மருத்துவர்கள் எடுக்கும் உறுதிமொழியான ஹிப்போக்ரடிக் உறுதிமொழிக்கு பதிலாக ‘சரக் ஷபத்’ என்ற உறுதிமொழி மாற்றப்பட்டுள்ளதற்கு இந்திய மருத்துவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அண்மையில், பட்டதாரி மருத்துவர்கள் எடுக்கும் உறுதிமொழியான ஹிப்போக்ரடிக் உறுதிமொழி வழக்கம் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், ‘சரக் ஷபத்’ என்ற உறுதிமொழியை எடுக்க தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டது.
ஆயுர்வேதத்தின் தந்தை என அழைக்கப்படும் மகரிஷி சரக்கின் பொன்மொழிகளை மருத்துவர்கள் உறுதி மொழியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மிகவும் பரவலாக அறியப்பட்ட மற்றும் பின்பற்றப்படும் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட ஹிப்போக்ரடிக் உறுதிமொழியானது, மருத்துவத்தின் தந்தை என போற்றப்படும் ஹிப்போகிரட்டீஸால் எழுதப்பட்டது.
இந்நிலையில், மூன்று லட்சம் மருத்துவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்தியாவின் மிகப் பெரிய மருத்துவர்கள் சங்கமான இந்திய மருத்துவர்கள் சங்கமானது தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த முடிவை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தவறான வழிகாட்டல் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது.
பிப்பிரவரி 20 அன்று, இந்திய மருத்துவர் சங்கத்தின் பிரதிநிதிகள் ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து, இது குறித்து பேசவுள்ளனர்.
“பிப்ரவரி 20ஆம் தேதி அமைச்சரைச் சந்திக்கிறோம். உறுதிமொழியை மாற்ற வேண்டாம் என்று வலியுறுத்துவோம். கொரோனா தொற்றுக்கு எதிரான போரில், மருத்துவர்கள் முக்கிய பங்களித்து வரும் இச்சூழலில், இதுபோன்ற சர்ச்சை தேவையில்லை என்பதை அவருக்குப் புரிய வைப்போம். எங்கள் கோரிக்கையை அவர் புரிந்துகொள்வார் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்று இந்திய மருத்துவர் சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் சகஜானந்த் பிரசாத் சிங் கூறியுள்ளார்.
எய்ம்ஸ் பயிற்சி மருத்துவர்கள் சங்கத்தின் தலைவரான டாக்டர். ஹரிஜித் பாட்டி ஸ்கூப்வூப் (Scoopwhoop.com) இணையதளத்திடம் பேசியபோது, “இச்செயலானது எல்லாவற்றையும் காவி நிறமாக்கும் முயற்சி. ஆர்எஸ்எஸ் தன்னை மேற்கத்திய கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள் என்று காட்ட விரும்புகிறது. இந்திய மருத்துவத்தை பரவலாக்குவதோ அல்லது ஆயுர்வேதத்தின் நன்மைகள் பரப்புவதோ தவறில்லை. ஆனால், அவர்கள் மேற்கத்திய மருத்துவத்தின் முக்கியத்துவத்தை முற்றிலும் குறைத்து காட்ட விரும்புகிறார்கள். இது முற்றிலும் தவறானது” என்று கூறியிருந்தார்.
‘சட்டபேரவையில் ஆபாச படம் பார்க்க கற்பதை தவிர, ஆர்எஸ்எஸ்ஸில் கற்க எதுவுமில்லை’- எச்.டி.குமாரசாமி
இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர். ஜி.ஆர்.ரவிந்திரநாத், “நீ ஆசைப்பட்டது வெற்றியடைய, சொத்துக்களும் புகழும், இறப்பிற்குப் பிறகு மருத்துவன் என்ற முறையில் சொர்க்கமும் கிடைத்திட, பசுக்கள் தொடங்கி எல்லா உயிர்கள் மற்றும் பிராமணர்கள் நலனுக்குகாக வழிபாடு (pray) செய் என்ற வரிகள் சரகர் உறுதி மொழியில் வருகிறது. அதை ஏன் மருத்துவ மாணவர்கள் உறுதி மொழியாக ஏற்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, மருத்துவத் துறையில் சரக் ஷபத் உறுதிமொழியை அறிமுகப்படுத்தப்படுவது தீவிரமாகி வருகிறது என்று ஸ்கூப்வூப் இணையதளம் தெரிவித்திருந்தது.
Source: New Indian Express, Scoopwhoop.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.