Aran Sei

அஹமது பட்டேல் மறைவு – நம்பிக்கையான தோழரை இழந்துவிட்டேன் என சோனியா வருத்தம்

காங்கிரஸின் மூத்த தலைவர் அஹமது படேல் (71) இன்று காலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

அக்டோபர் மாதம் கொரொனாவால் பாதிக்கப்பட்டிருந்த அஹமது படேல் சில தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவு காரணமாக குர்காவுனில் இருக்கும் மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கொரொனா தாக்கத்தால் நுரையீரல் பாதிப்படைந்து மிகவும் பலவீனமாகியிருந்த அஹமது படேல், இன்று அதிகாலை உயிரிழந்தார். காங்கிரஸின் இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்த அஹமது படேலின் மறைவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உட்பட தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நம்பிக்கையான சக பணியாளரை, ஈடு செய்ய முடியாத தோழரை இழந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். அஹமது படேல் சோனியா காந்தியின் அரசியல் செயலாளராகவும், நெருங்கிய நண்பராகவும் இருந்தவர். “அவருடைய விசுவாசம், அர்ப்பணிப்பு, கடமையுணர்வு, எப்போதும் உதவ தயாராக இருக்கும் இயல்பு, பெருந்தன்மை எல்லாம் மற்றவர்களிடம் இருந்து அவரை வேறுபடுத்திக் காட்டியது” என தன்னுடைய இரங்கல் செய்தியில் கூறியிருக்கிறார்.

ராகுல் காந்தி, “இது ஒரு துயரமான நாள். அஹமது படேல் காங்கிரஸின் தூணாக இருந்தவர். காங்கிரஸுக்காகவே சுவாசித்தவர், வாழ்ந்தவர். இது ஒரு பெரிய இழப்பு” என ட்வீட் செய்திருக்கிறார்.

நரேந்திர மோடி, “அஹமது படேல் பல வருடங்கள் சமூகத்திற்காக பொது சேவை செய்தவர். அவருடைய கூர்மையான அறிவிற்காக அறியப்பட்டவர், காங்கிரஸை பலப்படுத்தியதில் அவருடைய பங்கு எப்போதும் பேசப்படும்” என்று ட்வீட் செய்திருக்கிறார்.

பத்திரிக்கையாளர் ஹரிஷ் காரே தி வயர் இணையதளத்தில் எழுதியிருக்கும் இரங்கல் செய்தியில் அஹமது படேல் காங்கிரஸுக்கும், சோனியா காந்திக்கும் எவ்வளவு முக்கியமானவராக இருந்தார் என்பதை நினைவு கூர்கிறார்.

“காங்கிரஸை சோனியா காந்திக்கும், சோனியா காந்தியின் செயல்பாட்டை காங்கிரஸுக்கும் ஏற்றதாக மாற்றியது அஹமது படேல் தான்.யாருமே தமக்கு நிரந்தர எதிரிகள் கிடையாது என்பதை அவர் உறுதியாக நம்பினார். பல்வேறு வேற்றுமைகளும் வேறுபாடுகளும் இருக்கும் இந்நாட்டை ஒற்றுமைபடுத்துவது தான் காங்கிரஸின் குறிக்கோள் என்று அவர் நம்பினார்” என்று எழுதுகிறார்.

ராஜீவ் காந்திக்கும், அஹமது படேலுக்குமான உறவு குறித்து எழுதும் போது, “படேலின் அரசியல் நிர்வாக உணர்வுகளை ராஜீவ் காந்தி நம்பினார்” என்கிறார் ஹரிஷ்.

“1984-ல் மக்களவை தேர்தல்களில் பிரம்மாண்ட வெற்றியை பெற்ற பிறகு, ராஜீவ் காந்தி பாராளுமன்ற செயலாளர்கள் குழு ஒன்றை வைத்து ஒரு பரிசோதனை செய்து பார்த்தார். அந்த குழுவில் – அருண் சிங், அஹமது படேல் மற்றும் ஆஸ்கர் ஃபெர்னாண்டஸ் இருந்தனர். இந்த குழு ராஜீவ் காந்தியின் ‘அமர், அக்பர், ஆண்டணி’ என்று அழைக்கப்பட்டது. ராஜீவ் காந்தி படேலின் அரசியல் நிர்வாக உணர்வுகளை மதித்தார். விரைவிலேயே அவர் குஜாராத் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அந்த நேரம் குஜராத் காங்கிரஸ் மாதவ்சிங் சோலங்கி, ஜின்ஹாபாய் தர்ஜி, சனட் மேத்தா, அமர்சிங் சௌதரி,ப்ரபோத் ராவல் என பல மூத்த தலைவர்களோடு இருந்தது. படேலை அங்கிருந்த தலைவர்கள் படேலை சகித்துக் கொண்டார்கள், மதிக்கவில்லை. குஜராத் காங்கிரஸ் தலைவர்களின் குழுவாதத்திற்கு காங்கிரஸ் கொடுக்கும் விலை என்ன என்பதை படேல் பல தடுமாற்றங்களுக்கு பிறகு கற்றுக் கொண்டார். காங்கிரஸை பலவீனமாக்கும் யாரையும், எதையும் தவிர்க்க வேண்டும் எனும் கொள்கையை வகுத்துக் கொண்டார், அதன்படியே இறுதிவரை வாழ்ந்தார்” என்று ஹரிஷ் காரே எழுதியிருக்கிறார்.

பாபர் மசூதி இடிப்பிற்கு பிறகான காலத்தில் காங்கிரஸில் அஹமது படேலின் செயல்பாடுகள் முக்கியமானதாக சொல்லப்படுகிறது. இது குறித்து ஹரிஷ்,
“பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு அர்ஜுன் சிங், நட்வர் சிங்,எம்.எல்.ஃபொடெதர், ஷிவ் சங்கர் மற்றும் ஷீலா தீக்‌ஷித் அடங்கிய குழு – பி.வி.நரசிம்ம ராவை வெளியேற்ற முயற்சித்த போது, அதற்கு அஹமது படேல் இடம் கொடுக்கவில்லை. நாடு இனவாத படைகளின் தாக்குதலில் இருக்கும் போது, காங்கிரஸில் குழப்பம் உண்டாக நேரம் இல்லை என்றார். சோனியா காந்தி இந்த நரசிம்ம ராவிற்கு எதிரான குழுவில் இழுக்கப்படமால் இருப்பதை உறுதி செய்ததும் படேலாக இருக்க வாய்ப்பிருக்கிறது” என்று எழுதியிருக்கிறார்.

“தொடக்கத்தில் ஒரு கடினமான உறவே இருந்தாலும், பின்னாட்களில் அஹமது படேலின் அறிவுரையை சோனியா மதிக்கத் தொடங்கினார். சோனியா இத்தனை காலம் காங்கிரஸின் தலைவராக இருந்தார் என்றால் அதற்கு ஒரே காரணம், அஹமது படேல் அவர் இருந்து, சோனியாவிற்கு எது நல்லது காங்கிரஸுக்கு எது நல்லது என பார்த்துக் கொண்டது தான்” என்கிறார் ஹரிஷ்.

அஹமது படேலின் மறைவு காங்கிரசில் சோனியா காந்தியின் ஈடுபாட்டிற்கும், காங்கிரஸ் வரலாற்றின் ஒரு பகுதிக்கும் முடிவாக இருக்கும்.

அஹமது பட்டேல் மறைவு – நம்பிக்கையான தோழரை இழந்துவிட்டேன் என சோனியா வருத்தம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்