வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் இருவர் மூச்சுத் திணறலால் இறந்ததாகக் கூறப்படும் நிலையில், இச்சம்பவம் சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்க நடவடிக்கைகளுக்கு மாநில அரசு தொடர்ந்து அனுமதியளித்து வருகிறது என்பதையே காட்டுகிறது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
பிப்பிரவரி 16ஆம் தேதி, மேற்கு காசி மலைப்பகுதியில் உள்ள ஷில்லாங் பகுதியில் நடந்த இச்சம்பவத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஐனுதீன் அலி மற்றும் போகோவைச் சேர்ந்த சுகுர் அலி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
ஐனுதீன் அலியின் தந்தையான எசாஹக் அலி செய்தியாளர்களிடம் கூறுகையில், பிப்பிரவரி 16ஆம் தேதி இரவுதான் எனது மகன் இறந்தது எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
நாகாலாந்தில் 13 பழங்குடிகள் சுட்டுக்கொலை: வருத்தம் தெரிவித்த ராணுவம் – மாநிலம் முழுவதும் பதற்றம்
இது தொடர்பாக வைரலான காணொளி ஒன்றில், இரண்டு தொழிலாளர்கள் நிலக்கரி சுரங்கப் பணியில் இருக்கும்போது, ஆழமான பகுதிக்குச் சென்றதால், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்ததாக உள்ளூர்வாசி ஒருவர் கூறுகிறார்.
நான்கைந்து ஆண்டுகளாக அந்த சுரங்கம் மூடப்பட்டு இருந்ததாகவும், அதன் செயல்பாட்டை மீண்டும் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த இறப்பை உறுதி செய்ய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை என்று காவல்துறை கூறியுள்ள நிலையில், இந்த உயிரிழப்பிற்கு முதலமைச்சர் கான்ராட் கே சங்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக சுரங்க நடவடிக்கைகளுக்கு எதிராக போராடி வருபவரும், அப்போராட்டங்களுக்காக கடும் தாக்குதல்களை எதிர்கொண்ட சமூக செயற்பாட்டாளருமான ஆக்னஸ் கர்ஷிங் கூறுகையில், “மாநில அரசு பொய் சொல்லியே எல்லோரையும் ஏமாற்றுகிறது. மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். அதிகமான மக்கள் இறக்க வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “இது குறித்து தங்களுக்கு ஒரு அறிக்கை தேவைப்படுகிறது என்று அரசு கூறுகிறது. ஆனால், ஊடகங்களில் இது குறித்து பல செய்தி அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றை விசாரிக்க மாட்டார்களா? அரசாங்கம் என்பது ஒரு தனிநபருடைய சொத்தோ அல்லது அரசியல் கட்சியின் சொத்தோ அல்ல. அவர்கள் மக்களுக்குப் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளனர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஞ்ஞான ரீதியான சுரங்கத்தை மட்டுமே தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதித்துள்ளது. ஆனாலும், ஆபத்தான முறையில் எலி துளையிடுவது போலான சுரங்கங்கள் (Rat-hole mining) மேகாலயாவில் பரவலாக செயற்பாட்டில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
இந்த சுரங்க வேலைகளுக்காக தினசரி ஊதியம் 2,000 ரூபாய் தொடங்கி 3,000 ரூபாய் வரையில் வழங்கப்படுவதால், வடகிழக்கு மாநிலங்களில் இருந்து, குறிப்பாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மேகாலயாவில் உள்ள சுரங்கங்களில் பணியில் சேர்கிறார்கள்.
Source: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.