Aran Sei

மாப்ளா போராட்ட வரலாறும் ஒன்றிய அரசின் வரலாற்று இருட்டடிப்பும் – பகுதி 4

மாப்ளாக்களின் கோபம் தாங்கள் தங்களுடைய எதிரிகளாக முதலில்  அடையாளங்கண்ட  ஐரோப்பியர்கள் மற்றும் இந்திய அதிகாரிகள் மீதும் பின்னர் இந்து ஜான்மிகள் மற்றும் கந்துவட்டிக்காரர்கள் மீதும்தான் இருந்தது. பின்னர் அது பொதுவான ‘உயர்சாதி’ இந்துக்கள் மீதான எதிர்ப்பாகத் திரும்பியது. ஏனெனில் தங்களுடைய போராட்டத்தை காட்டிக் கொடுத்ததற்காகவும், ‘கிளர்ச்சியை’ அடக்க  அதிகாரிகளுக்கு உதவியதற்காகவும் பழி வாங்குவதற்கானதாக அது மாறியது. இதுதவிர, பெரும்பாலான காவல்துறையினர் இந்துக்களாக இருந்ததால், மாப்ளாக்களின் எதிர்ப்பு இயல்பாகவே காவல்துறையினரின் இணை மதக்காரர்களுக்கு எதிரானதாக இருந்தது. அரசுக்கு ஆதரவாக இருந்த மாப்ளாக்களும் அடிக்கடி இலக்காயினர். கலவரக்காரர்கள் இராணுவத்தையும், காவல்துறையினரையும் தாக்கினர், அரசு மற்றும் தனியார் சொத்துக்களை கொள்ளை அடித்தனர், அவற்றிற்கு தீ வைத்தனர்.  ‘மனஸ்’ மற்றும் ‘ கோவிலகம்களை’ ( உயர்சாதியினரின் வீடுகள்) தரை மட்டமாக்கினர், வருவாய்த் துறை பதிவேடுகளை அழித்தனர், தொலை தொடர்பை தடை செய்தனர்,” என்கிறது 1921 ம் ஆண்டின் பாராளுமன்ற ஆவணங்கள். அவர்கள் சிவில் நிர்வாகத்தை அப்பட்டமாக நிறுத்தினர்.

அந்த எழுச்சி 1921, ஆகஸ்ட் 20 ல் ஆரம்பித்து ஆறு மாதங்கள் நீடித்தது. கலவரப்பகுதிகளின் அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்ட மேலும் ஆறு மாதங்களாயின. மாப்ளாக்கள் எழுச்சியின் உள்ளுணர்வைத் தாங்கி, தங்கள் சொந்த அரசாங்கத்தை முஸ்லீம் விவசாயிகளிடம் யாரும் எதிர்பார்த்திராத அளவு  நீண்ட காலத்திற்கு நடத்தினர். அரசு கூர்க்கா படையினரைக் கொண்டும், இராணுவச் சட்டத்தை அமலாக்கியும் ‘போராட்டத்தை’ அடக்கியது. ஆறு மாதங்களுக்கு மேல் நீடித்த அந்த எழுச்சி இறுதியில் 1922, ஜனவரி 6 ம் நாள் வாரியங்குன்னத்து குஞ்சாம்மது ஹாஜியை  கைப்பற்றி தூக்கிலிட்டப் பிறகுதான் நிலைகுலைந்தது.  எனினும் 1922 ஆகஸ்ட் இறுதி வரை அதன் கடைசி தலைவர்களை அரசால் பிடிக்க இயலவில்லை என்கிறார் ஹிட்ச்காக். 1857 முதல் விடுதலைப் போராட்டத்திற்குப் பிறகு ஆங்கிலேயர்கள் எதிர்கொண்ட மிகப் பெரிய எழுச்சி இது.

அரசு செயலாளருக்கும் அரசப்பிரதிநிதிக்கும் இடையே நடந்த குறிப்பாணைகள் உள்ளிட்ட அதிகாரபூர்வ ஆதாரங்களின்படி 1921 எழுச்சியில் இறந்த போராளிகளின் இறுதி எண்ணிக்கை 2,337. காயமடைந்தவர்கள் 1652. 45,404 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் 262 பேர் தூக்கிலிடப்பட்டது உட்பட இறந்தோர் எண்ணிக்கை சுமார் பத்தாயிரம் என்றும், 50,000 பேர் சிறை வைக்கப்பட்டனர் என்றும், 20,000 பேர் நாடு கடத்தப்பட்டனர் என்றும் மேலும் 10,000 பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கின்றன. இதில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் ஆயுத மோதல்களில் உயிரிழந்தனர் என்று ரோலண்ட் இ. மில்லர் ‘கேரள மாப்ளா முஸ்லீம்கள்: இஸ்லாமிய போக்கு ஒரு ஆய்வு ‘ என்ற 1976 ல் தான் வெளியிட்ட  ஒரு நூலில்  குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக மாப்ளா சிறைக் கைதிகளை கடத்துவதற்கு சரக்குத் தொடர்வண்டியை பயன்படுத்தியது மிகவும் கொடூரமானதாகும். அரசு செயலாளருக்கும் அரசப்பிரதிநிதிக்கும் இடையிலான குறிப்பாணைகளில் உள்ள விவரங்களின்படி,  அவ்வாறு அனுப்பப்பட்ட நூறு போராளிகளில் 64 பேர் மூச்சுத்திணறல், வெப்பம் மற்றும் உடற்சோர்வு காரணமாக 18*9*7.5 அடி அளவு கொண்ட சரக்குப் பெட்டியிலேயே உயிரிழந்தனர். பின்னர் நடந்த சட்டமன்ற விவாதத்தில் ஆங்கில அரசு எழுச்சியின் போது இறந்த மாப்ளாக்களின் எண்ணிக்கை 2,339 என்றும்,1,652 பேர் காயமடைந்தவர்கள் என்றும், 5,995 பேரை கைப்பற்றியதாக வும், 39,348 பேர் இராணுவம் அல்லது காவல்துறையிடம் சரணடைந்தததாகவும்  புதிய கணக்குத் தெரிவிக்கப்பட்டது.   1923 ஏப்ரலில் சிறைக் கைதிகளின் எண்ணிக்கை 45,404, மேலும் 7,900 போராளிகள் அந்தமானுக்கு அனுப்பப்பட்டனர். இந்த 7,900 பேரும் இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கிய நினைவுகளிலிருந்து புறக்கணிக்கப் பட்டனர். இந்தப் போராட்டத்தில் உயிரை இழந்தவர்களில் பெரும்பாலானோர் அறியப்படாத தெரியாத மாப்ளாக்கள்‌.  எனவே, மாப்ளா தியாகிகளின் வாழ்க்கை வரலாற்றுப் பதிவை தியாகிகளின் அகராதியின் ஐந்தாம் தொகுதியில் சேர்ப்பதன் முக்கிய நோக்கம், மிகவும் அரிதாக அறியப்படும் மாப்ளா தியாகிகளை இந்திய மக்களிடையே பரந்த அளவில் கொண்டு செல்வதே ஆகும்.

வரலாற்று ஒழுக்கத்திற்கு அச்சுறுத்தல்

இந்திய பொது மக்களிடம் அறியப்படாத மாப்ளா தியாகிகளின் குரலை முன்னிறுத்தும் முயற்சிதான் அவர்களை தியாகிகளின் அகராதியில் சேர்த்ததற்கான ஒரு காரணம். அந்தத் தியாகிகளின் மதம் அல்லது பிற அடையாளங்களில் ஒருபோதும் கவனம் செலுத்தப்படவில்லை. இந்த வாழ்க்கை வரலாற்று உள்ளீடுகள் தியாகிகளின் பங்கைக் கூறுவதுடன், அவர்களது போராட்டத்தை எந்த ஒரு கருத்தியலுடனோ அல்லது அரசியல் நிகழ்ச்சி நிரலுடனோ இணைக்காமல் பதிவு செய்தன. அகராதியின் முதன்மையான நோக்கம் உள்ளூரைச் சேர்ந்த, கீழ் மட்டத்தில் உள்ள அறியப்படாத தியாகிகளை, அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சுயவிருப்பத்தின் அடிப்படையில் இந்திய மக்களுக்கு அந்த தியாகங்களை செய்துள்ளனர என்பதை சுட்டிக்காட்டுவதே ஆகும்.

வரலாற்றாசிரியர்களும், சமூக அறிவியலாளர்களும், “தியாகம்” என்ற சொல் வலிமைமிக்க உணர்வு ரீதியான, அரசியல் ரீதியான, சமூக ரீதியானப்  பொருளைக் கொண்டுள்ளது எனக் காட்டி உள்ளனர். சுதந்திரப் போராட்ட இயக்கத்திற்காகச் செய்யப்பட்ட எந்தவிதமான தேர்ந்தெடுக்கப்பட்ட தியாகத்தையும் கணக்கிலிருந்து புறக்கணிக்க முடியாது என்ற உண்மை நிலையில், இந்திய விடுதலைப் போரில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மாப்ளாக்கள் வீரர்களாக அல்லது தியாகிகளாக அல்லது இரண்டுமாக  விவரிக்கப்பட வேண்டாமா?

தியாகத்தை கேள்வி கேட்கும் போது, நாம், தியாகி என்பவர் யார்? என்று கேட்கிறோம். சிலருக்கு, தியாகியும், தியாகமும் தனித்தனியாக ஆய்வு செய்ய வேண்டிய புறநிலை அனுபவ யதார்த்தங்கள். அவை பிற்கால சமூகங்களால் உருவாக்கப்பட்டதே என்றும், அவர்களின் உயிர்த்தியாகம் சமூக அரசியல் சூழலை முழுமையாக சார்ந்துள்ளன என்றும் அவர்கள் கருதுகிறார்கள். மற்றவர்கள், அவை முதன்மையாக பின்னர் வந்த சமூகத்தினரால் உருவாக்கப்பட்டவை என்பதுடன் முற்றிலும் அவர்கள் இறக்கும் போது இருந்த அரசியல்- சமூக சூழல், குறிப்பாக அவர்கள் உயிர் துறக்கும் போது உருவான சூழல் மற்றும் அவை சமூகத்தின் குறிப்பிடத்தக்க நினைவுகளாக அவை மாறி விடுவதை அடிப்படையாகக் கொண்டது என்கிறார்கள்.

இருப்பினும், மாப்ளா தியாகிகள் பற்றிய தற்போதைய சர்ச்சைகள் விடுதலை இயக்கத்தை விட காலனிய அரசுக்கு நெருக்கமாக நின்றிருந்த ஒரு வகையான அரசியலிலிருந்து வெளிவரும் தியாகிகள் மற்றும் வரலாற்று ஒழுக்கம் ஆகிய இரண்டும் எதிர்கொள்ள வேண்டிய அச்சுறுத்தலைக் காட்டுகின்றன. இதில் காலனிய எதிர்ப்பு/ நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு இயக்கம், விவசாயிகளின் அதிருப்தி மற்றும் காவல்துறையின் கொடுமைகள் ஆகியவற்றை  எதிர்கொண்ட எந்த ஒரு தியாகியையும், அவருடைய இன்னலையும், அனுபவங்களையும் அழிப்பது என்பது ஒரு முழுமை அடையாத, ஒருபக்கச் சார்பான வரலாற்றை சிதைக்கும் வாய்ப்புள்ள சித்தரிப்பாகும். இதற்கும் மேலாக, ஒரு ஒற்றை இந்து பாதிக்கப்பட்ட கதை வீணானது. ஆனால் எழுச்சியின் முக்கியமான, பல வரலாறுகள் கட்டாயமானவை  மட்டுமல்ல அவை அறிவார்ந்த ஈடுபாட்டுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என எதிர்பார்க்கப் படுகிறது.

 www.the wire.in இணைய தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.

எழுதியவர்: முகமது நியாஸ் அஷ்ரப் 

மாப்ளா போராட்ட வரலாறும் ஒன்றிய அரசின் வரலாற்று இருட்டடிப்பும் – பகுதி 4

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்