டெல்லி, சென்னை, ஹைதராபாத், இந்தூர் உட்படப் பல இந்திய நகரங்கள், உலகில் அதிகம் கண்காணிக்கப்படும் நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஆனால் அதிக சிசிடிவி கண்காணிப்பு கேமரா அதிகரித்தும் அந்நகரங்களில் குற்றங்கள் குறையவில்லை என்று காம்பெரிடெக்(Comparitech) நிறுவன ஆய்வில் தெரிய வந்துள்ளது.
காம்பெரிடெக் இணையதளம் உலகம் முழுவதும் உள்ள முக்கிய 150 நகரங்களில் CCTV கேமராக்களின் பயன்பாடு குறித்த ஒரு அறிக்கையை கடந்த மே மாதத்தில் வெளியிட்டது. உலகளவில் சுமார் 77 கோடி CCTV கேமராக்கள் இருப்பதாகவும், அவற்றில் 54% சீனாவில் மட்டும் இருப்பதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.
உலகளவில் சீனாவில்தான் அதிகபட்ச கண்காணிப்பு கேமாராக்கள் உள்ள நகரங்கள் இருந்த போதிலும், பல இந்திய நகரங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் உள்ள முதல் முக்கிய 15 நகரங்களில் சுமார் 15.4 இலட்சம் CCTV கேமராக்கள் உள்ளன. புதுடெல்லி (5,51,500), ஹைதராபாத் (3,75,000), சென்னை (2,80,000), மற்றும் இந்தூரில் (2,00,600) தான் நாட்டிலேயே அதிக CCTV கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. இந்தியாவில் பொருத்தப்பட்டுள்ள 91.1% சிசிடிவி கேமராக்கள் இந்த 4 நகரங்களில் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள பெரும்பாலான நகரங்கள் சராசரியாக 30-70 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்டுள்ளன. இந்த நகரங்களில் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கை அனைத்தும் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதாக இந்த அறிக்கை காட்டுகிறது.
மக்கள்தொகையில் அடிப்படையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் உலகளவில், இந்தூர்1000 பேருக்கு 64.43 கேமராக்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது. ஹைதராபாத் 12 ஆவது இடத்திலும் (36.52), மற்றும் புது டெல்லி 16 ஆவது(33.73) இடத்திலும் உள்ளது.
உலகளவில் ஒரு சதுர மைலுக்கு 1,826.58 கண்காணிப்பு கேமராக்களுடன் புதுடெல்லி முதலிடத்திலும், சென்னை மூன்றாவது இடத்திலும் (609.9), மும்பை 18வது இடத்திலும் (157.4) இருப்பதாக அறிக்கை காட்டுகிறது.
இந்தியாவில் அதிகளவில் சிசிடிவி கண்காணிப்பு நகரங்களான புது தில்லி (59.54), இந்தூர் (49.88), ஹைதராபாத் (43.78) மற்றும் சென்னை (40.87) போன்ற நகரங்கள் அதிகளவில் குற்றங்கள் நடைபெறும் நகரங்களாகவும் உள்ளன. ஆனால் குற்றங்கள் அதிகம் நடைபெறும் பெங்களூர் (54.42), கொல்கத்தா (47.55) மற்றும் கொச்சி (41.12) போன்ற நகரங்கள் மற்ற நகரங்களை விட ஒப்பீட்டளவில் குறைவான கண்காணிப்பு கேமராக்களைக் கொண்டுள்ளன.
காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் (BPRD) அறிக்கையில் கண்காணிப்பு கேமராக்கள் 2017-18 இருந்து அதிகளவில் உயர்ந்துள்ளதை நமக்குக் காட்டுகின்றன. 2013-14 இல் காவல்துறை சார்பாகப் பொருத்தப்பட்ட மொத்த கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கை 18,000 ஆக இருந்தது. இதுவே 2019-20 இல் 4,60,000 ஆக உயர்ந்துள்ளது என இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
உலகளவில் பொருத்தப்பட்டுள்ள அதிக அளவிலான கண்காணிப்பு கேமராக்கள் குற்றங்களைக் குறைக்க உதவவில்லை என்று ஜனவரி 2020 இல் வெளியிட்ட தனது அறிக்கையில் சர்ப்ஷார்க் கூறியுள்ளது.
“CCTV காமெரா என்பது காவல்துறையின் ஒரு கண்காணிப்பு கருவியாகும். இது குற்றத்தைத் தடுப்பதற்கும் கண்டறிவதற்கும் பதிலாகச் சிறுபான்மை மக்கள் மற்றும் குறிப்பிட்ட சமூகங்கள் மற்றும் தனிநபர்களைக் குறிவைப்பதற்காகவே பயன்படுத்தப்படுகிறது என்று கிளைவ் நோரிஸ் கூறியுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது , டெல்லி காவல்துறை மற்றும் உத்தரபிரதேச காவல்துறை ஆகியவை போராட்டக்காரர்களை ஒடுக்க முகத்தின் தனித்தன்மையை ஆராய்ந்து அந்த நபர்களைக் கண்டுபிடிக்கும் முறையைப் பயன்படுத்தியுள்ளது.
Source : The Wire
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.