Aran Sei

`புயலை விட ஆபத்தானது இந்திய அரசு’ – தொழிலாளர் சங்கங்கள்

Image Credits: National Chronicle

த்திய அரசின் விவசாய மற்றும் தொழிலாளர் சட்டங்களைக் கண்டித்து இன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில், நிவர் புயல் காரணமாக 13 மாவட்டங்களுக்குத் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

இதையடுத்து வேலை நிறுத்த அறிவிப்பினைச் சூழலுக்கு ஏற்றவாறு நடத்த திட்டமிட்டுள்ளதாக, தொழில் சங்கக் கூட்டமைப்பு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், ஐஎன்டியுசி உள்ளிட்ட பல தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தமிழகப் பிரிவின் நிர்வாகிகள் இதில் கையொப்பமிட்டுள்ளனர்.

வெளியாகியுள்ள அறிக்கையில், “வங்காள விரிகுடா பகுதியில் உருவான ‘நிவர்’ புயல் திசை மாறி, வேகம் குறைந்து, அதி தீவிரப் புயலாக மாறி இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் பொது வேலை நிறுத்த நாள் அன்று (இன்று) தமிழகத்தின் வடமாவட்டங்களில் புயல் பாதிப்பும் பெரும் மழையும் இருக்கலாம். இச்சூழலில் 13 மாவட்டங்களுக்கு அரசு பொது விடுமுறையை அறிவித்துள்ளது. ஆகவே நமது செயல் திட்டத்தில் சிறிது மாறுதல் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

“புயலின் தாக்கத்தை விட இந்திய அரசு தொழிலாளர்கள், விவசாயிகள் மீது தொடுக்கின்ற தாக்குதல் பல மடங்கு அதிகமானது; கொடூரமானது. பொது விடுமுறை அறிவிக்கப்பட்ட 13 மாவட்டங்களில் வேலை நிறுத்தம் சாத்தியமில்லை. ஆனால் இதர மாவட்டங்களில் பொது வேலை நிறுத்தம் நடத்தப்பட வேண்டும்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணி மற்றும் அத்தியாவசியப் பணியில் உள்ள தொழிலாளர்கள் பணிக்குச் செல்லலாம். அதேபோல் வேறு மாவட்டங்களில் இருந்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிக்குச் செல்ல வேண்டிய மின் வாரியம் போன்ற துறைகளின் தொழிலாளர்களும் பணிக்குச் செல்லலாம். போராட்டம் மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிரானதே தவிர, மக்களுக்கு எதிரானது அல்ல” எனத் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

“பாதிப்புக்கு ஆளாகியுள்ள மேற்கு சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உடனடியாக மக்கள் நிவாரணப் பணிகளில் தொழிற்சங்க அமைப்புகளும் தொழிற்சங்கங்களும் ஈடுபட வேண்டியிருப்பதால், இந்த நேரத்தில் மறியல் போராட்டம் நடத்துவது பொருத்தமற்றது. எனவே, அதைக் கைவிடலாம்” என்றும் அறிக்கையில் கூறியுள்ளனர்.

“புயல் பாதிப்புக்கு ஆட்படாத பகுதிகளில் அங்கு மழை பெய்துகொண்டிருந்தாலும் கூட  மறியல் போராட்டத்தை நடத்துவது சரியானதாகும். இதில் மாற்றம் தேவைப்படுமெனில், அந்தந்த மாவட்ட தலைவர்கள் கலந்து பேசி வேறு போராட்ட வடிவத்தை நிர்ணயிக்கலாம்” எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையியல், இந்தியாவின் பிற மாநிலங்களில் அறிவித்தபடி பொது வேலை நிறுத்தம் நடைபெறயுள்ளது. இதில், சுமார் 25 கோடி தொழிலாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக 10 மத்திய தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், “நவம்பர் 26 அகில இந்திய வேலைநிறுத்தத்திற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன. இந்த முறை 25 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

`புயலை விட ஆபத்தானது இந்திய அரசு’ – தொழிலாளர் சங்கங்கள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்