாழும் உரிமை அடிப்படையானது – அலகாபாத் உயர்நீதிமன்றம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்