“அதானி குழுமத்தின் சரிவு மோடியின் ஆட்சியை வலுவிழக்கச் செய்யும். ஒருவகையில், அது இந்தியாவில் ஜனநாயக மறுமலர்ச்சிக்கான வாய்ப்பை ஏற்படுத்தும்” என்று அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதானி குழுமம் பங்கு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், கடந்த மாதம் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கை வெளியானதையடுத்து அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு சரியத் தொடங்கியது. ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் அக்குழுமத்துக்கு இழப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் ஜனநாயகம், கருத்துச் சுதந்திரத்தை வளர்த்தெடுக்கும் நோக்கில் ஓப்பன் சொசைட்டி என்ற அறக்கட்டளையை நடத்தி வரும் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ், “மோடியும் அதானியும் மிக நெருக்கமானவர்கள். அவர்கள் இருவரது வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று பிணைந்தது. தற்போது அதானி குழுமம் சீட்டுக் கட்டு சரிவதுபோல் சரிந்துள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் மோடி அமைதியாக இருக்கிறார். சர்வதேச முதலீட்டாளர்களின் கேள்விக்கு அவர் நாடாளுமன்றத்தில் பதில் அளித்தாக வேண்டும். அதானி குழுமத்தின் சரிவு மோடியின் ஆட்சியை வலுவிழக்கச் செய்யும். ஒருவகையில், அது இந்தியாவில் ஜனநாயக மறுமலர்ச்சிக்கான வாய்ப்பை ஏற்படுத்தும்” என்று கருத்து தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்ஜ் சோரஸின் பேச்சு இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ஜார்ஜ் சோரஸின் கருத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Source : NDTV
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.