கர்நாடகாவில் பஜ்ரங் தளத்தை சேர்ந்த 19 வயதான பூஜா என்ற பெண் ‘ஹிஜாப்’ அணிய விரும்புபவர்களை இனப்படுகொலை செய்வோம் என்று மிரட்டல் விடுத்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
பிப்ரவரி 25 அன்று வெளியான அந்த காணொளியில், “இந்தியர்கள் தண்ணீர் கேட்டால் ஜூஸ் கொடுப்பார்கள். பால் கேட்டால் மோர் கொடுப்பார்கள். ஆனால், இந்தியாவிற்குள் ஹிஜாப் அணிய வேண்டும் என்று இஸ்லாமியர்கள் கேட்டால் அவர்களை சிவாஜியின் வாளால் வெட்டுவோம்” என்று பூஜா பேசியுள்ளார்.
பிப்பிரவரி 20 அன்று கர்நாடகாவின் ஷிவமொக்காவில் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த ஹர்ஷா கொலை செய்யப்பட்டார். இதன் பின்னர் இந்து வலதுசாரி அமைப்புகள் இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளைச் சேதப்படுத்தியதோடு, அவர்களின் வாகனங்களையும் தீ வைத்து எரித்தனர். இதனை அடுத்து ஹர்ஷாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்ட இரங்கல் நிகழ்வில்தான் பூஜா இத்தகைய இனப்படுகொலைக்கு அழைப்பை விடுத்துள்ளார்.
இஸ்லாமியர்களின் வாக்குரிமையை பறிக்க வலியுறுத்திய பீகார் பாஜக எம்எல்ஏ: எதிர்க்கட்சிகள் கண்டனம்
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்ற ‘தரம் சன்சத்’ நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இனப்படுகொலை அழைப்பு விடுக்கப்பட்டது பெரும் சர்ச்சையான நிலையில், கர்நாடகாவில் உள்ள இந்து வலதுசாரி அமைப்பான பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த 19 வயது பெண் அதே போன்றதொரு அழைப்பை விடுத்துள்ளார்.
“இது காவி இந்தியா. அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியாவிட்டால், எங்களுக்கு ஒரு மணி நேரம் அவகாசம் கொடுங்கள் அதற்குள்,ஹிஜாப் அணிந்த இந்த 6 மாணவிகளுடன் ஹிஜாப் அணிந்த 60,000 பேரைத் துண்டு துண்டாக வெட்டுவோம்” என்று ஹிஜாப் தடைக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த 6 மாணவிகளைக் குறிப்பிட்டு பூஜா மிரட்டுகிறார்.
“எனக்கும் இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் நான் எந்த வெறுப்பும் இல்லாமல் பழகி வருகிறேன். ஆனால் ஹிஜாப் விவகாரத்தை வைத்து 6 தேச விரோத மாணவிகள் இந்திய நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள். இந்த 6 பேர் 60,000 தேச விரோதிகளாக மாறினால் கூட நாங்கள் அவர்களைக் கைது செய்வோம்” என்று தி வயர் செய்தி நிறுவனத்திடம் பூஜா கூறியுள்ளார்.
‘இந்துப் பெண்களை இஸ்லாமியர்கள் பார்த்தால் வெட்டுவேன்’ – பாஜக எம்.எல்.ஏ., ராகவேந்திரா சிங்
விஜயபுரா பகுதியை சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஸ்ரீநாத் பூஜாரி சங்கப்பா, பூஜாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். “இந்த வகையான வெறுப்பு பேச்சு சரியானது அல்ல. ‘ஒருவரை நோக்கி வெட்டுவோம், கொல்வோம்’ என்று பேசுவது எல்லாம் பிரச்சினைகளைத் தான் உருவாக்கும்” என்று தி வயர் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று பூஜா பேசும் காணொளி சமூக வலைத்தளங்களில் இருந்த போதிலும், பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த பூஜா மீது இதுவரை எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை.
Source : the wire
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.