மத்திய அரசின் மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாய சங்கங்கள், பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 27 வரை போராட்டத்துக்கான நிகழ்ச்சி நிரலை அறிவித்துள்ளன.
விவசாயிகளுக்கு எதிராக அடக்குமுறை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அவர்கள், போராட்டத்தை தீவிரப்படுத்துவதாக இந்த நிகழ்வுகளை அறிவித்துள்ளனர் என்று தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
டெல்லியில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய, போராடும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா, போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் திட்டத்தின் கீழ்
பிப்ரவரி 23 ஐ “பகாடி சம்பல் திவஸ்” ஆகவும்
பிப்ரவரி 24 ஐ “தாமன் விரோதி திவஸ்” ஆகவும்
பிப்ரவரி 26 ஐ “யுவா கிசான் திவஸ்” (இளம் விவசாயிகள் தினம்) ஆகவும்
பிப்ரவரி 27 ஐ “மஜ்தூர் கிசான் திவஸ்” (விவசாயி-தொழிலாளர் ஒற்றுமை தினம்) ஆகவும்
கடைப்பிடிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
“போராடும் விவசாயிகளுக்கு எதிராக கைதுகள், சிறை வைப்பு, வழக்குகளை பதிவு செய்வது ஆகிய எல்லா வகையான அடக்குமுறை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.” என்று விவசாயிகள் தலைவர் யோகேந்திர யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். “டெல்லியில் சிங்கு எல்லை அரணிடப்பட்டு சர்வதேச எல்லை போல தோற்றமளிக்கிறது” என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
நாட்டின் தலைநகரான டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் குடியரசு தின டிராக்டர் பேரணியின் ஒரு சிறு பகுதியில், ஒரு சிறு கும்பல் வன்முறையில் ஈடுபட்டதை முன் வைத்து டெல்லி போலீஸ் இந்த ஒடுக்குமுறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
“பசியை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க விடமாட்டோம்” – போராடும் விவசாயிகள் உறுதி
சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் இன்னொரு தலைவர் தர்ஷன் பால், டெல்லி போலீசால் கைது செய்யப்பட்ட 122 பேரில் 32 பேர் பிணை பெற்றுள்ளனர் என்று கூறியுள்ளதாக தி ஹிந்து தெரிவிக்கிறது.
நாடாளுமன்ற கூட்டம் – விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக தனி விவாதம் நடத்த அரசு மறுப்பு
மார்ச் 8 முதல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒட்டி, ஒரு நீண்ட காலத் திட்டம் விவாதிக்கப்பட்டு சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் அடுத்த கூட்டத்தில் அது பகிர்ந்து கொள்ளப்படும் என்று தர்ஷன் பால் கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.