ஆசிய நாடுகளிலேயே இந்தியாவில்தான் லஞ்சம் கொடுக்கப்படுவது அதிகமாக இருக்கிறது என ட்ரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் ( Transparency International) எனும் சிவில் சமூக அமைப்பின் ஆய்வு முடிவுகள் சொல்வதாக தி ஹிந்து தெரிவிக்கிறது.
17 நாடுகளில் 20,000 மக்களை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. காவல்துறையினர், நீதிமன்றங்கள், பொது மருத்துவமனைகள், அடையாள ஆவணங்கள், சிலிண்டர், தண்ணீர் இணைப்பு போன்ற தேவைகள் – என ஆறு பிரிவுகளை வைத்து ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.
“சர்வதேச ஊழல் அளவீடு – ஆசியா’ எனும் தலைப்பில் வெளியாகியிருக்கும் ஆய்வில், லஞ்ச சதவிகிதம் இந்தியாவில்தான் அதிகம் இருப்பதாக (39%) தெரியவந்திருக்கிறது. தனிப்பிட்ட தொடர்புகளை வைத்து அரசுத்துறைகளில் தங்களுக்கான வேலைகளை நடத்திக்கொள்வதிலும் இந்தியாவே முதலிடத்தில் இருக்கிறது (46%). இந்தியாவைத் தொடர்ந்து இந்தோனேசியா 36%, சீனா 32% ஆகிய நாடுகள் முறையே இரண்டாவது, மூன்றாவது இடத்தில் இருக்கின்றன”.
இந்தியாவில் லஞ்சம் கொடுத்திருக்கும் 50% பேரிடம் நேரடியாக லஞ்சம் கேட்கப்பட்டது எனச் சொல்லியிருக்கிறார்கள். தங்களுடைய தொடர்புகளை வைத்து பொதுத் துறைகளில் வேலைகளைச் சாதிப்பவர்களில் 32% பேர், இப்படிச் செய்யாவிட்டால் வேலை நடக்காது என்று சொல்லியிருக்கின்றனர்.
இந்தியாவில் காவல்துறையினரை வெவ்வேறு காரணங்களுக்காகச் சந்தித்தவர்களில், 42 % பேர் லஞ்சம் கொடுத்திருக்கின்றனர். அடையாள ஆவணங்களை வாங்குவதற்கும் அதிகமாகவே (41%) லஞ்சம் கொடுக்கப்படுகிறது என்கிறது ஆய்வு.
காரணமில்லாமல் இழுத்தடிக்கப்படும் வேலைகள், சிக்கலான அதிகாரத்துவ நடவடிக்கைகள், முறையில்லாத ஒழுங்குமுறை நடவடிக்கைகள் என மக்கள் லஞ்சத்தைத் தேர்ந்தெடுக்கப் பல காரணிகள் இருக்கின்றன. லஞ்சம் கேட்கப்படுவது குறித்து புகார் செய்தால் அதற்குப் பிறகு அதிகாரிகளால் எதாவது தொந்தரவு வரும் எனும் பயத்திலேயே பெரும்பாலான மக்கள் இது குறித்துப் புகார் அளிக்காமல் இருப்பதாக ஆய்வு சொல்கிறது.
அத்தியாவசியத் தேவைகளாக இருக்கும் அரசு சேவைகளுக்குப் பயனர்கள் எளிதாய்ப் பயன்படுத்தக்கூடிய இணையதளங்கள் வடிவமைக்கப்பட வேண்டும்; லஞ்சத்தைத் தடுக்க வலிமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பொது சேவைகளுக்கான நிர்வாகங்களை மத்திய அரசுகளும், மாநில அரசுகளும் மேம்படுத்த வேண்டும் என ஆய்வை நடத்தியவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
இந்தியா போல மக்கள்தொகை அதிகம் இருக்கும் நாடுகளில் நிர்வாக முறைகள் ஒழுங்குபடுத்தப்படாத போது, குடிமக்களின் அடிப்படை தேவைகள் கூட பூர்த்தி செய்யப்படாமல் போவதுண்டு. பாஜக அரசு நடைமுறையில் இருக்கும் நிர்வாக அமைப்பை மேம்படுத்த முயற்சிக்காமல் புதுப்புது திட்டங்களைச் செயல்படுத்த நினைப்பது வழக்கமாகவே நடந்து வருவது. 2016 ஆம் ஆண்டின் பணமதிப்பிழப்பு திட்டம் தொடங்கி, பிரதம மந்திரி ஜன் தன் திட்டத்தினால் திறக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் வரை எதுவும் மக்களுக்கானதாக இருக்கவில்லை. அதே சமயம், நிர்வாகங்களில் இருக்கும் குறைகளைக் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு மக்கள்தொகையைக் கை காண்பித்துவிட்டு அதிகாரிகள் தப்பிப்பதும் உண்டு.
மூன்று வாரங்களுக்கு முன், லஞ்சம் தொடர்பான பொதுநல வழக்கொன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “ஊழல், லஞ்சத்தை ஒழிக்க வட-கொரியா, சீனா, தாய்லாந்து, இந்தோனேசியா, மொரோக்கோவில் இருப்பது போல குற்றவாளிக்கு மரண தண்டனை அளிக்கும் முறையைக் கொண்டு வர வேண்டும்” என மத்திய அரசிற்குப் பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.