தாஜ்மகால் கட்டப்பட்டுள்ள இடம் ஜெய்ப்பூர் அரச குடும்பத்திற்கு சொந்தமானது, பின்னர் அதை ஷாஜகான் அபகரித்துக் கொண்டார் என்று ஜெய்ப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான தியா குமாரி தெரிவித்துள்ளார்.
நிலம் அரச குடும்பத்திற்கு சொந்தமானது என்பது ஜெய்ப்பூர் அரசர் ஜெய் சிங்கின் குடும்பத்திடம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
தாஜ்மகாலில் இந்து கடவுள்களின் சிலைகள் உள்ளதா என்பதை அறிய அங்குப் பூட்டப்பட்டுள்ள 20 அறைகளை திறந்து சோதனையிடுமாறு இந்தியல் தொல்லியல் துறைக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் உத்தரவிடக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தியா குமாரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உண்மை என்ன என்பதை அறிய 22 அறைகளையும் திறக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
”தாஜ்மகால் கட்டப்படுவதற்கு முன்பாக அங்கு என்ன இருந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதை தெரிந்துகொள்ள மக்களுக்கு உரிமை உள்ளது. நிலம் தொடர்பான ஆதாரங்கள் ஜெய்ப்பூர் அரச குடும்பத்திடம் உள்ளன. தேவைப்பட்டால் அது வழங்கப்பட்டும்” என்று தியா குமாரி தெரிவித்துள்ளார்.
”நிலத்திற்கு பதிலாக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எவ்வளவு வழங்கப்பட்டது, அது ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லையா. இதை என்னால் சொல்ல முடியாது. ஏனென்றால் எங்கள் நூலகத்தில் இருக்கும் பதிவேடுகளை நான் ஆய்வு செய்யவில்லை” என்று கூறியுள்ளார்.
பதிவுகளை பார்த்த பிறகே விசயம் தெளிவாகும் என்று தெரிவித்துள்ள தியா, அப்போது (தாஜ்மகால் கட்டப்பட்டபோது) நீதித்துறை இல்லாததால் முறையீடு செய்ய முடியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
அறைகளைத் திறக்க மனுத் தாக்கல் செய்யப்பட்டிருப்பது தொடர்பாக கூறியுள்ள அவர், “அறைகளை திறந்து விசாரணை நடத்த வேண்டும் என்பது சரியான கருத்து” என்று குறிப்பிட்டுள்ளார்.
“அந்த அறைகள் ஏன் பூட்டப்பட்டுள்ளன என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். தாஜ்மஹாலுக்கு முன்பு அங்கு ஏதாவது இருந்திருக்கலாம், கோயிலாக இருக்கலாம். முன்பு என்ன இருந்தது என்பதை அறிய மக்களுக்கு உரிமை உள்ளது,” என்று தியா குமாரி கூறியுள்ளார்.
”நான் கேட்டதையும், கற்றதையும் வைத்து நான் இதை சொல்கிறேன். நான் பதிவேடுகளை படிக்கவில்லை. தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் பதிவேடுகளை வழங்கலாம். பதிவேடுகளை ஆராய்ந்த பின்னரே ஒரு முடிவுக்கு வர முடியும்.” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை, பாஜகவின் அயோத்தி பிரிவின் ஊடகப் பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிங், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், “தாஜ் மகாலில் பூட்டப்பட்டுள்ள 22 அறைகளைத் திறந்து அவற்றுள் என்ன இருக்கிறது என்பதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
‘தாஜ்மகாலுக்கு ராம் மகால் என்று பெயர் மாற்றப்படும்’ – பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு
முன்னதாக அக்டோபர் 20, 2017, தாஜ்மகால் கட்டப்பட்டிருக்கும் இடம் ஜெப்பூர் அரச குடும்பத்திற்கு சொந்தமானது, அதை முகலாய மன்னர் ஷாஜகான் அபகரித்துக் கொண்டார் என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான ஊடகங்களை விரைவில், ஊடகத்தில் வெளியிடப்போவதாக அறிவித்திருந்தார். ஆனால், தற்போது வரை ஆதாரங்களை அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Source: LiveMint, Outlook India
இலங்கையில் நடப்பது இது தான்? | Tu Senan Interview | Mahinda Rajapaksa House Attack | SriLanka Crisis
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.